வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’’ என்பது தமிழ்ப் பழமொழி. ‘‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’’ என்று கூறுகிறார் திருமூலர். இதைவிட ஒருபடி மேலே ஒன்று திருவள்ளுவர் கூறுகையில், ‘‘ஒருவன் தன் ஆற்றலுக்கு மிகுதியாக உணவு உண்டால் அவனுக்கு பலவகையான நோய்கள் உண்டாகும்’’ என்று கூறுகிறார்.
‘‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’’
பசித்த பின்னரே உண்ண வேண்டும். அதுவும் அளவோடு உண்ண வேண்டும். இவ்விரு விதிகளையும் செயலில் கடைப்பிடித்தால் மனிதனின் ஆயுள் நீளும் என்பது உறுதி. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இதுபோன்ற வழிகளை பின்பற்றுவதற்கு நேரமும் இல்லை. குடும்ப சூழ்நிலையும் அமைவதில்லை.
இன்றைய இயந்திரக்கால வாழ்க்கையில் என்ன உண்கிறோம் எப்படி உண்கிறோம் என்பது உண்பவர்களுக்கே தெரிவதில்லை. காரணம் வேலைக்கு செல்லும் வேகத்தில் எதையோ வாயில் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டு போகிறோம். இதன் விளைவு மனித உடலில் பல நோய்கள். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு...? உணவை கட்டுப்பாடோடு உண்டால் நோய் நம்மை நெருங்காது. இதைப்பற்றி இன்னும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் உணவு நிபுணர் காயத்திரி அவர்களை குமுதம் ஹெல்த்திற்காக சந்தித்தோம்...
உடல் பருமன என்று சொல்லப்படும் ஓபிசிடி ஏற்பட காரணம் என்ன?
பொதுவாக நாம் உண்ணும் உணவின் அளவு நமக்கு தெரிந்தால்தான், நமது உடலையும் கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியும். அப்படி இல்லாமல் கொழுப்பு சத்துள்ள உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுவதே உடல் பருமனுக்குக் காரணம். அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே இருப்பதும் உடல் பருமனுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டும்?
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று நினைத்தாலே நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும். வள்ளுவப் பெருந்தகை தனது குறளில்...
‘‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு’’
ஒருவன் தன் வயது, உடல் வலிமை, ஜீரண உறுப்புகளின் ஆற்றல், கபிலம் (கோடைகாலம், மழைக்காலம்), பொழுது (காலை, மதியம், இரவு) சுவை ஆகியவற்றுடன் சிறிதும் மாறுபாடு இல்லாதவாறு முற்றிலும் பொருத்தமான உணவை மட்டுமே உண்டால் அவன் உடலுக்கு எந்த நோயாலும் துன்பம் ஏற்படாது. அதுமட்டுமல்ல எப்பொழுதுமே உடல் மெலிந்து போகாமலும் பருமனாகாமலும் கட்டுக்கோப்பாக இருக்கும்.
எந்தவகை உணவுகள் ஓபிசிடியை உண்டாக்குவதைத் தடுக்கும்?
உடல் பருமன் என்று சொல்லப்படும் ஓபிசிடியை வராமல் தடுக்க காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதசத்து, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகமாக நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அளவோடு சேர்த்து கொண்டால் உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
உடல் பருமன் ஏற்பட்டால்
எந்தெந்த உபாதைகள் ஏற்படும்?
நமது வயதுக்கு ஏற்ற எடையுடன் உடல் இருக்குமேயானால் எந்த நோயும் நம்மை அண்டாது. அப்படி இல்லாமல் உடல் எடை கூடிவிட்டால் இதய நோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. எனவே பசித்த பின்னரே உணவை உட்கொண்டு வந்தால் உடலுக்கு எந்த உபாதைகளும் இல்லை.
உடல் பருமனால் பெண்களுக்கு கருச்சிதைவு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறுகிறார்களே?
மாறிவரும் வாழ்க்கை மாற்றங்களில் பெண்களுக்கு உடல் உழைப்பு என்பது குறைவுதான். அந்த கபிலத்தில் வீட்டு வேலைகளே நல்ல உடற்பயிற்சியாக இருந்தது. இப்போது உள்ள சூழ்நிலையில் கணவன் மனைவி இருவருமே அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் என்று பெண்களுக்கு வேலை பளுவை குறைக்க பல சாதனங்கள் வந்துவிட்டதால் பெண்களுக்கு உடல் பருமன் அதிக அளவில் ஏற்படுகிறது. உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. நல்ல உணவுகள் உட்கொண்டால் என்றென்றும் ஆரோக்கியமாக வாழலாம்..
http://www.kumudam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக