Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூலை 12, 2011

நினைவாற்றலை மேம்படுத்துவது எப்படி?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.


நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன.

அவை:
1. தன்னம்பிக்கை 2. ஆர்வம் 3. செயல் ஊக்கம் 4. விழிப்புணர்வு
5. புரிந்துகொள்ளல் 6. உடல் நலம்.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். 1. தன்னம்பிக்கை (Self Confidence)

“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2. ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)

இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

4. விழிப்புணர்வு (Awareness)

மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்?... என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

நண்பர்களே!

ஓர் அறிவிப்பு : “இன்னும் ஒரு மணி நேரத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்தி உங்கள் இடம் நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். நீங்கள் தப்பிச் செல்வதாக இருந்தால் எந்த வழியில் செல்வது என்று சொல்கிறேன். கேட்டுக்கொண்டு அந்த வழியில் சென்றால் நீங்கள் தப்பிச் சென்று விடலாம்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் அவர் சொல்கின்ற வழி உங்களுக்கு மறந்துவிடுமா?

மொத்தத்தில் நினைவாற்றல் நன்றாக இருக்க மனம் ஒரு முக்கிய காரணமாகிறது. மனம் ஆர்வமானதாக உற்சாகமுள்ளதாக, விழிப்புநிலை உள்ளதாக, செயலை வெற்றியாக்க வேண்டும் என்ற தீவிரத் தன்மை உள்ளதாக இருந்தால் நினைவாற்றல் நன்கு இருக்கும். எதுவும் மறந்து போகாமல் ஒவ்வொரு செயலும் வெற்றியடைய ஒரு திருக்குறளின் மூலம் வள்ளுவர் வழிகாட்டுகிறார்.

“பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்”

அதாவது ஒரு செயலுக்குப் போகும் முன்பு கீழ்க்கண்டவை சரியாக உள்ளதா என்று கவனித்து விட்டுச் சென்றால் எதுவும் மறக்காது.

1. பொருள் : தேவையான பணம்.

2. இடம் : எங்கு செல்கிறோம்? (முகவரி, தொலைபேசி எண், செல்லும் வழி)

3. காலம் : எவ்வளவு நேரமாகும், எப்பொழுது அலுவலகம் அல்லது கடை திறந்து செயல்படும் நேரங்கள், விடுமுறையா அல்லது வேலை நாளா? முதலிய செய்திகள்.

4. கருவி : எந்த வாகனம், எடுத்துச் செல்லும் துணைக் கருவிகள் (பேனா, பேங்க் சென்றால் செக் புக், ஹாஸ்பிடல் என்றால் டாக்டர் பைல்… முதலியவை)

5. வினை : எப்படிச் செய்வது? யாரிடம் தெரிந்து கொள்வது என்பது போன்ற அந்தச் செயலை முடிக்க உதவும் விபரங்கள்.

நினைவாற்றலை வளர்த்து வெற்றியடைய அன்பு வாழ்த்துக்கள்!



http://kumarinadu.net

கருத்துகள் இல்லை: