‘‘டார்வினின் புத்தகம் மிக முக்கியமானது. வரலாற்றில் நிகழும் வர்க்கப் போராட்டத்திற்கான இயற்கை அறிவியல்பூர்வமான அடிப்படையை அது எனக்கு வழங்குகிறது.’’
- கார்ல் மார்க்ஸ்
‘‘உயிரின இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’- எங்கெல்ஸ்
மனித குல வரலாற்றில் மனிதர்களின் சிந்தனைப்போக்கின் மீதும் அதன் விளைவாக வரலாற்றின் மீதும் மிகுந்த செல்வாக்கு செலுத்திய நூறு பேர் கொண்ட ஒரு பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் நிச்சயம் சார்லஸ் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கடந்த நானூறு வருட கால நவீன அறிவியல் வரலாற்றில் தோன்றிய அதிமுக்கியமான பத்து அறிவியலாளர்களைக் கொண்ட எத்தனை மாறுபட்ட பட்டியல்கள் தயாரிக்கப்பட்டாலும் அவை அனைத்திலும் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற ஒரு சில அறிவியலாளர்களின் செல்வாக்குடன் மட்டுமே ஒப்பிடத்தகுந்தது டார்வினின் செல்வாக்கு. நியூட்டனின் கண்டுபிடிப்புகள் நவீன இயற்பியலுக்கு வித்திட்டு அறிவியல் உலகில் ஒரு மாபெரும் புரட்சியையே கொண்டுவந்தன. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் பிரபஞ்சத்தைப் பற்றி அதுகாறும் அறிவியலாளர்கள் கொண்டிருந்த பார்வையையே முற்றிலுமாய்ப் புரட்டிப்போட்டது. ஐன்ஸ்டீன், நீல்ஸ் போர், ஹைசன்பெர்க், ஷ்ராடிங்கர் போன்றோரால் உருவான குவான்டம் இயற்பியலின் கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகிலேயே பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின (குவான்டம் அறிவியலின் உண்மைகளை விளங்கிக்கொள்ளும் விதத்தில் ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போருக்கும் இடையில் மிக அடிப்படையான முரண்பாடு நிலவியது). ஆனால் இவையெதுவுமே மத நம்பிக்கைகளை, கடவுளின் இருப்பை நேரடியாகக் கேள்விக்குட்படுத்தவில்லை. குறைந்தபட்சம் மத நம்பிக்கையாளர்கள் அப்படிக் கருதவில்லை. பூமியானது நாம் நினைப்பதுபோல் பிரபஞ்சத்தின் மையம் அல்ல மாறாக அது சூரியனைச் சுற்றிவரும் பல கோள்களுள் ஒன்று என்று அறிவியல்பூர்வமாக கலிலியோ 17ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் பைபிளில் கூறப்படுவது போல் முதல் நாளன்று வானத்தையும் பூமியையும் படைத்த தேவன் இறுதியாக ஆறாம் நாளன்று தனது சாயலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுத்து ஒரு செல் உயிரியிலிருந்து அடுத்தடுத்து ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவானவனே மனிதன் (இந்தப் பரிணாம வளர்ச்சி நடந்தேறப் பல கோடி ஆண்டுகள் பிடித்தன) என்பதைத் தனது ஆராய்ச்சியின் மூலம் டார்வின் 19ஆம் நூற்றாண்டில் நிரூபித்ததும் மதத்தின் - குறிப்பாக கிறிஸ்துவ மதத்தின் - அடிப்படைகளை உலுக்கின. கோபர்நிகஸின் தத்துவார்த்தக் கோட்பாட்டை அறிவியல்ரீதியாக முன்வைத்து 1632ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘‘இரு தலையாய உலக அமைப்புமுறைகள் பற்றிய உரையாடல்’’ (Dialogue Concerning the Two Chief World Systems) என்னும் புத்தகத்திற்காக போப் மற்றும் கத்தோலிக்க மதத்தின் Inquistion அமைப்பால் கலிலியோ விசாரிக்கப்பட்டார். கலிலியோவே தனது கோட்பாட்டை மறுக்கும்படி செய்யப்பட்டார். அப்படிச் செய்யாத பட்சத்தில் கொளுத்தப்படுவார் என்றும் அச்சுறுத்தப்பட்டார். அதற்குப் பணிந்த கலிலியோவிற்கு வாழ்நாள் வீட்டுக்காவல் தண்டனை 1633இல் வழங்கப்பட்டது. தனது எஞ்சிய வருடங்களைக் கலிலியோ வீட்டுக்காவலில் கழித்தார். 359 வருடங்கள் கழித்து, 1992இல் போப் ஜான் பால் இதற்கு வருத்தம் தெரிவித்து கலிலியோவின் கருத்தே சரி என்றும் ஒப்புக்கொண்டார்.
1859, நவம்பர் 22இல் டார்வினின் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை உள்ளடக்கிய ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்: அல்லது, வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிறப்பான இனங்கள் பாதுகாக்கப்படுவது’’ (The Origin of Species by Means of Natural Selection: Or, the Preservation of Favored Races in the Struggle for Life) என்னும் புத்தகம் வெளியானது. ஆனால் கலிலியோவிற்கு நேர்ந்த கதி டார்வினுக்கு நேரவில்லை. மதவாதிகள் திருந்தியிருந்ததல்ல இதற்குக் காரணம். மாறாக ஐரோப்பிய அறிவொளிக் காலகட்டத்தில் (18ஆம் நூற்றாண்டு) மத நம்பிக்கைகளுக்கும் பகுத்தறிவிற்கும் இடையில் நடந்த கடும் போராட்டத்தில் மனிதப் பகுத்தறிவின் மேன்மை நிறுவப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டதுமே இதற்குக் காரணம். கோபர்நிகஸ் புரட்சியைப் போலவே டார்வினின் கண்டுபிடிப்பும் நாத்திகவாதத்திற்குப் பெரும் வலுசேர்த்தது. டார்வின் பிறப்பதற்கு முன்பு ஒருவர் நாத்திகவாதியாக இருப்பது என்பது மிகக் கடுமையான சவால். ஆனால் டார்வினின் கண்டு பிடிப்பு அதை இன்று எளிதான காரியமாக ஆக்கியிருக்கிறது என்று புகழ்பெற்ற அறிவியலாளரும் நாத்திகவாதியுமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதில் உண்மை இருக்கிறது என்றாலும் மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நாத்திகவாதமானது மிக வலுவான அறிவியக்கமாக வரலாற்றில் எப் போதுமே இருந்துவந்திருக்கிறது. இந்தியத் தத்துவ மரபில் சார்வாகத்தின் பங்களிப்பு எவ்வளவு மகத்தானது என்பதைத் தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நிறுவியிருக்கிறார். இதில் ஆர்வமூட்டக்கூடிய விஷயம் என்னவெனில் டார்வின் தன்னை நாத்திகவாதியாக ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. நாத்திகம் அறிவாளிகளுக்கு உகந்த விஷயம் என்று கருதிய டார்வின் சாதாரண மக்களுக்கு அது இன்னும் ஏற்புடையதாக இல்லை என்று கருதினார். ஆகவே தான் நாத்திகத்திற்கு ஆதரவாகப் பேசுவது தனது குடும்பத்தினரையும் வேறு பலரது மனங்களையும் புண்படுத்தும் என்று கருதிய டார்வின் தன்னை ஒரு ஐயவாதி (Agnostic) என்றே கூறிக்கொண்டார். மதம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதை எப்போதுமே தவிர்த்துவந்தார். கார்ல் மார்க்ஸின் மகளான எலியனோரின் காதலன் எட்வர்ட் எவ்லிங்கிற்கு டார்வின் எழுதிய கடிதத்தில் இது வெளிப்படுகிறது. மதம் பற்றிய அவரது கருத்துகளை இக்கடிதம் வெளிப்படுத்துவதுடன், பல காலமாக நம்பப்பட்டுவந்த கார்ல் மார்க்ஸ் - டார்வின் சம்பந்தமான ஒரு சர்ச்சைக்கும் வழிவகுத்தது. மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பியதாகவும் ஆனால் அதை டார்வின் மறுத்துவிட்டார் என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் உண்மை என்னவெனில் எவ்லிங் தனது The Students’ Darwin என்னும் புத்தகத்தை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பி அதற்கு அனுமதி கோரியிருந்தார். அப்புத்தகத்தில் தனது தீவிர நாத்திகவாதக் கருத்துகளை எவ்லிங் கூறியிருந்த காரணத்தால் அது தனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மென்மையான முறையில் டார்வின் மறுத்துவிட்டார். 1895இல் எலியனோர் தனது தந்தைக்கு வந்த கடிதங்களை ஆவணப்படுத்திய போது தனது காதலருக்கு டார்வின் எழுதிய கடிதத்தை அவற்றுடன் தவறுதலாகச் சேர்த்துவிட்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம்.
மதத்துடன் டார்வினுக்கு இருந்த உறவை அக்கடிதம் (13.10.1880இல் எழுதப்பட்டது) மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் ஓர் அபூர்வமான ஆவணம் என்பதால் அதை முழுமையாகப் படித்துவிடுவது நல்லது:
அன்புள்ள ஐயா,
உங்கள் அன்பான கடிதத்திற்கும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள புத்தகத்திற்கும் நான் மிக்கக் கடன்பட்டுள்ளேன். எனது எழுத்துக்கள் மீதான உங்களது கருத்துகளை எந்த வடிவத்திலும் வெளியிட எனது அனுமதி தேவையில்லை. அனுமதி தேவையற்ற ஒரு காரியத்திற்கு அனுமதி வழங்குவது நகைப்பிற்குரியது. எனக்குத் தெரியாத ஒரு விவகாரத்தைப் பற்றிய வெளியீட்டிற்கு எனது அங்கீகாரத்தை இது வழங்கும் என்பதால் அந்தப் புத்தகம் எனக்குச் சமர்ப்பிக்கப்படுவதை மறுக்க விரும்புகிறேன் (என்னைக் கௌரவிக்க நினைத்ததற்கு நன்றி கூறுகிறேன்). மேலும், எல்லா விவகாரங்களைப் பற்றியுமான சுதந்திரச் சிந்தனையை நான் தீவிரமாக ஆதரிப்பவன் என்ற போதிலும் கிறித்துவத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எதிரான வாதங்கள் பொதுமக்கள்மீது பெரிதாகத் தாக்கம் எதையும் ஏற்படுத்தமாட்டா என்று எனக்குத் தோன்றுகிறது (இது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம்). அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக மனிதர்கள் படிப்படியாக அறிவுத் தெளிவைப் பெறுவதன் மூலமே சுதந்திரச் சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல இயலும். ஆகவே மதத்தைப் பற்றி எழுதுவதை நான் எப்போதுமே தவிர்த்து வந்திருக்கிறேன். எனது பணியை அறிவியலுடன் மட்டும் நிறுத்திக்கொண்டேன். மதத்தின் மீதான நேரடியான தாக்குதலுக்கு நான் உதவினால் அது என் குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையைத் தரும் என்ற காரணத்தால் இத்தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். உங்கள் வேண்டுகோளை மறுப்பதற்காக வருந்துகிறேன். எனக்கு வயதாகிவிட்டது, உடலில் வலு இல்லை மற்றும் அச்சிடப்பட்ட தாள்களைப் பிழை பார்ப்பது என்னை மிகுந்த சோர்வுக்குள்ளாக்குகிறது.
உங்கள் உண்மையுள்ள
சார்லஸ் டார்வின்.
டார்வினின் கோட்பாடுகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ, மத நிறுவனங்களுக்கும் பிரச்சாரகர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஆனால் தனது இளமைக் காலத்தில் தான் ஒரு கிறித்துவ மதகுருவாக வேண்டுமென டார்வின் விரும்பினார் என்பது வரலாற்றின் முரண்நகை. சர்ச்சுகள் தன் கருத்துகள்மீது தொடுத்த தாக்குதலால் அவர் தன்னை Devil’s Chaplain என்று நகைச்சுவையாக அழைத்துக்கொண்டார். ‘‘இயற்கைத் தேர்வின் வழியே உயிரினங்களின் தோற்றம்’’ 1859 நவம்பர் 24இல் வெளியானது. இப்புத்தகம் வெளியாவதற்கு அடிப்படையாக அமைந்த பி.வி.ஷி. ஙிமீணீரீறீமீ பயணம் 1831 டிசம்பரில் தொடங்கி 1836 அக்டோபரில் முடிவுற்றது. 2009 பிப்ரவரி 12ஆம் தேதி டார்வினின் 200ஆம் பிறந்த தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நூல் வெளியான பிறகு, கடந்த 150 வருடங்களில் பரிணாமக் கோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் மலைபோல் ஏராளமான ஆதாரங்கள் குவிந்துள்ளன. ஆனாலும் தீவிர மத நம்பிக்கையாளர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இன்றும் பரிணாமக் கோட்பாடு எதிர்கொள்ளும் தடைகள் பல. ஓரிரு சமயங்களில் சில அறிவியலாளர்களும் இத்தகையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதுதான் இதில் மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். பரிணாமக் கோட்பாடு என்பது ஒரு கோட்பாடுதானே (Theory) தவிர அறிவியல் உண்மை அல்ல என்பது முதல் குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன என்பது வரை ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக அறிவியலில் கோட்பாடு (Theory) என்கிற வார்த்தையை என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் குறிப்பாகப் பரிணாமக் கோட்பாடு பற்றியும் நிலவும் தப்பெண்ணங்களுமே இதற்குக் காரணம். அறிவியலில் கோட்பாடு என்பது இயற்கை உலகின் சில பரிமாணங்களை அல்லது சில அம்சங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் முறையாக விளக்குவது. தகுந்த ஆதாரங்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மைகள், அறிவியல் விதிகள் (புவியீர்ப்பு மற்றும் வெப்பவியக்கவிசை விதிகள் போன்றவை), அனுமானங்கள், மற்றும் சோதிக்கப்பட்ட கருதுகோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் அவதானிப்பு பலமுறை மீண்டும் மீண்டும் சோதனைச்சாலையில் உறுதிசெய்யப்படுகிறபோதே அது உண்மை என்று அறிவியலாளர்களால் ஏற்கப்படுகிறது. கோட்பாடு, உண்மை என்பன வெவ்வேறான விஷயங்கள் என்பனவாகப் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு கோட்பாடு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாவிட்டால் அது கோட்பாடாகவே அறிவியலாளர்களால் ஏற்கப்படாது. தலையைக் கிறுகிறுக்கவைக்கும் சார்பியல் மற்றும் குவான்டம் கோட்பாடுகள் உட்பட அனைத்துக் கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். பெருவெடிப்பு நிகழ்வை யாரும் நேரடியாக அவதானித்ததில்லை. ஆனால் அக்கோட்பாட்டிற்குப் (ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்) பல மறைமுகமான ஆதாரங்கள் இருப்பதால்தான் அது கோட்பாடாக ஏற்கப்படுகிறது.
பரிணாம வளர்ச்சி என்பதற்குப் புதிய மாறுதலுடன் தோன்றும் சந்ததி என்றே அர்த்தம். ஆங்கிலத்தில் descent with modification என்பார்கள். ‘‘Survival of the fittest’’ (டார்வினின் புத்தகத்தைப் படித்த பிறகு ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்ற தத்துவவியலாளர் 1864இல் தான் எழுதிய Principles of Biology என்ற புத்தகத்தில் இந்தச் சொற்றொடரை உருவாக்கினார். இது Natural Selection என்பதற்குப் பதிலியாக உருவாக்கப்பட்டது. சக அறிவியலாளரும் தனது சொந்த வழியில் பரிணாமக் கோட்பாட்டை இதே காலகட்டத்தில் கண்டுபிடித்திருந்தவருமான ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸின் கருத்தை ஏற்று இந்தப் பதத்தை 1869இல் தனது புத்தகத்தின் ஐந்தாம் பதிப்பில் டார்வின் பயன்படுத்தினார். ஆனால் இது சில குழப்பங்களுக்கு வழிவகுத்தது) என்று சாதாரணப் பேச்சுவழக்கில் கூறப்படுவதன் அர்த்தம் எந்த ஓர் உயிரினம் தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறதோ அது நீடித்திருக்கிறது என்பதே. எந்த அம்சம் அது நீடித்திருக்க உதவுகிறதோ அது அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. ஒரே உயிரினத்திற்குள்ளேயே வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கலாம். உதாரணமாக எல்லா வரிக்குதிரைகளுக்கும் ஒரே அளவான வரிகள் இருப்பதில்லை, எல்லாச் சிறுத்தைகளுக்கும் ஒரே அளவான அல்லது ஒரே எண்ணிக்கையிலான கருந்திட்டுகள் இருப்பதில்லை, எல்லாக் குதிரைகளும் ஒரே வேகத்தில் ஓடுவதில்லை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் ஒன்றைவிட மற்றொன்று மேலானது என்னும் பேச்சுக்கே இடமிருக்காது, இயற்கைத் தேர்வும் (Natural Selection) நடைபெற இயலாது. ஓர் உயிரினம் தான் நீடித்து உயிர்வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் ஏற்ற அம்சங்களைப் பெற்றிருந்தால் அந்த இனம் நீடித்திருப்பதும் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்வதும் சாத்தியமாகிறது. வேகமாக ஓடும் சிறுத்தையால் அதிக மான்களை வேட்டையாடி நீடித்து வாழ முடியும். அதேபோல் வேகமாக ஓடும் மானால் சிறுத்தையிடமிருந்து தப்பித்து நீடித்து வாழ முடியும். நீடித்து வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள் தங்களது சாதக அம்சங்களை அடுத்த சந்ததிக்குக் கடத்துகின்றன. இந்தச் சாதகமான குணங்களை அல்லது அம்சங்களைப் பெற்ற விலங்குகளின் எண்ணிக்கை அல்லது சதவிகிதம் படிப்படியாக அந்த உயிரினத்தின் கூட்டத்தில் அதிகரிக்கிறது. அதாவது சிறுத்தை இனத்தை எடுத்துக்கொண்டால் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வேகமாக ஓடக்கூடிய சிறுத்தைகளால் நிரம்பியிருக்கும். மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பனிப் பிரதேசத்தில் இருக்கும் முயல்கள் அனைத்தும் பழுப்பு நிறத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து அவை தப்புவது கடினம். பனிப் பிரதேசத்தில் பழுப்பு நிறப் பொருட்களை அடையாளம் காண்பது எளிது என்பதால் ஊனுண்ணிகள் (Carnivorous) அவற்றை எளிதாக வேட்டையாடி விடும். உயிர்வாழ்வதே அவற்றுக்குப் பெரும் போராட்டமாகிவிடும். பழுப்பு என்றாலும் அனைத்து முயல்களும் ஒரே மாதிரியான பழுப்பாக இருக்கமாட்டா. சில லேசான பழுப்பிலும் சில அடர்த்தியான பழுப்பிலும் இருக்கும். ஒரு கட்டத்தில் திடீர் மரபியல் மாற்றத்தின் காரணமாக (Mutation) வெளிறிய நிறத்தில் (Albino) சில முயல்கள் பிறப்பதாக வைத்துக்கொள்வோம். எங்கும் வெண்மையாக இருக்கும் பனிப் பிரதேசத்தில் இவை தங்களை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த தலைமுறையிடையே வெளிறிய நிற முயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வெளிறிய நிற அம்சம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மரபணுக்கள் வழியே கடத்தப்படும். சில பல தலைமுறைகளுக்குப் பிறகு அப்பகுதியில் உள்ள அனைத்து முயல்களுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். முயல்கள் எப்படிப் பனிப் பிரதேசத்திற்கு வந்தன? இரண்டு விதங்களில் இது நடக்கக்கூடும். ஒன்று, வெப்பப் பிரதேசத்திலிருந்து சில முயல்கள் பனிப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்ததால் தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். இரண்டு, வெப்பப் பிரதேசமாக இருந்த அப்பகுதி சுற்றுச்சூழல் மாற்றத்தால் பனிப் பிரதேசமாக மாறியிருக்கலாம். சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் ஓர் உயிரினத்தின் சில குழுக்கள் இடம்பெயர்வது என்னும் இரண்டு காரணிகளுமே பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன? இந்தப் புரிதலே தவறானது. பரிணாமக் கோட்பாட்டின்படி குரங்கிலிருந்து தோன்றியவன் அல்ல மனிதன். மனிதனும் குரங்கும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியவர்கள் என்றுதான் பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஓர் உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினம் தோன்றுவது என்பது (Speciation) பல ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்வது. ஒரு புதிய உயிரினம் தோன்றிய பின்னர் அதன் மூதாதையர் தொடர்ந்து நீடிக்கவோ அல்லது மறைந்துபோகவோகூடும். அது சுற்றுச்சூழலையும் அந்த உயிரினத்தின் சாதகபாதக அம்சங்களைப் பொறுத்தது.
பரிணாம வளர்ச்சிக்கான ஆதாரங்களை உயிரியலாளர்கள் இருதளங்களில் வைக்கிறார்கள்: 1. நுண்ணியப் பரிணாம வளர்ச்சி (Microevolution). இத்துறை ஓர் உயிரினத்திற்குள் (within species) காலப்போக்கில் படிப்படியாக நிகழும் மாற்றங்களை ஆராய்கிறது. இத்தகைய மாற்றங்கள் காலப்போக்கில் புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கலாம். 2. பெரும் பரிணாம வளர்ச்சி (Macroevolution). இத்துறை பல்வேறு உயிரினக் குழுக்களிடையிலான (Taxonomic groups) பெரும் மாற்றங்கள் எவ்வாறு காலப்போக்கில் உருவாயின என்பதை ஆராய்கிறது. இந்த இரண்டில் முதல் மாற்றத்திற்கு ஏராளமான ஆதாரங்கள் சோதனைச்சாலை ஆய்வுகளிலேயே காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பல சமயங்களில் படைப்புவாதிகளாலேயே மறுக்க முடிவதில்லை. உதாரணமாக, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் ஆர் கிராண்ட் அவர்கள் கால் போகாஸ் தீவுகளில் ஃபின்ச் என்ற பறவைகளை வைத்துச் செய்த ஆராய்ச்சி டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை உறுதிசெய்கிறது. இரண்டாம் மாற்றத்திற்கு ஆதாரங்கள் தொல்லுயிர் எச்சங்களிலிருந்து (Fossil) பெறப்படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களின் டி.என்.ஏக்கள் (DNA) ஒப்பிடப்படுவ தன் மூலம் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுள்ளன என்பது நிறுவப்படுகிறது. உதாரணமாக, 2004இல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் பாதிமீனும் பாதி நீர்நில உயிரியும் என இரண்டும் சேர்ந்த கலவையான ஒரு தொல்லுயிர் எச்சம் (Tiktaalik roseae) கிடைத்தது. அது மனிதர்கள் மற்றும் எல்லா நாற்கால் விலங்குகள் எப்படி மீனிலிருந்து பரிணாம வளர்ச்சிபெற்றன என்று விளக்கும் தொல்லுயிர் எச்ச உயிரியலாளர்களின் (Paleontologists) கோட்பாட்டிற்கு ஆதாரமாக விளங்குகிறது. அதே போன்று, ஐம்பது லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனித மூதாதையர்களுக்கும் (இவர்களது உருவங்கள் மனிதர்களை ஒத்திருந்தபோதிலும் இவர்கள் மனிதக் குரங்குகளுக்கு மிக நெருக்கமானவர்கள்) பத்து லட்சம் வருடங்களுக்கு முந்தைய மூதாதையர்களுக்கும் (உருவத்தில் இவர்கள் நவீன மனிதர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்) இடையே எப்படிப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு ஆதாரமாகப் பல தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் படைப்புவாதிகளை (Creationists), அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent Design) என்னும் ‘‘கோட்பாட்டை’’ ஆதரிப்பவர்களை எவ்வளவு ஆதாரங்களும் எத்தகைய ஆதாரங்களும் மாற்ற முடியாது. தாங்கள் நம்புவதை எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாது கண்மூடித்தனமாக அவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். படைப்புவாதிகளுக்கும் ‘அறிவார்ந்த வடிவமைப்பு’க் கோட்பாட்டை ஆதரிப்பவர்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உண்டு. பைபிளில் கூறப்படுவதைப் போன்று மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்றிருப்பதைப் போலவே என்றென்றும் இருந்தார்கள் என்று வாதிடுபவர்கள் படைப்புவாதிகள். இவர்கள் அறிவியலுக்கு மாற்றாக இது கல்விச்சாலைகளில் போதிக்கப்பட வேண்டும் என்று கோரி ஏறக் குறைய கடந்த நூறு ஆண்டுகளாகப் போராடிவருபவர்கள். ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இவர்களது வாதங்கள் என்றுமே எடுபட்டதில்லை. ஆகவே தங்களது வாதங்களை மேலும் நுட்பமானதாக்கி வலிமையானதாக மாற்ற இவர்கள் செய்த முயற்சியே ‘‘அறிவார்ந்த வடிவமைப்பு’’ என்ற வாதம். (இதே போன்றதொரு வாதம் ஆர்க்டியா கான் வில்லியம் பாலே (Archdeacon William Paley) என்பவரால் 1700களின் இறுதியில் வைக்கப்பட்டது. இவரது இறையியல் கருத்துகள் கேம்பிரிட்ஜ் பல்கலைப் பாடத்திட்டத்தில் இருந்தமையால் அவற்றை டார்வின் நன்கு படித்திருந்தார்.) இவர்கள் பரிணாமக் கோட்பாட்டை ஏற்கிறார்கள். இப்பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்பதையும் ஏற்கிறார்கள். ஆனால் இவ்வளவு சிக்கலான உயிரியல் அமைப்பு முறை காலப் போக்கில் இயல்பாக உருவாகியிருக்க முடியாது, மாறாக அதன் பின்னணியில் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பு செயல்பட்டிருக்க வேண்டுமென்பதே இவர்களது வாதம். நேரடியாகச் சொன்னால் கடவுள், நுட்பமான மொழியில் சொன்னால் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். இதற்கு என்ன ஆதாரம்? ஒரு சாதாரணக் கடிகாரத்தை உருவாக்கக்கூட ஒரு வடிவமைப்பாளர் தேவை. அப்படியிருக்கக் கண் போன்ற மிகச் சிக்கலான உறுப்பு எப்படித் தானாக உருவாகியிருக்க முடியும்? ஆகவே ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் இதன் பின்னணியில் இருக்க வேண்டும்.
இதை முட்டாள்தனமான வாதம் என்கிறார்கள் உயிரியலாளர்கள். திடீர் மரபியல் மாற்றத்தின் (Mutation) விளைவாக ஒளியை உணரக்கூடிய செல்கள் ஆதிகால உயிரினங்களில் உண்டாகியிருக்க வேண்டும். அதன் மூலம் இரவையும் பகலையும் பிரித்தறியும் ஆற்றலை ஆதிகால உயிரினங்கள் பெற்றிருக்க வேண்டும். மற்றொரு மரபியல் மாற்றத்தின் விளைவாக இந்த செல்கள் குழித்தன்மையைப் (concave) பெற்று ஒளி மற்றும் நிழல் வரும் திசையை உணரக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். தங்களை வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இது அவசியம். ஆகவே அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த உறுப்பு செழுமையடைந்திருக்க வேண்டுமென்பதுதான் உயிரியலாளர்களின் பதில். பரிணாம வளர்ச்சியில் திடீரென ஏற்படும் மரபியல் மாற்றத்தின் பங்கு மிக முக்கியமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. தங்கள் மூதாதையர்களான படைப்புவாதிகளின் அடுத்தகட்ட வளர்ச்சியே அறிவார்ந்த வடிவமைப்பு. இது நுட்பமான ஒன்றாகத் தோன்றினாலும் இதுவும் மதத்தில் ஆழமாக வேர்கொண்ட சிந்தனையே. இதன் காரணமாகவே இவர்களது வாதமும் அமெரிக்க நீதிமன்றங்களில் இதுவரை எடுபடவில்லை.
இத்தகையவர்கள் நம் இந்தியாவில் மிக அதிகம். ஆனால் ஒரு வித்தியாசம், அவர்கள் இந்து மதமும் அதன் புராண இதிகாசங்களும் கூறுவதை அப்படியே ஏற்கிறவர்கள். ஒரு நல்ல உதாரணம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ. அவர் தொடர்ந்து எழுதிவரும் இந்து மஹா சமுத்திரம் அவர் ஒரு கண்மூடித்தனமான மத நம்பிக்கையாளர் என்பதைக் காட்டுகிறது. இத்தகைய ஆதாரமற்ற நம்பிக்கைகள் தனிநபர் விவகாரமாக இருக்கிறவரை எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஒருவர் அவர் விரும்புவதைக் கேள்விக்குட்படுத்தாது நம்புவதோ ஏற்பதோ அவரது உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அதைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் அத்தகைய கருத்துகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவியல் என்ற பெயரில் அல்லது அறிவியல் கோட்பாடுகளுக்கு மாற்றாக (Alternative) விளங்கும் கோட்பாடுகள் என்ற வகையில் கற்பிக்கப்பட வேண்டுமெனக் கோருகிறபோதுதான் பிரச்சினையே எழுகிறது. இவை மதக் கோட்பாடுகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் அதை விரும்பும் மாணவர்களுக்குக் கற்பிப்பது என்பதை ஏற்க முடியும். ஆனால் அறிவியல் வகுப்புகளில் அறிவியலுக்கு இணையாக அல்லது மாற்றாக, போதிப்பது என்பதை ஒருபோதும் ஏற்க இயலாது. 2001இல் பாஜக அரசாங்கம் வேத ஜோதிடத்தைப் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பாக அறிமுகப்படுத்தியது. ஜோதிடம் ஓர் அறிவியலோ அல்லது எதிர் காலத்தைக் கணிக்கும் வல்லமை பெற்றதோ அல்ல. இவ்வுண்மை ஏராளமான ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் பாஜக அரசு அதைச் சற்றேறக் குறைய அறிவியல் என்பதாகவும் அதன் மூலம் எதிர் காலத்தைப் பெருமளவு கணிக்க முடியும் என்பதாகவும் கூறி அறிமுகப்படுத்தியது. இதற்குச் சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு அறிவியல் பார்வையோ அல்லது அறிவியலைப் பற்றிய அடிப்படை அறிவோகூட இல்லாதவர்கள் நீதிபதிகளாக இருப்பதையே காட்டுகிறது. அது மட்டுமல்ல, இதே போன்ற விவகாரமான படைப்பு வாதம் சம்பந்தமான வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பார்க்கிறபோது இத்தீர்ப்பு மதச்சார்பின்மைக்கு முரணானது.
2005இல் Pew Research Centre என்கிற அமைப்பால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப் பின்படி மனிதர்களும் மற்ற உயிரினங்களும் இன்று இருந்ததைப் போலவே என்றென்றும் இருந்து வருகிறார்கள் என நம்புகிறவர்கள் 42%, பரிணாம வளர்ச்சியின்படி என்று கூறியவர்கள் 26%, அறிவார்ந்த வடிவமைப்பின்படி என்றவர்கள் 18%, தெரியாது என்றவர்கள் 14%. 2004ஆம் ஆண்டு Gallup நடத்திய கருத்துக்கணிப்பின்படி உலகம் இன்றிருப்பதைப் போலவே கடவுளால் படைக்கப்பட்டது என்று கூறியவர்கள் 45%, கடவுளால் வழி நடத்தப்பட்ட பரிணாமக் கோட்பாட்டின்படி உலகம் உருவானது என்றவர்கள் 38%, பரிணாமக் கோட்பாட்டின்படி மட்டுமே இதில் கடவுளுக்கு எந்தப் பங்கும் இல்லையென்றவர்கள் வெறும் 13%. இதே கருத்துக்கணிப்பை Gallup 1982 இலிருந்து பலமுறை நடத்தியிருக்கிறது. இந்தச் சதவிகிதங்களில் அநேகமாக மாறுதலே இல்லை. அரசாங்கம் நடத்தும் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படைப்புவாதம் (Creationism) பரிணாமக் கோட்பாட்டுடன் சேர்த்துப் போதிக்கப்பட வேண்டுமா என்னும் கேள்விக்கு 68% பேர் ‘ஆம்’ என்றும், பரிணாமக் கோட்பாட்டை நீக்கிவிட்டு வெறும் படைப்புவாதம் மட்டும் போதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு 40% பேர் ‘ஆம்’ என்றும் பதிலளித்திருந்தனர். இரண்டுமே போதிக்கப்பட வேண்டுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஏதோ தன்னை ஒரு மாபெரும் சுதந்திரச் சிந்தனையாளராகப் பாவித்துக்கொண்டு ‘‘வேறுபட்ட கருத்துகள் மக்கள் முன் வைக்கப்பட வேண்டுமா என்று கேட்கிறீர்கள். என்னுடைய பதில், ஆம்’’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி புஷ். தீவிரவாதிகள் என்னும் சந்தேகத்தின் பேரில் குவாண்டனாமோ ஃபே சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்குத் தங்கள் தரப்பை வாதிடுவதற்கான வாய்ப்பைக்கூட மறுத்தவர் இவர். அறிவியல் துறையில் ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக வகுப்பறைகளிலும் அறிவியல் மாநாடுகளிலும் விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக பரிணாமக் கோட்பாட்டிலேயே ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அவை தீவிரமாக விவாதிக்கவும்படுகின்றன. அறிவார்ந்த வடிவமைப்பு வாதம் அத்தகைய ஓர் அறிவியல் சர்ச்சையல்ல. எந்த ஆதாரமும் அற்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது மற்றும் விவாதிப்பது என்னும் பெயரில் அறிவியல் வகுப்புகளின் நேரம் வீணாக்கப்படுவதை ஏற்க முடியாது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே அதிகபட்ச முன்னேற்றம் கண்டிருக்கும் நாடான அமெரிக்காவில் நிலைமை இப்படி. இதற்கான அரசியல் மற்றும் வரலாற்றுரீதியான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. அமெரிக்கச் சமூகத்தை ஓர் அடிப்படைவாத சமூகம் என்றே நோம் சோம்ஸ்கி கருதுகிறார். ஈரான் போன்ற ஒரு நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் மிக முக்கிய வித்தியாசம் ஈரானில் அடிப்படைவாதம் நிறுவனமயமாகி இருப்பதும் அமெரிக்காவில் அப்படி ஆகாதிருப்பதும்தான் என்கிறார் சோம்ஸ்கி. அரசியல் சாசனத்தின்படி அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு. இத்தகைய ஒரு சமூகத்தில் பரிணாமக் கோட்பாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் ஒரு பெரும் இயக்கமே எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. இந்தியாவில் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினால் நிலைமை இன்னும் மோசமாக இருப்பது வெளிப்படக்கூடும்.
20ஆம் நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் அமெரிக்காவின் பல மாநிலங்கள் பரிணாமக் கோட்பாடு பள்ளிகளில் போதிக்கப்படுவதைத் தடைசெய்திருந்தன. பைபிளில் கூறப்படுவதை மறுக்கும் எதுவும் போதிக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில் இத்தகைய சட்டத்தைப் பல மாநிலங்களின் காங்கிரசுகள் (சட்டப் பேரவைகள்) நிறைவேற்றியிருந்தன. டென்னிஸி மாநிலத்தின் பிரதி நிதிகள் அவையில் 1925 ஜனவரி 21இல் ஜான் பட்லர் என்பவரால் கொண்டுவரப்பட்ட மசோதா, பைபிளில் கூறப்பட்டபடி மனிதனை ஆண்டவன்தான் படைத்தார் என்பதை மறுத்துக் கீழ்நிலை விலங்குகளிலிருந்து படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் என்கிற கோட்பாட்டைப் பள்ளிகளில் போதிப்பதைச் சட்டப்படி தடைசெய்தது. இம்மசோதா ஜனவரி 27இல் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியது. பின்னர் மாநில செனட் அவையில் நிறைவேற்றப்பட்டு மார்ச் 21 அன்று மாநில ஆளுநரின் கையொப்பத்துடன் சட்டமானது. பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்து அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் இதுவே. இச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்காவின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் திரண்டனர். இச்சட்டத்தை மீறும் ஆசிரியருக்கு ஆதரவாக வாதாடுவதாக அமெரிக்கக் குடியியல் உரிமைக் கழகம் (American Civil Liberties Union) அறிவித்தது. டென்னிஸி மாநிலத்தின் டேடன் நகரைச் சேர்ந்த ஜான் தாமஸ் ஸ்கோப்ஸ் என்ற ஆசிரியர் இதற்கு இசைந்தார். இவ்வழக்கின் மூலம் இச்சட்டத்தை அமெரிக்க அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றத்தை அறிவிக்கச் செய்வதே இதன் நோக்கம். இந்த வழக்கு ‘குரங்கு வழக்கு’ (Monkey Trial) என வரலாற்றில் புகழ்பெற்றது. ஆனால் ACLUவின் நோக்கம் அவ்வழக்கில் நிறைவேறவில்லை. ஸ்கோப்ஸுக்கு 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடிவடைந்தது. ஸ்கோப்ஸுக்காக வாதாடிய அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் கிளாரன்ஸ் டேரோ எதிர்பார்த்ததுபோல் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குப் போகவேயில்லை. அதற்கு, அடுத்த 43 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1968இல் நடந்த Epperson vs Arkansas வழக்கில் பரிணாமக் கோட்பாட்டைத் தடைசெய்திருந்த ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டத்தை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியல் சாசனத்திற்குக் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தின்படி அரசுக்கும் மதத்திற்குமான உறவு முற்றிலும் பிரிக்கப்பட்டது. அதன்படி ஆர்கன்சாஸ் மாநிலத்தின் சட்டம் படைப்புவாதத்தை அரசாங்கப் பள்ளிகளில் போதிக்கச் சொல்வதாலும் அது கிறித்துவ மதத்திற்குச் சாதகமாக இருப்பதாலும் அது அரசியல் சாசனத்தின் முதல் திருத்தத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் பிறகு நடந்த இது போன்ற பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் இதே தீர்ப்பை வழங்கியது. கடைசியாகத் தீர்ப்பு வந்தது 2005இல் நடந்த Kitzmiller, et al. vs Dover Area School District என்னும் வழக்கில்தான். இதிலும் அறிவார்ந்த வடிவமைப்பு என்ற ‘‘கோட்பாட்டை’’ப் போதிப்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும் இவர்கள் தங்கள் விடா முயற்சியைக் கைவிடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்கள். ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் தங்களது வேதப் படைப்புவாதத்தைப் (Vedic creationism) பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அறிவார்ந்த வடிவமைப்பு வாதத்தைப் பள்ளிகளில் போதிப்பதற்கு வசதியாக ஒரு சட்டத்தை, மிகச் சமீபத்தில், லூசியானா மாநிலத்தின் ஆளுநர் பாபி ஜிண்டால் (இவருடைய பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஜிண்டால் தனது பதின்வயதில் கத்தோலிக்கக் கிறித்துவராக மதம் மாறியவர்) கையொப்பத்துடன் 2008 ஜூன் 26இல் சட்டமானது. லூசியான மாநிலம் படைப்புவாதிகளின் கோட்டைகளுள் ஒன்று. இதே மாநிலம் 1980களில் கொண்டுவந்த Creationism Act என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது. இக்காலகட்டத்தில் லூசியானாவையும் சேர்த்து 27 மாநிலங்களில் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. படைப்புவாதிகளின் ஆதரவாளரான ஜிண்டால் இம்முறை கொண்டுவந்துள்ள சட்டமான Louisiana Science Education Act மிகப் புத்திசாலித்தனமாகக் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம். சற்றேறக்குறைய நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion (TNPFCR) Act, 2002 போன்றது (பின்னர் இச்சட்டம் ஜெயலலிதாவாலேயே திரும்பப் பெறப்பட்டது). சாதாரணமாகப் பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றாது. ஆனால் அது கொண்டுவரப்பட்ட பின்னணியை வைத்துப் பார்த்தால்தான் அதன் எதிர்மறைத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.
அமெரிக்காவில் படைப்புவாதிகளின் செல்வாக்கு அசாதாரணமானது. தீவிரக் கிறித்துவ நம்பிக்கையாளர்களின் (Evangelical Christians) வாக்குகளைப் பெறுவதற்காக ஜான் மெக்கைனும் பாரக் ஒபாமாவும் போட்டி போட்டதைக் கோடீஸ்வரரும் மத போதகருமான ரிக் வாரென் நடத்திய கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. மத விவகாரங்கள் உட்படப் பல விஷயங்களில் மெக்கைனோடு ஒப்பிடுகிறபோது ஒபாமா முற்போக்கானவர். ஆனால் வாக்குகளுக்காகச் சமரசம் செய்துகொண்டவர். அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் ஜனாதி பதியாக வாய்ப்புண்டு. ஆனால் ஒரு நாத்திகர் ஜனாதிபதியாக ஆகவே முடியாது என்று கூறப்படுவதில் உண்மை இருக்கிறது.
டார்வினின் தாயகமான பிரிட்டனின் நிலைமையும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அமெரிக்காவைப் போன்று பிரிட்டன் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு அல்ல. சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையில் எந்த உறவும் இருக்கக் கூடாது என்று கோரும் குரல்கள் பிரிட்டனில் எழ ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற செல்வாக்கு பிரிட்டனில் படைப்புவாதத்திற்கு இல்லை என்றாலும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அறிவியலாளர்களுக்குப் பெரும் கவலையைத் தந்துள்ளன. பிரிட்டனில் 2008 டிசம்பரில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி (MORI poll) ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 37% பேரும் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களில் 29% பேரும் பரிணாமக் கோட்பாட்டுடன் படைப்புவாதத்தையும் கற்பிக்க ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தேசிய அவமானம் என்றார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். ஆனால் மிகவும் ஆறுதல் தருகிற விஷயமாக, கான்டர்பஃர்ரி ஆர்ச்பிஷப்பான ரோவன் வில்லியம்ஸ் படைப்புவாதம் பள்ளிகளில் போதிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறார். பைபிளில் படைப்பைப் பற்றிக் கூறுவதை அறிவியல் கோட்பாடுகள் போன்றதொரு கோட்பாடாகக் கருதுவது, தொடர்பற்ற இரு கருத்தாக்கங்களைத் தொடர்புபடுத்துகிற தவறு (category mistake) என்றும் அவர் கூறியுள்ளார். அறிவியல் துறைப் பேராசிரியரான மைக்கல் ரீஸ், ‘‘அறிவியல் வகுப்பில் குழந்தைகள் படைப்புவாதம் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆசிரியர்கள் அது குறித்து விவாதிக்க வேண்டும். படைப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள குழந்தைகளையும் மதித்து நடத்த வேண்டும்’’ என்று ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஆனால் இது படைப்பு வாதத்தைப் போதிக்க வேண்டுமென அவர் கூறியதாகத் தவறாகச் செய்திகள் வெளியாகி அதன் காரணமாக ராயல் சொசைட்டியின் கல்வித் துறை இயக்குநராக வகித்துவந்த பதவியை அவர் இழக்க வேண்டியதாகிவிட்டது. அறிவியல் துறைப் பேராசிரியராக மட்டுமல்லாமல் அவர் ஒரு மதபோதகராகவும் இருந்தது அவரது பேச்சு திரிக்கப்பட்டு வெளியாவதற்குக் காரணமாகிவிட்டது.
டார்வினின் 200ஆம் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒட்டி சர்ச் ஆப் இங்கிலேண்ட் (Church of England) ‘‘நல்ல மதத்திற்கு நல்ல அறிவியல் தேவை’’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கலிலியோவின் வானியல் விஷயத்தில் சர்ச் தவறிழைத்து பின்னர் தன் தவறை உணர்ந்தது . . . அதே போன்ற தவறு சார்லஸ் டார்வின் விஷயத்திலும் நடந்தது . . . சார்லஸ் டார்வின், உங்களை நாங்கள் தவறாகப் புரிந்துகொண்டதற்காக உங்களது 200ஆம் பிறந்தநாளின் போது உங்களிடம் சர்ச் ஆப் இங்கிலேண்ட் மன்னிப்பு கோருகிறது’’ என்று கூறியுள்ளது. இத்தகைய ஓர் அறிக்கையை வெளியிடுவதில் ஆர்ச்பிஷப் ரோவன் வில்லியம்ஸின் பங்கு மிக முக்கியமானது.
மனித குலத்திற்கு மதம் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றியும் மதத்திற்கும் அறிவியலுக்குமான உறவு பற்றியும் ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ‘‘நாகரிகத்தின் தொடக்க காலத்தில் நாட்காட்டியை (calendar) உருவாக்குவதிலும் எகிப்து நாட்டைச் சேர்ந்த மதகுருமார்கள் கிரகணங்களைத் (eclipses) தொடர்ந்து கவனித்துக் குறித்து வைத்திருந்ததால் கிரகணங்கள் உண்டாவதை முன்கூட்டியே கணிக்க முடிந்தது என்ற இந்த இரு விஷயங்களைத் தவிர வேறெந்த நல்ல பங்களிப்பையும் மதம் செய்ததாக எனக்குத் தெரியவில்லை’’ என்று கணித மேதையும் தத்துவ ஞானியுமான பெட்ரண்ட் ரஸ்ஸல் குறிப்பிட்டார். ஆனால் இக்கருத்திலிருந்து இன்றைய சமூக அறிவியலாளர்கள் (ஸ்காட் அட்ரன் போன்றவர்கள்) பெரிதும் மாறுபடுகிறார்கள். மனித நாகரிக வளர்ச்சியில் மதம் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பை இவர்கள் அங்கீகரிக்கிறார்கள். இது சரியான பார்வையும்கூட. மதம் என்பது வெறும் கொடுமைகளை மட்டுமே இழைத்த ஓர் அமைப்பல்ல. சமூகத்தில் மதத்தின் இருப்பிடமும் முக்கியத்துவமும் விரைவில் மறைந்துவிடாது என்றாலும் மெல்லக் குறைந்து வருவது உறுதி. மதத்தைப் பற்றிய பரிவான பார்வையைக் கொண்ட நாத்திகர்கள் கூட மதமும் அறிவியலும் ஒன்றுக் கொன்று உதவியாகவோ அல்லது முரண்படாமலோ இருக்க முடியும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மிகப் பெரும் அறிவியலாளரும் நாத்திகரும் இடதுசாரி சிந்தனையாளருமான ஸ்டீபென் ஜே கோல்ட் Non Overlapping Majesteria என்னும் கருத்தை முன்வைத்தபோது, அதாவது அறிவியல் உண்மைகளைப் பற்றி ஆராய்கிறது, மதம் மதிப்பீடுகளைப் பற்றி ஆராய்கிறது என்கிற கருத்தை முன்வைத்தபோது அதை அவரது சக இடதுசாரி அறிவியலாளர்களே ஏற்க மறுத்தனர். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த பிடிப்புகொண்ட ஜே கோல்ட் இப்படிப்பட்ட தவறான கருத்தை முன்வைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தில் தார்மீக மதிப்பீடுகளையும் சமூக விழுமியங்களையும் மதச்சார்பற்ற நிறுவனங்களால் உருவாக்க முடியும். அப்படி உருவாவதுதான் நல்லது என்பதே உலகெங்கும் உள்ள முற்போக்காளர்களின் கருத்து.
மனித வாழ்வின் கருத்து மற்றும் சித்தாந்த தளத்தில் மதம் ஆற்றும் பங்கு ஈடு இணையற்றது. அதனால் தான், ‘‘மதம்மீதான விமர்சனம்தான்மற்ற எல்லா விமர்சனத்திற்குமான முன்தேவை’’ என்றார் கார்ல் மார்க்ஸ். ‘‘நான் அறிவொளியின் (Enlightenment) குழந்தை. பகுத்தறிவற்ற நம்பிக்கை மிக ஆபத்தானது. பகுத்தறிவற்ற நம்பிக்கையைத் தவிர்ப்பதில் நான் கவனமாக இருக்க முயல்கிறேன்’’ என்கிறார் சோம்ஸ்கி. அமெரிக்கா போன்ற அறிவியல்-தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் படைப்புவாதம், அறிவார்ந்த வடிவமைப்பு போன்ற அடிப்படைவாதப் போக்கு வலுவாக இருப்பது அடிப்படைவாதத்தால் ஏற்படும் ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறார் சோம்ஸ்கி.
இத்தகைய அடிப்படைவாத இயக்கங்கள் வெற்றிபெறும் என்றால் என்ன நடக்கும்? ஒரு விளையாட்டான கற்பனைதான். சில, பல தலைமுறைகளுக்குப் பிறகு பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள், அறிவியலாளர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். பகுத்தறிவின்மையும் மூடநம்பிக்கைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டு, மனித குலம் இதுவரை அடைந்த எல்லா முன்னேற்றங்களும் மறைந்து, ஒரு கற்காலச் சமூகமே உருவாகியிருக்கும். ஆனால் இயற்கைத் தேர்வின்படி பகுத்தறிவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் என்பதுதான் அறிவியல் உண்மை. ஆதாரபூர்வமான நம்பிக்கைகள் ஆதாரமற்ற நம்பிக்கைகளை வெற்றிகொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக