Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், டிசம்பர் 24, 2009

ஆழ்மன சக்தியின் தன்மை [ 17 ]

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



ழ்மன சக்தியின் தன்மை குறித்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளுக்குப் போகும் முன், ஆழ்மன சக்திகள் இருப்பதை அவர்கள் அறிவியல் முறைப்படி உணர ஆரம்பித்தது எப்படி என்றறிந்து கொள்வது அந்த சக்திகள் பற்றி மேலும் தெளிவாய் அறிய உதவும் என்று நம்புகிறேன்.
ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து யோகிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அறிந்திருந்தும், உபயோகித்தும் வந்தனர் என்றாலும் அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டது, பதினெட்டாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் தான். ஆழ்மன சக்தியால் உடல் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற உண்மையை அறிஞர்கள் உணர ஆரம்பித்தது அந்த சமயத்தில் தான்.
ஃப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர்
ஜேம்ஸ் பெய்ர்டு
அந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னோடி ஃப்ரான்ஸ் ஆண்டன் மெஸ்மர் (1734-1815) என்ற ஜெர்மானிய மருத்துவர். ஆரம்பத்தில் சாதாரண மருத்துவ முறையையே பாரிஸ் நகரத்தில் பின்பற்றி வந்த அவர் தன் ஆராய்ச்சிகளின் முடிவில் நோயாளியைக் குணப்படுத்த வேறு ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார். 1774-ல் ஒரு பெண் நோயாளிக்கு இரும்புச் சத்து
கலந்த திரவத்தைக் குடிக்கக் கொடுத்து அவள் உடம்பில் பல இடங்களில் காந்தங்களை வைக்க அந்தப் பெண்மணி தன் உடலெல்லாம் ஒரு விசித்திர திரவம் பயணிப்பதாக உணர்ந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பெண்ணின் உடல் உபாதை நீங்கி குணமடைந்தாள்.

மனித உடலில் ஒரு காந்த வகை திரவம் ஓடுகிறது என்றும் அது தடைப்படும் போது நோய்கள் உருவாகின்றன என்றும் அந்த திரவம் தங்கு தடையில்லாமல் செல்லும் போது நோய்கள் குணமடைகின்றன என்றும் அவர் நம்பினார். பின் உடலின் வெளிப்புறத்தில் காந்தங்கள் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டார். தன்னிடம் உள்ள காந்த சக்தியாலேயே நோயாளியின் உடலில் உள்ள காந்த திரவ ஓட்டத்தில் தடைகளை நீக்குவதாக எண்ணி அதை செயல்படுத்தினார். நோயாளிகள் குணமடைந்தனர்.

பிரான்ஸ் அரசியின் உதவிப் பெண்களில் ஒருவர் பக்கவாதம் வந்து அவர் மெஸ்மரின் சிகிச்சையால் குணமாகி விட அந்தப் பெண்மணி அரண்மனையில் மெஸ்மரின் சிகிச்சைக்கு நடமாடும் உதாரணமாக மாறினார். இது போல் பல மேல்மட்ட பிரபுக்களும் சிகிச்சையால் பலனடைந்தார்கள். மெஸ்மரின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரிடம் வரும் நோயாளிகளின்
கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரிக்கவே அவருடைய வீட்டில் சிகிச்சைக்கு இடம் போதவில்லை. ஒரு பெரிய ஓட்டலை ஆஸ்பத்திரியாக மாற்றி அங்கு சிகிச்சை செய்து வந்தார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்தார்.

அங்கும் தினமும் வர ஆரம்பித்த நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே தனித்தனியாக நோயாளிகளைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக கும்பல் கும்பலாக குணப்படுத்த ஆரம்பித்தார். அவர்களைப் பல வழிகளில் ஹிப்னாடிச உறக்க நிலைக்குக் கொண்டு வந்து குணப்படுத்திய முறையில் இசையையும் பயன்படுத்தினார். தொலைதூரத்தில் இருந்தும்
பலர் அவரைத் தேடி வர ஆரம்பிக்க அது பல மருத்துவர்களின் பொறாமையை வளர்த்தது. அவர்கள் மெஸ்மர் பயன்படுத்தும் முறைகள் மருத்துவத் துறைக்குப் பொருந்தாதவை என்று குற்றம் சாட்டினார்கள். மதவாதிகள் அவர் சாத்தானை பயன்படுத்தி நோயாளிகளைக் குணப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

பிரான்ஸ் அரசரான பதினாறாம் லூயி 1784ல் மெஸ்மரின் சிகிச்சை முறை குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தார். அதில் அமெரிக்க விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளினும் இடம் பெற்றிருந்தார். அந்தக் குழு மெஸ்மர் நோய்களைக் குணப்படுத்தினாரா இல்லையா என்பதை விட அவர் சொன்னபடி மனித உடலில் அது வரை அறிந்திராத ஒரு வகை காந்த திரவம் ஓடுகிறதா என்பதில் கவனம் செலுத்தியது.


கடைசியில் மெஸ்மர் சொன்னபடி மனித உடலில் அப்படியொரு காந்த திரவம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. எந்த காந்த திரவ ஓட்டத்தை சமன்படுத்தி அவர் நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொன்னாரோ, அந்த காந்த திரவமே இல்லை என்று ஆனதால் அவரது சிகிச்சை முறை கேள்விக்குறியாகியது. ஏராளமானோர் சிகிச்சையில் குணமாகியிருந்த போதும் அது விசாரணையாளர்களின் விஞ்ஞான அணுகுமுறைக்கு பதிலாகவில்லை. 1785ல் மெஸ்மர் நாட்டையே விட்டு வெளியேறினார். பின் அவர் வாழ்ந்த முப்பதாண்டுகள் பற்றி பெரிய செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

(முன்பே குறிப்பிட்டது போல இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் ஆழ்மனதைக் குறித்து ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த யோகிகள் மெஸ்மர் வாழ்ந்த காலத்திலேயே இருந்த போதிலும், மேலைநாடுகளில் மனம் ஒரு பெரிய விஷயமாகக் கருதப்படவில்லை. பதினேழாம் நூற்றாண்டில் டெஸ்கார்ட்டிஸ் என்ற ஞானியின் வரவிற்குப் பின்பு தான் அங்கு மனம், சிந்தனை ஆகியவை ஒரு அந்தஸ்தைப் பெற ஆரம்பித்திருந்தது. எனவே மெஸ்மர் தன் சிகிச்சையில் ஆழ்மனதை உபயோகித்தும் கூட அதன் பங்கை உணராமலிருந்தார். ஆரம்ப காலத்தில் செய்த சிகிச்சைகளால் மனித உடலில் காந்த திரவம் என்ற பெயரை அவர் நம்ப, பெயரை ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் விளைவை துரதிர்ஷ்டவசமாகப் புறக்கணித்தனர்.)
மெஸ்மர் தன் சிகிச்சை முறைகளில் ஓய்வு பெற்றும் கூட மெஸ்மரின் சீடர்களில் ஒருவரான மார்கி டி புய்செகுர் என்ற நிலப்பிரபு அவருடைய முறைகளைப் பின்பற்றி சிகிச்சை செய்தும், ஆராய்ச்சி செய்தும் வந்தார். அவர் ஒரு முறை விக்டர் ரேஸ் என்ற தன்னிடம் வேலை பார்க்கும் குடியானவனை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்திய போது சாதாரணமாக எஜமானிடம் பேசத் தயங்கும் விஷயத்தை எல்லாம் அவன் பேசினான். ஆனால் விழித்த போது தான் முன்பு பேசியது எதுவும் விக்டர் ரேசுக்கு நினைவிருக்கவில்லை. ஒரு முறை அவன் ஆழ்மன உறக்கத்தில் தன் சகோதரியிடம் இட்ட சண்டையைப் பற்றி சொல்ல மார்கி டி புய்செகுர் சகோதரியிடம் சமாதானமாகப் போகும் படி கட்டளையிட விழித்து எழுந்த விக்டர் ரேஸ் அவர் சொன்னது நினைவில்லாத போதும் அவர் சொன்னபடியே செய்து விட்டு வந்தது ஆழ்மன சக்தியை புய்செகுருக்கு அறிமுகப்படுத்தியது.
அவர் மெஸ்மரின் சிகிச்சை முறையிலிருந்து ஒருபடி முன்னேறி காந்த சிகிச்சை செய்பவர் சக்தியை விட சிகிச்சை பெறுபவரின் நம்பிக்கையான மனநிலை தான் சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அந்த ஆழ்மன உறக்கத்தில் அந்த நம்பிக்கையை சிகிச்சை பெறுபவருக்கு சிகிச்சை தருபவர் ஏற்படுத்த முடிந்தால் அது பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என்றும் கூறினார்.

இப்படி சிறிது சிறிதாக மெஸ்மரின் சிகிச்சை முறை காந்த சிகிச்சையுடன், ஆழ்மன சிகிச்சையுமாக சேர்ந்து உலகமெங்கும் பரவ ஆரம்பித்து 1834ல் ஜேம்ஸ் பெய்ர்டு என்ற மருத்துவரின் காலத்தில் ஹிப்னாடிசமாக உருவெடுத்தது. அவர் தன் ஆராய்ச்சிகளில் இந்த சிகிச்சையால் ஆழ்மன உறக்கத்தில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு வித்தியாசமான மாறுபாடே உடலில் நோய்கள் குணமாகக் காரணமாக இருக்கிறது என்று கண்டு பிடித்தார். அவர் ஆராய்ச்சியில் காந்த சிகிச்சை
பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆழ்மன உறக்க நிலை முக்கிய இடத்தை பிடித்தது. அது வரை ஆழ்மன உறக்கத்தில் ஆழ்த்தும் முறைக்கு 'மெஸ்மெரிசம்' என்ற இருந்த பெயர் போய் வித்தியாசப்படுத்திக் காட்ட ஜேம்ஸ் பெய்ர்டு 'ஹிப்னாடிசம்' என்ற பெயரை சூட்டினார்.

தவறான கருத்து ஒன்றால் அங்கீகாரம் மறுக்கப்பட்ட மெஸ்மர் ஆழ்மன ஆராய்ச்சிக்குப் போட்ட பிள்ளையார் சுழி பின் பல ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி செய்ய இப்படி வழி வகுத்தது. ஹிப்னாடிசம் மூலம் ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி உடல் நோய்களில் பலவற்றை குணப்படுத்தலாம் என்ற கண்டுபிடிப்புக்கு இப்படி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எட்டினார்கள். இது ஒரு பெரிய மைல் கல்லாய் அமைந்தது.

என்.கணேசன்
http://youthful.vikatan.com

கருத்துகள் இல்லை: