அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.
மனித உடலில் 108 வர்மப் புள்ளிகளாக அதாவது உயிர்நிலை சுவாசமாக ஒடுங்கியுள்ளது. இந்த வர்மப் புள்ளிகளின் ஏதாவது ஒன்று பாதிக்கப் படுமானால் உடலில் நோய் உண்டாகும். இவற்றை சீர் செய்வதன் மூலம் தான் நோயைத் தீர்க்க முடியும். உதாரணமாக உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது நோயின் தாக்குதல் இருந்தாலோ அது வர்மப் புள்ளிகளை சார்ந்துதான் இருக்கும்.
சாதாரண மருத்துவர்கள் இதை அறியாமல் நோய்க்கு மட்டும் அல்லது பாதிக்கப்பட்ட இடத்திற்கு மட்டும் மருந்து கொடுத்து வந்தால் நோயோ, பாதிக்கப்பட்ட இடமோ சீராகாமல் போய் விடும். ஆனால் இதை வர்ம மருத்துவர் நாடி பரிசோதிக்கும்போதே எந்த வர்மம் பாதிக்கப் பட்டுள்ளது , எதனால் பாதிக்கப்பட்டுள்ளது, நோயின் தன்மை, வர்மப் புள்ளியின் வேகம், அதனால் ஏற்படும் பாதிப்பு இவற்றை தெளிவாக அறிந்து, அதோடு தொடர்புடைய வர்மப் புள்ளிகளையும் கண்டறிந்து நோய்க்கும், அதனால் பாதிக்கப்பட்ட வர்மப் புள்ளிகளுக்கும் சேர்த்து மருந்து கொடுப்பார். மற்ற மருத்துவ முறையிலிருந்து வர்ம மருத்துவம் முற்றிலும் வேறுபட்டது.
வர்ம மருத்துவர் நோய்க்கு உள்ளுக்குள் மருந்து கொடுத்தும் தைலங்கள் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தை நீவிவிட்டு அதை சீர் செய்தும், நோயின் ஆணிவேரையே அறுத்து விடுவார்கள். இதனால் தான் பல புரியாத நோய்கள் கூட வர்ம மருத்துவர்கள் எளிதில் கண்டறிந்து பூரண குணமடைய செய்து விடுகின்றனர்.
மனித உடம்பின் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு ஆதாரங்களின் செயல்பாடு, உயிர் நிலை ஓட்டத்தின் தன்மையைப் பொறுத்துத் தான் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பார்கள். இவ்வாறு மருத்துவம் செய்வதால் நோயை எளிதில் குணப்படுத்த முடிகிறது.
அதுபோல் வர்ம மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், இலேகியங்கள், கஷாயங்கள், தைலங்கள் அனைத்தும் மூலிகைகள் தான். அதாவது மரம், செடி, கொடி, வேர், பட்டை, பூ, விதை இவைகளிலிருந்து தயாரிக்கப்படுபவைதான்.
வர்ம மருத்துவத்தில் உலோகம், கனிமம் ஏதும் சேர்வது கிடையாது. இது வர்ம மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும். இந்த அற்புத மருத்துவ முறையை அகத்தியர் இயற்கையோடு இணைந்து தான் செயல் படுத்தியுள்ளார். பக்க விளைவுகள் ஏதும் இல்லாத இயற்கை நிறைந்த மருத்துவம் தான் வர்ம மருத்துவம்.
நரம்பு, எலும்பு, தசை, தமணி, இரத்த நாளங்கள் அனைத்தும் செம்மையாக செயல்பட வர்மப் புள்ளிகள் தான் ஆதாரமாகின்றன.
இதை அழகுத் தமிழில் அகத்தியர் பெருமான் வர்ம பரிகார மருத்துவ முறையில் அற்புதமாக எழுதியுள்ளார். வர்ம கண்ணாடி என்ற வர்மம் சார்ந்த நூலில் உடலின் உறுப்புகள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக கண்டறிந்து அவற்றின் அளவுகள், அதன் செயல்பாடுகள், அவை எதனால் பாதிக்கப் படுகின்றன, அதற்கு வர்ம மருத்துவ முறையில் தீர்வு என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். பொதுவாக மனித உடலில் ஏதாவது வர்மம் பாதிக்கப்பட்டால் இனம் புரியாத நோய்களையும், மனத் தாக்குதல்களையும் ஏற்படுத்தும். பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் வரும் நோய்கள், மார்புப் பகுதியில் வரும் நோய்கள், கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலி இவைகளெல்லாம் வர்மம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டவை. இதனால் மன உளைச்சல், தூக்கமின்மை, போன்றவை ஏற்படும். உடலில் பித்தம் அதிகரித்து ஏதோ ஒரு வகையில் மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டே இருக்கும். உடலின் பல பகுதிகளில் நீர் கோர்த்து நோய்களை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட நோய்களைத் தீர்க்க பாதிக்கப்பட்ட வர்மப் புள்ளிகளை சரி செய்ய வேண்டும். ஆக வர்ம மருத்துவம், நவீன உலகத்தில் விஞ்ஞானக் கருவிகளால் கண்டறிய முடியாத நோய்களைக் கூட குணப்படுத்தக்கூடிய மருத்துவம் குறிப்பாக கழுத்துக்கு மேல்பகுதியை தாக்கும் நோய்களை அகத்தியர் தனிப்பிரிவாகவே குறிப்பிட்டுள்ளார். கபால சூலை நீர், கருநீரகச் சூலை நீர் என தலையில் ஏற்படும் பலவித நீர்களைப் பற்றி வர்ம மருத்துவம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதனால்தான் மற்ற மருத்துவத்தை விட வர்ம மருத்துவம் வேறுபட்டு நிற்கிறது.
இத்தகைய காலத்தால் அழியாத வர்ம மருத்துவம் ஒரு மருத்துவ அறிவு சார்ந்த அற்புத படைப்பாகும்.
இந்த வர்மத்தை இறைபணியோடு செயல் படுத்துபவர்களே உண்மையான வர்ம மருத்துவர் ஆவார்கள்.
http://www.nakkeeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக