Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

வாஸ்து 01

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
வீட்டின் வடக்குப் பகுதியில் ஜன்னல்கள் வைப்பது அவசியம். வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகள் ஜன்னல் வைக்க ஏற்றவை. குறிப்பாக, ஈசானிய மூலையில் ஜன்னல் வைத்தாக வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அப்போதுதான் அந்த வீடு விருத்தி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் பிராண வாயு அதிகமாகக் கிடைக்கிறது. எனவே வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைத்தால் அதன் காரணமாக வீட்டில் பிராண வாயுவின் விகிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருப்பர். 


இதன் காரணமாகவே பூஜை அறை, பெரியவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றை ஈசானிய மூலையில் பழங்காலத்தில் அமைத்தனர்.

சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு. 

தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது நல்லது. காரணம் தென்மேற்கு திசையை குபேர மூலை (நைருதி) என்று வாஸ்து கூறுகிறது. அங்கு திறப்புகள் (ஜன்னல்கள்) இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். 


பொதுவாக ஜன்னல்களுக்கு என்று எண்ணிக்கை எதையும் வாஸ்து சாஸ்திரம் தனியாக வகுக்கவில்லை. பழங்காலத்தில் எந்த விடயத்திலும் ஒற்றைப்படையை பயன்படுத்தியதால் வீடுகளில் வைக்கப்படும் ஜன்னல்களின் எண்ணிக்கைக்கும் அதனையே மக்கள் பின்பற்றினர். எனவே எண்ணிக்கையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.
மேற்கு வாசல் வீட்டில் இருந்தாலே திருமணம் நடைபெறாது என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உதாரணமாக மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் மேற்கு பார்த்த வீட்டில் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். துலா ராசிக்காரர்களுக்கும் மேற்கு வாசல் பாதிப்பை ஏற்படுத்தாது.
அதிலும், முதல், 2வது அல்லது 3வது மாடியில் உள்ள மேற்கு வாசல் வீடுகள் சிறப்புப் பலன்களை மேம்படுத்தும்.
வாஸ்துவைப் பொறுத்தவரை இரண்டு விஷயம் முக்கியம். ஒன்று பூமி. பூமி சிறப்பாக இருந்துவிட்டால் வேறு எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டாம். மற்றொன்று கட்டிய வீடு. எல்லாருக்கும் அக்னி மூலம் தென்கிழக்குதான் என்றாலும் எல்லோருக்குமே தென்கிழக்கு திசையிலேயே சமையலறை அமையாது. அவரவர் ஜாதகத்தை வைத்து சிலவற்றை மாற்றி அமைக்க முடியும்.

சிலவற்றை மட்டும் மாற்றி அமைத்தால் நல்ல பலன் கிட்டும். சில பரிகாரங்களும் உண்டு. அதனால் சில பிரச்சினைகளை நிவர்த்தி செய்யலாம். 

இதெல்லாம் ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்து அவரது ஜாதகப்படி கட்டட ஸ்தானம் எப்படி இருக்கிறது. கட்டடம் எப்படி இருக்கிறது. கட்டடத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதனை மாற்றி அமைக்கலாம். 

வீட்டில் அடிப்படையாக ஒரு சில இருக்க வேண்டியவை?

அடிப்படையில் பார்க்கும்போது வீட்டின் ஈசானியம் வடகிழக்கு. அங்கு பூஜை அறை மற்றும் லேசான பொருட்கள் வைக்கலாம். தென்கிழக்கு அக்னி மூலை. அங்கு சமையலறை வைக்கலாம். தென் மேற்கு குபேர மூலை, அங்கு பணப்பெட்டிகள், பீரோ போன்றவற்றை வைக்கலாம்.

ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. ஒருவர் தென்மேற்கு குபேர மூலையில் பீரோ இருக்க வேண்டும் என்று சொல்லி அவரும் அவ்வாறே வைத்தாராம். அதற்கு பின்தான் பீரோவில் பணமே இல்லை என்று புலம்பிய கதைகளும் உண்டு.

எனவே வாஸ்து என்பது அவரவர் ஜாதகத்தைப் பொறுத்ததேத் தவிர பொதுவானது அல்ல.
வாஸ்து அறிவியல் பூர்வமானது. சூரிய‌க் கதிர், காற்று ஆகியவை வீட்டிற்குள் நுழையக் கூடிய தன்மை, ஆற்றல் ஆகியவற்றை நெறிப்படுத்துதலே வாஸ்து சாஸ்திரத்தின் குறிக்கோள்.

இயற்கையின் அபரிமிதமான ஆற்றலை, சக்தியை மனித வளர்ச்சிக்கு‌ம், ஆரோக்கியத்திற்கு‌ம் முறை‌ப்படு‌த்‌தி‌ப் பயன்படுத்துவதே வாஸ்து.

நவக்கிரகம் என்று அழை‌ப்பது போல நாம் வாழும் வீட்டையும் கிரகம் என்று கூறுவார்கள். அதனா‌ல்தா‌ன் புதுமனை‌யி‌ல் குடியேறுவதையு‌ம் கிரகப்பிரவேசம் என்கிறோம்.

எங்கு சென்று வ‌ந்தாலும் ஓய்வெடுப்பதும், வாழ்வதும் வீட்டில்தான். எனவே வீட்டில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கதிர் வீச்சுக்க‌‌ள் நம்மை தாக்காமல் அவற்றை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கலையே வாஸ்து சாஸ்திரக் கலையாகும். இது ஆயக் கலைகள் 64ல் ஒன்றான ஜோதிடக் கலையில் ஒரு பிரிவாகும்.

நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகும். அதனை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைத்து பயன்படுத்தினோம் என்றால் ஆக்கப்பூர்வமான பலன்கள் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறை அமை‌த்து, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சமைத்தால் அந்த உணவு அதிக சுவை தரும். வீணாகாது. எளிதில் கெடாது. சமைத்துக் கொண்டிருக்கும்போதே ஸ்டவ் வெடிப்பது, வெந்நீர் காலில் கொட்டிக் கொள்வது போன்ற அசம்பாவிதங்களு‌ம் ஏ‌ற்படாது.

ஜோதிட சாஸ்திரத்தில் தென் கிழக்கு மூலைக்கான கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சுப‌த் தன்மை பெறாமல், பாவ கிரக சேர்க்கை‌யி‌ல் அ‌ல்லது வீச்சில் அமைந்திருக்குமானால் அவர்களுக்கு சமையலறை அமையும் திசை மாறுபடும்.

அது அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து முடிவு செய்ய வேண்டும். எனவே வாஸ்துவை அவரவர்களின் ஜாதகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தும்போதுதா‌ன் முழு‌ப் பலனை அடைய முடியும்.

சமையலறை‌க்கு கூ‌றியைத‌ப் போல ஒ‌வ்வொரு ‌விடய‌த்‌திலு‌ம் ஒருவருடைய மனை‌‌க்கார‌ரி‌ன் ஜாதக‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌‌யிலேயே வா‌ஸ்து சா‌ஸ்‌திர‌த்தை கையாள வே‌ண்டு‌ம். அது மு‌க்‌கியமானது.
வடக்கு, வடகிழக்கு திசை அதிக எடை கொண்ட அலமாரிகள் இடம்பெறாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வடக்கு, வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் பெருகும். 

வடக்கு, வடகிழக்கு திசைகளில் திறப்பு (ஜன்னல்) அமைக்கலாம். காற்று வருவதை தடுக்கும் வகையில் பெரியளவிலான அலமாரிகள், எடை அதிகமான பொருட்கள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும். எனவே, வீட்டின் மற்ற திசைகளில் மேற்கு, தெற்கு திசைகளில் அலமாரிகளை அமைத்துக் கொள்ளலாம். 

ஈசானிய மூலையில் இருந்து வரும் காற்றில்தான் பிராண வாயு அதிகம் இருக்கும் என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த திசையில் அடைப்பு இருக்கக் கூடாது. எனவே குறைந்தபட்சம் வடக்கு திசையில் ஜன்னல்கள் அமைப்பது அவசியம்
சதுர வடிவில் இருக்கும் மனை முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. 

சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது. 

சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை வருகிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். 40க்கு 60 அல்லது 60க்கு 40 என்ற நீள-அகலத்தில் உள்ளது செவ்வக மனைகளாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களுக்கு இதுபோன்ற அமைப்புடைய மனை ஏற்றத்தைத் தரும். 

பொதுவாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வதற்கு தகுதியானவை. இவை தவிர பாம்பு மனை (நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருப்பவை- 30க்கு 120) என்று குறிப்பிடும் அமைப்பில் மனைகள் உள்ளன. 

பாம்பு மனைகளில் வீடு கட்டி குடியேறினால் அந்தக் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து நோய்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பாம்பு மனை போன்ற அமைப்பை உடையவர்கள், வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் எழுப்பும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக விட்டு விடலாம்.

ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால், பாம்பு மனையில் தரைத்தளத்தை வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாக மாற்றி விட்டு, முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பாம்பு மனையால் ஏற்படும் தாக்கத்தை (நோய், வழக்கு, திடீர் மரணம், விபத்து) குறைத்து விட முடியும்.

 அறிவியல் பூர்வமாக வீட்டைச் சுற்றி (வலம் வரும் அளவுக்கு) சிறிதளவு இடம் விட்டு கட்டிடத்தை எழுப்பினால், வீட்டுக்குள் அதிகளவு காற்று வந்து செல்லும் வாய்ப்பு ஏற்படும். தூய பிராணவாயு அதிகம் கிடைக்கும். 

ஒவ்வொருவரின் ஜாதகத்தைப் பொறுத்தே கட்டிடம் அமையும் என்பது ஜோதிட விதி. ஜாதகத்தில் 4ஆம் இடம் கட்டிட ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. சுக்கிரன் கட்டிடக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஒருவர் ஜாதகத்தில் 4ஆம் இடமும், சுக்கிரனும் சிறப்பாக அமைந்திருந்தால் தோட்டத்துடன் கூடிய வீடு, தோப்புக்கு மத்தியில் அமைந்த வீட்டில் குடியிருக்கும் வாய்ப்பு ஏற்படும். 

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றிருந்தாலோ, பகை வீட்டில் இருந்தாலோ, பகை கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந்தாலோ, 4ஆம் அதிபதி வலுவிழந்து காணப்பட்டால், அவர்களின் வீடு வழக்கில் சிக்கியிருக்கும் அல்லது வீட்டிற்குள் காற்று அதிகம் வராத நிலையில் கட்டப்பட்டிருக்கும். எனவே, கிரக அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்கு வீடுகள் அமையும்.

எனவே, வீட்டின் அமைப்பில் இது சிறந்தது, அது சிறந்தது என்று பார்ப்பதை விட, ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புக்கு ஏற்றவாறு வீடு அமைத்துக் கொண்டால் மேலும் பலன் பெறலாம்.வாஸ்து புருஷன’ என்பவர் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட திசையில் சிரசு வைத்திருப்பார், கால் வைத்திருப்பார் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியை மையமாக வைத்தே வாஸ்து புருஷன் கணிக்கப்படுகிறது. 
சூரியன் உதிக்கும் திசை, மறையும் திசை, உத்ராயணம், தட்ஷிணாயனம் ஆகியவையும் வாஸ்து புருஷன் குறித்த கணிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு கிரகங்களுக்கும் பாவனை இயக்கம் என்ற கணிப்பு மேற்கொள்ளப்படும். ஜாதகம் எழுதும் போது கூட சிலர் இராசி, நவாம்சம் ஆகியவற்றுடன் பாவனை இயக்கத்தையும் கணித்துக் கூறுவர். 
வாஸ்துவில் ‘வாஸ்து புருஷன’ என்பது கூற பாவனை இயக்கத்தைப் போன்றதே. இயற்கையை ஒன்றி வாஸ்து புருஷன் கணிக்கப்பட்டுள்ளதால், அதை வைத்து வீடு கட்டும் போது சில செயல்களைச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 
வாஸ்து புருஷனைப் பின்பற்றி குறிப்பிட்ட செயல்களை மேற்கொள்ளும் போது இயற்கையின் ஒத்துழைப்புடன் வீட்டை கட்டி முடிக்க முடியும். இடையூறுகள் ஏற்படாது.
 வாஸ்து சாஸ்திரம் மனிதனின் ஒரு பக்கத்தை ஆட்சி செய்கிறது. அதே நேரம் அவரது தசாபுக்தி அவரை மட்டுமின்றி அந்த வீட்டின் வாஸ்துவையும் ஆட்சி செய்கிறது. நல்ல தசாபுக்தி நடக்கும் போது மோசமான வாஸ்து உள்ள வீட்டில் குடியிருந்தாலும் அவருக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படாது. 
ஒரு சிலருக்கு பிறக்கும் போதே கட்டிடக்காரகன் சுக்கிரன், பூமிக்காரகன் செவ்வாய் மோசமான நிலையில் (ஜாதகத்தில்) இருந்தால், வாஸ்து இல்லாமல் கட்டப்பட்ட வீட்டில் குடியிருக்க நேரும். அவர்களுக்கு வாஸ்துவுடன் கூடிய வீடுகள் கிடைக்காது. எனினும், நல்ல தசாபுக்தி நடந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படாது. 
ஒரே மாதிரியான வாஸ்து உள்ள வெவ்வேறு வீடுகளில், வெவ்வேறு நபர்கள், ராசிக்காரர்கள், தசாபுக்தி உடையவர்கள் குடிபுகுந்தாலும், தசாபுக்தியின் பலனை வைத்தே அவர்களுக்கு நல்ல, கெட்ட நிகழ்வுகள் ஏற்படும்.
உதாரணமாக 4 வீடுகள் ஒரே திசையைப் பார்த்தது போல், ஒரே அமைப்பில் அடிப்படை வாஸ்துவுடன் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக் கொண்டாலும், அந்த வீட்டில் குடியிருப்பவர்களின் தசாபுக்தியை வைத்தே அவர்களின் முன்னேற்றம் இருக்கும். ஏனென்றால் வாஸ்து என்பது மனிதனின் வாழ்வில் ஒரு பகுதி. ஆனால் ஜோதிடமே ஒரு மனிதனை முழுமையாக வழிநடத்துகிறது. 
நல்ல தசாபுக்தி நடக்கும் போது நல்ல வாஸ்து உள்ள வீடு கிடைக்கும். தசாபுக்தி சரியில்லாத போது வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் குடியேற நேரிடும். இல்லாவிட்டால் வாஸ்து நிறைவாக இருந்தாலும் தெய்வீகத்தன்மை இல்லாத இடங்களில் இருக்கும் வீட்டில் குடியேறுவார். 
எனக்கு தெரிந்த நண்பருடன், பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு வாஸ்து பார்க்கச் சென்றிருந்தோம். வீட்டின் வாஸ்து மிகச் சிறப்பாக இருந்தது. எந்த வாஸ்து நிபுணர் வந்தாலும் குறை சொல்ல முடியாது. அந்தளவுக்கு வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைத்திருந்தனர். ஆனால் அந்த வீட்டில் குடியேறிய பின்னர் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இறந்திருந்தனர். 
சம்பந்தப்பட்ட வீடு உள்ள நிலத்தின் தன்மையை ஆராய்ந்த போது அது அவ்வளவாக சரியில்லை என்று கூறினேன். வீட்டின் உரிமையாளர் தி.க. ஆதரவாளர் என்பதால் உடனடியாக தளம் அமைக்காத பகுதியை தோண்டச் சொல்லி ஆட்களை நியமித்தார். சுமார் 8 முதல் 10 அடி ஆழம் தோண்டிய போது அங்கே மனித எலும்புகள் கிடைத்தன. இதை வைத்து வீடு கட்டப்பட்ட இடம் முற்காலத்தில் சுடுகாடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். 
எனவே, வாஸ்துப்படி வீடு அமைத்தாலும், மனையின் தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக, பிரசன்னம் பார்த்து வீடு கட்டுவது பற்றி முடிவு செய்ய வேண்டும். 
ஒருவர் தசாபுக்தி சரியில்லாத நேரத்தில் நல்ல வாஸ்து உள்ள வீட்டில் குடியேறினால் அவரால் பலன் பெற முடியுமா என்றால், ஓரளவுக்கு மட்டுமே அந்த வாஸ்துவால் பலன் கிடைக்கும்.
வீட்டு வாசல்படியின் எண்ணிக்கை பொதுவாக ஒற்றைப்படையில் இருப்பது நல்லது. மனிதனின் எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய வாய் (பேசுதல்) எவ்வளவு சக்தி வந்ததோ அதே அளவுக்கு ஒரு வீட்டின் வாயிலும் சக்தி வாய்ந்தது. 
வாயில் உள்ள பற்களுக்கு இணையாக படிக்கட்டுகள் கருதப்படுகின்றன. எனவே, படிக்கட்டுகளின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் அமைவது நல்லது.
மேலும், வாசலின் குறுக்கே அமர்வது நல்லதல்ல. ஏனென்றால், அறிவியல் ரீதியாக வாசல், ஜன்னல் வழியாகவே காற்று வந்து செல்லும். அதனை மறைப்பது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 
ஆன்மிக ரீதியாகப் பார்க்கும் போது வாசலின் வழியாகவே லட்சுமி ஒருவர் வீட்டில் வாசம் செய்ய வருவார் எனக் கருதப்படுகிறது. எனவே வாசலின் குறுக்கே அமர்வது வீட்டிற்கு அரும் லட்சுமியை தடுப்பதற்கு சமம் எனக் கூறினர். 
அதுமட்டுமின்றி வீடு கட்டும் காலத்தில் வாசல்கால் நடும் போது பல்வேறு பூஜைகள் செய்து, நவரத்தினக் கற்கள், பஞ்சலோக பொருட்களை வைத்து அதற்கு தெய்வீகத் தன்மையை ஏற்படுத்துகிறோம். எனவே, அதன் மீது அமரும் போது லட்சுமியை அவமதித்ததாக கருதப்படுகிறது.
ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. 
ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம். 
தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் 100% தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது
யோகாதிபதிகளின் தசை நடக்கும் போது சொந்தமாக வீடு கட்டும் யோகம் கிட்டும். ஜோதிடத்தில் சுக்கிரனை கட்டிடக்காரகன் என்றும், 4வது வீட்டை கட்டிட ஸ்தானம் என்றும் கூறுவர். 
பொதுவாக 4ஆம் அதிபதியின் தசை, புக்தி அல்லது சுக்கிரன் வலுவாக இருந்து அதன் தசை, புக்தி நடக்கும் காலகட்டங்கள் மற்றும் யோகாதிபதி, ஜீவாதிபதி, லக்னாதிபதியின் தசா புக்திகள் நன்றாக இருக்கும் காலகட்டத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்பு, வசதி, வருமானம் கிட்டும்.
இதுமட்டுமின்றி பூமிக்காரகன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது. பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் அவர்களின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்
தெற்கு திசையில் கிணறு இருப்பது செல்வத்திற்கும், பெண்களுக்கும் கேடு விளைவிக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை நீக்கம், உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும்.
எனவே தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளில் கிணறு இருந்தால், அந்த வீட்டில் பெண்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க முடியாது. சில சமயம் இதனால் துர்மரணங்களும் ஏற்படும். அதனால், தெற்கு பகுதியில் உள்ள கிணற்றை எப்படியாவது மூடிவிடுவது நல்லது.
ஒரு சிலருக்கு கிணற்றை மூட முடியாத நிலை ஏற்படலாம். உதாரணமாக நீதிமன்றத்தில் கிணறு யாருக்கு சொந்தம் என வழக்கு நடக்கும் அல்லது பங்காளித் தகராறு காரணமாகவும் கிணற்றை மூட முடியாது. 
அதுபோன்ற நேரத்தில் கிணறு உள்ள பகுதியை பயன்படுத்தாமல், சுவர் எழுப்பி மறைத்து விட்டு, மனையின் ஈசானிய மூலையில் புதிதாக அழ்துழாய் கிணறு அல்லது கிணறு அமைத்துக் கொள்வது ஓரளவு பலனைத் தரும்.
ஒருவருக்கு லக்னாதிபதி, பாக்கியாதிபதி, தனாதிபதி ஆகியோர் நன்றாக இருந்தால் அவருக்கு செல்வச் செழிப்பான வாழ்க்கை கிடைக்கும். அதே தருணத்தில் லக்னாதிபதியை விட, 6ஆம் அதிபதி வலுவாக இருந்தால் சொத்து இருக்கும் அளவுக்கு, அவருக்கு கடன் இருக்கிறது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.
சிலருக்கு 3 கோடி சொத்து இருந்தால் 4 கோடி வரை கடன் இருக்கும். அவரது குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போதே சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வீட்டில் ஒரு நல்ல காரியம் நடந்தால் அடுத்த ஓரிரு நாளில் ஏதாவது கெட்டது நடக்கும். 
லக்னாதிபதியை விட 6ஆம் அதிபதி வலுவாக இருந்தால் சம்பந்தப்பட்டவருக்கு நல்லதும், கெட்டதும், புகழும், இகழ்ச்சியும் கலந்து வரும்.
இதேபோல் வாஸ்துக் குறைபாடு உள்ள வீடுகளிலும் இந்த சூழ்நிலை காணப்படும். ஈசானிய மூலையில் திறப்பு இல்லாமல் இருப்பது. நைருதி பகுதியில் திறப்பு அதிகமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படும்
வீடுகளுக்கு வாஸ்து உள்ளது போல் கோயில்களுக்கும் வாஸ்து உள்ளது. மூலவரின் அறை இத்தனை சதுரடியில் அமைய வேண்டும். மூலவரின் மண்டபம் இத்தனை அடி அகலத்தில் அமைக்கப்பட வேண்டும். அதற்குப் பின்னர் வாசல் அமைய வேண்டும். 
மூல ஸ்தானத்தில் இருந்து இத்தனை பாகை (டிகிரி) வித்தியாசத்தில் பரிவார தேவதைகள் அமைக்கப்பட வேண்டும். நவகிரகங்கள், கருப்பு, முனீஸ்வரர், ஐய்யனார் ஆகியோர் குறிப்பிட்ட திசை, கோணத்தில் அமைக்கப்பட வேண்டும். தென் திசையில் தட்ஷிணா மூர்த்தி வைக்க வேண்டும். 
கோயில் விருட்சங்கள் எந்தத் திசையில் அமைய வேண்டும் என ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. அதுபோல் அமைக்கப்படும் கோயில்களில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
ஆனால் இன்றைக்கு சிறிய இடத்தில் கூட பல்வேறு தெய்வங்களின் சிலைகளை வைத்து கோயில்களை உருவாக்கி விடுகின்றனர். மேலும், அதில் ஒரு பகுதியை மண்டபத்திற்கு என ஒதுக்கி, அதிலும் வருமானம் பார்க்கின்றனர். இங்கே ஆகம விதிகள் மதிக்கப்படுவதில்லை. இதனால் பாதிப்புகள் ஏற்படும். மூலவரின் சக்தி/ஆற்றல் சிதைவடையும்.
பக்தர்களும் முழுமையாகப் பலன் பெற முடியாததால், அந்தக் கோயிலுக்கு வருவதை காலப் போக்கில் நிறுத்தி விடுவர். இதனால் அந்தக் கோயில் புகழ்பெறாத நிலை ஏற்படுகிறது.
பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது. 
தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது நல்லது. ஆனால் வடக்கு திசையையும் ஓரளவு காலியாக இருக்கலாம். வடமேற்கு அறையில் வடகிழக்கு பகுதியை காலியாக வைத்துக் கொள்வதும் நல்ல பலனை அளிக்கும்.
பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.
எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.
இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.
பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது.
வீட்டு வாசல்படிக்கு எதிரே சுவர் மறைப்பது போல் இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று பொதுப்படையாகக் கூறிவிட முடியாது. சம்பந்தப்பட்ட வீடு தரைதளத்தில் உள்ளதா, முதல் தளத்தில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
முதல் தளம், 2வது தளத்தில் அமைந்துள்ள வீடுகளின் வாசல்படிக்கு எதிரே சுவர் இருப்பது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் வாசலுக்கு நேர் எதிரே சுவர் இருப்பது காற்று, ஒளி இவற்றைத் தடுக்கும். இதனால் அது உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தும். 
நமக்குச் சொந்தமான சுவராக இருந்தால் அதில் ஓட்டைகளை ஏற்படுத்தலாம். ஒருவேளை நாம் வீடு கட்டிய பின்னர் அண்டை வீட்டுக்காரர் பெரிய சுவர் எழுப்பி (நம் வீட்டு வாசல் முன்) வீடு கட்ட முனைந்தால், பக்குவமாக எடுத்துக் கூறி மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளச் சொல்லலாம்.
இதுபோன்ற அமைப்பு உடைய வீடுகளில் வாயிலுக்கு அருகே அலங்கார செடிகளை படர விடலாம். இதன் மூலம் காற்று சுத்தமடைவதுடன், வீட்டின் குறைபாடும் நீங்கும்
கழிவுநீர் வெளியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் வடமேற்கு திசை (வாயு மூலை) நோக்கி கழிவுநீர் வெளியேறினால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். 
வடக்கு திசையிலும் கழிவு நீர் வெளியேறலாம். ஆனால் தென், தென் மேற்கு திசை நோக்கி கழிவு நீர் வெளியேறக் கூடாது. இது மிக முக்கியமான வாஸ்து விதியாகும்.

கருத்துகள் இல்லை: