வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், திட்டமிடல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.
“நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது, இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும்,” என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும், தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும்.
இருந்தாலும் "பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்" (coronal mass ejections, CMEs) மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்ற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
Technology Newlankasri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக