வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
சங்க கால மகளிர் வாழ்க்கையை நினைத்தால் பொற்காலமோ என வியக்க வைக்கின்றது. வரலாற்றுச் சான்றுகளின்படி, அன்புடை நெஞ்சம், செம்புலப் பெயல் நீர் போலக் கலத்தலான் உண்டாம் கற்பு எனும் மன உறுதி கொண்டு, காம வாயிலாக அமையும் உடல் பொலிவும் பெற்று விளங்குவதோடு, உலகத்துடன் ஒட்ட ஒழுகும் பண்பும், பொறுமை, தூய்மை, வாய்மையுடன், புறத்தார்க்கும் புலனாகாது அடக்கி வைக்கும் மனத்திறன், விருந்தோம்பல், பெரியார் மதிப்பு, உபசரிப்பு போன்ற தன்மைகளும், நன்மை தரும் நற் பண்புகளும், கற்பு நலங்கொண்ட பொற்புடை மகளிரையே காரண முடிகிறது. இதையே ""மறை மொழி'' என்று கூறும் வாசகங்களும் பின் வந்த சான்றோர் வாய்மொழிகளும் இயம்புகின்றன. ஒல்காப்புகழ் பெற்ற தொல்காப்பியர் கண்ட தலைவியை, ""கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லிய பொறாயும், நிறையும் வல்லதின் விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்' இப்படிக் கூறுகிறார்.
சங்கம் போற்றிய தங்கத் தலைவியை இதன்பால் உணரலாம். இவருக்குப் பின்வந்த புலவர் பெருமக்களும், பெண்மையின் தன்மையை ஏற்றியும் போற்றியும் பெரிதும் மதித்துப் பல பாடல்களில் பதித்தும் வைத்துள்ளனர். இவரைத் தழுவி வந்த வான் புகழ் கொண்ட வள்ளுவப் பெருமானின் திறன் பெற்ற திருக்குறளில் இல்லாததே இல்லையெனலாம். மங்கல மனையறம் பற்றி, இல்லற இயலில், இல்லத்தை நல் அறமாக்கப் புகும் புதுமணத் தம்பதிகள், எவ் வண்ணம் வாழ்வை அமைத்து இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். தனித்து வாழ்ந்த ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும் போது ஈருயிரும் ஓர் உடலுமாகி, நாம் எனும் கோட்பாட்டிற்கு அமைய வாழ்வதே மங்கள மனைமாட்சி ஆகும் என்றார். சக்தியும் சிவமுமாய் ஆணும் பெண்ணும் ஒன்றித்து இருக்க வேண்டும என்ற தத்துவத்தை உணர்த்தவே சைவம் காட்டும் பரம் பொருள் வழியில் ""பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே' என்று பிரம்புரத்துப் பெருமான் கருணை பெற்ற ஞானசம்பந்தர் பகன்றார். அர்த்த நாரீஸ்வர உருவமும் இதுவே. ஆணின்றிப் பெண் இல்லை. பெண்ணின்றியும் ஆண் இல்லை. இருவரும் சமமே. பெண்ணிற்கு மாத்திரம் "கற்பு' அணிகலனல்ல ஆணுக்கும் அவசியம் என்பதையே ""எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லலை வாழியர் நிலனே'' என்றார் அவ்வை. களவு, கற்பு என இரு வகை மணம் புரிந்த வரலாறு இருப்பினும் பண்டைய நிகழ்வில் பலதரப்பட்ட மகளிர் வாழ்வையும் அறிய முடிகிறது. இது நாட்டு வழமை. ஏழ்மையின் தாழ்வு நிலையால் மகளிர் பலர், உப்பு, மீன், பூ, தின் பண்டங்கள் விற்றுப் பொருள் ஈட்டியதும், விறலியராகவும், அரசியர், இல்லக் கிழத்தியர், பணிப் பெண்டிர் என்றும் இற்பரத்தை, சேரிப்பரத்தை காதற்பரத்தை என்னும் விலை மகளிரையும் அறிகிறோம். இருந்தும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற இலக்கண வாழ்வும் இருந்ததற்கு சான்றுகள் உண்டு. பின் தூங்கி முன் எழுந்த பெண்டிரும், மனத்தக்க மாண்புøடயவர்களையும் கற்பு நலத்தால் "பெய' என பெய்யும் மழை பற்றியும், பெண்ணில்லா வீடு பேய் வீடு என்றும் மடக் கொடியில்லா மனை பாழ் என்றும் இருந்து முகந்திருத்டி ஈரொடு பேன்வாங்கி விருந்து வந்ததெனப் பகர்ந்ததும் முறத்தால் அடிவாங்கிய கணவன் கதையும் காட்டப்பட்டுள்ளது. கொற்றவனாயினும் மற்றவனாயினும் கொழுநன் தொழுதெழும் வழமை வழமை என்பதை கண்ணகி காட்டுகிறாள். துன்பநிலை கண்ட தோழி தேவந்தி, கணவன் நினைவில் இருக்கும் கலங்கிய கண்ணகியைக் காமனை வழிபடச் சொன்ன போது, ""அது கணவனை இழிவுபடுத்தும் செய்கை'' என மறுத்த பண்பு பெண்மையை உயர்த்துகிறது. முடியாட்சிச் சூழலில் மனத்தக்க மாண்புடைய பண்பை அக்கால மக்கள் வளர்த்தனர். இதன்படியே யதார்த்த நிலையை உணர்ந்த காப்பியங்களும் காவியங்களும் ஓவியங்களும் கவிதைகளும் புலவர்களால் புனையப்பட்டன. 2500 வருடங்களுக்கு முன்னர் இருந்த நாகரீகத்தையே அவர் கண்டனர். அந்த மகிமையே உண்டு புனைந்தனர். இன்று காலம் மாறி விட்டது.
ஐவகை நில மகளிரும் தம் தம் தொழிலுடனும் தலைவனுக்கு உதவுவதலிலும் வேறு பலவித ஆடல்பாடல்களிலும் மகிழ்ந்திருந்தனர். வளரிளம் பருவ நங்கைகள் கரிருளில் எங்கும் செல்வர், அணையா விளக்கொளியில் சேடியருடன் பாடி மகிழ்வர். குறவஞ்சி இதைத் தெரிவிக்கின்றது. மணலில் பாவை புனைதல், கொன்றை மர நிழலில் குதித்து விளையாடுதல், சிற்றில் இழைத்தல், மணற்பாவைக்குப் பூச்சூடுதல், சேற்றைக் கிளறி ஆம்பற் கிழங்கையும் ஆமை முட்டைகளையும் எடுத்து விளையாடல், பொய்கை நீராடல், பூப்பந்தாடல், ஊஞ்சலாடல், வரிப்பாடல் வகைகள் அத்தனையும் பாடி மகிழ்ந்ததோடு குரவைக் கூத்தாடலும் தெய்வ வழி பாடுகளும் நிகழ்த்தினர். "அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த பெண்பாற்குரிய... என்று தான் தொல்காப்பியர் கண்ட பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தார். சங்க இலக் கியத்தில் "உயிரினும் சிறந்ததன்று நாணே. நாணினும் செயிர்தீர் காட்சி கற்புச் சிறந்தன்று'' இப்படிக் காதல் பற்றிய கவிவரிகள் அவனும் அவளும் காதலிப்பார்கள் கடி மணம் கூடுவர். தடை ஏற்படின் அவன் மடலூர்வான் சமுக வாழ்க்கையில் இவை கண்டோம். கல்வியிலும் அரசனுக்கே ஆலோசனை கூறும் பெண் புலவர்களையும் காணுகிறோம்) இதுவரை பெண்ணின் பெருமை, மண்ணின் அருமை, இல்லற மகளிர், தலைவியின் மாண்பு, பெண்ணுக்கு ஆணின் துணை, ஆணுக்குப் பெண்ணே இணை, மண முடித்த ஆணுக்குப் பெண் தாயாய், சகோதரியாய், தாரமாய், தோழியாய் அமைவதோடு மந்திரியாயும் இருத்தல் வேண்டும் என்பதும் பிற்காலச் சமூகச் சூழலில் கருதி வருவதை கவனிக்க வேண்டும். களவு மணம், கற்பு மணம், காந்தர்வமணம், கடிமணம் எனப் புராண வரலாறு கூறினும் ஆணுக்கு ஆண்மை மாத்திரம் தரமல்ல, சேண்மையிலும் அவன் புகழ் பரவ வேண்டும். வான்மையும் தூய்மையும் ஒழுக்க மேன்மையும் வேண்டும். தலைமகனின் ஒழுக்கத்தின் கண் ஐயுறவு கொண்டதாலேயே நாகரீக வளர்ச்சியில் உரிமை பற்றிய மண முறை வழக்கிற்கு வந்தது. அக்கினி சாட்சி கொண்டு வெண்ணூல் பூண்ட வேதியர் சாட்சியாகக் கொண்டு, அவையோர் முன்னிலையில் மாட்சிபெற்ற தெய்வத் திருமணங்கள், மக்கள் திருமணங்கள் தக்க முறையில் உருவெடுத்த வரலாறுகள் பல உண்டு. இதைத் தொல்காப்பியரே விளம்பியுள்ளார். ""பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப...'' என்பதே அது. பெண்ணின் பெருமை இதனால் புரியும், சங்க புலவர்கள் தங்கப் பாடல்கள் 2381 என்று ஆய்வாளர் கூற்று. இவர்களில் 30 பேர் பெண்கள் என்பர் ஒருசாரார். 42 பேர் என்பர் இன்னொரு சாரார். இதிலும் குழப்பம். அகத்தில் 87 ஆம் புறத்தில் 67 மாக 154 பாடல்கள் பெண்பாற் புலவர்களுடையது என்பர்.
பெண் கல்வியின் மேம்பாடு இதனால் புரியும். வேத காலத்திலேயே கல்வியில் சிறந்த கார்க்கி, மைத்திரேயி என் போட் காட்டப்படுகிறார்கள். சங்க காலத்திலோ ஒளவையார், காவற்பெண்டு, பாரிமகளிர், குறமகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தியார், நன்முல்லையார், வெண்பூதியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார் போன்றவர்களும் இன்னும் பலரும் காட்டப்படுகிறார்கள். புராண காலத்துக் காரைக்காலம்மையார் ஆகிய பெண்பாற் புலவர்கள் புகழ்பூத்து இருந்த வரலாறுகளும் உண்டு. மன்னர்களுடன் இப்புலவர்களின் தொடர்பு, அதியமான் ஒளவைக்கு நெல்லிக் கனி கொடுத்தது, தூது போன காட்சிகளும் உண்டு. ஆதி சங்கரருடன் வாதம் செய்த பெண் பற்றியும் வரலாறு உண்டு. நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா போன்ற பெண்ணரசிகளை இன்றும் கற்றோரும் மற்றோரும் போற்றுகின்றனர். சங்ககாலம் முடிந்து எழுந்த புராண காலத்தில் வாழ்ந்த பெண்மணிகள் பற்றில் பெரிய புராணம் பேசும். சங்க காலம் தழுவிய காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்கு முகவுரை எனலாம். சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, யை போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன.
கண்ணகி தெய்வமாகியது பெண்மைக்கே உய்வு தருவது மாதவி, மணிமேகலையின் துறவு மேன்மைப்பறை சாற்றுதலே!அக்கால வழக்கில் கணவனை இழந்த மகளிரை கைம்பெண்டிர், ஏதாடி கழி மகளிர், கழிகலமகளிர், உயவற்பெண்டிர், ஆணிற் பெண்டிர் என்று பாடல்களில் குறிக்கப்படுகின்றன. தாமரைப் பொய்கையுயும் கணவனின் சிதைத் தீயும் ஒன்றே என்று கூறி பெருங்கோப்பெண்டு என்னும் அரசி தீப்பாய்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. அக்கால சமுதாய வழக்கில் இவை இருந்திருக்கின்றது. அக்கால நாகரீகத்திற்கு இவையாவும் வற்புறுத்தப்பட்டன. மிலேனிய ஆண்டு காலத்தில் இவை வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அடியார்க்கு நல்லார், பேராசிரியன், சி. வை தாமோதரம்பிள்ளை போன்ற அறிஞர்கள் இருந்திரõ விட்டால் இவை தானும் அறிய முடியுமா? பழமை கழிதல் என ஒதுக்கின் தமிழனின் உயர்வைத்தான் உணர முடியுமா? மண்ணாசை பற்றிய மகாபாரதமும் பெண்ணாசை பற்றைய இராமாயனமும் என்ன பாடத்தைக் கற்பிக்கின்றது?'' கொங்கச் செல்வி குடமலையாட்டி தென் தமிழப் பாவை செய்வதக் கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி' என்று சொற்கோயில் கட்டிய இளவனும் கற்கோயில் கட்டிய சேரனும் சோராமல் புகழ்ந்தனரே? சீவகன் ஒன்பது பெண்களை மணமுடித்தும், ஈற்றில் சைவம் தழுவினான் என்பது சிந்தாமணி. குண்டலகேசி காதலித்துக் கரம் பிடித்த கணவன் தலைவனை மலை மேல் இருந்து உருட்டித் துறவியானாள். வளையாபதியில் நவகோடி நராயணன் மனைவியை விலக்கிப் பிற ஜாதி மங்கையை மணந்து துன்பப்பட்டு இறுதியில் அவன் மகன் மூலம் ஒன்று சேருகிறான். இவையாவும் முற்கால முறைகளே.
பக்தியை பேசும் இலக்கியத்தில் பெரிய புராணம் முதன்மையானது. 28 பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றது. இருபத்தியொருவர் நாயன்மாரது மனைவியர், தாயார் நால்வர், மகள்மார் இருவர், உடன் பிறப்பு ஒருவர், காரைக்காலம்மை, இசைஞானியார், மங்கயர்க்கரசியார் ஆகிய மூவரும் நாயன்மார்களுக்கு இணையான பேறு பெற்றனர். பிள்ளைக்கறிசமைத்த, சிறுத் தொண்டர் மனைவி திரு வெண்காட்டு நங்கையை, "மனையறத்தின் வேராகி'' என்று சேக்கிழார் வர்ணிக்கின்றார். புராணக் கதைகள் கற்பனை என்று சாதித்து வாதிப்பவரும் உண்டு. நிஜம்தான் நிழலுக்கு வித்து உண்மைதான் கற்பனைக்கு வித்து சிந்தனை செயலுக்கு வித்து என்றும் உணரலாம் அல்லவா? சிங்கம், புலிக் கதைகளைப் பேச வைத்துச் சிறுவர்களுக்கு கூறுகிறார்களே? கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் வாழ்வில் அவசியம். கல்வி பெண்ணுக்கு என்றும் தடை விதிக்கப்பட்ட ஒன்றல்ல. பெண் பாற் புலவர்கள் தோன்றியிருக்க முயுமா? கல்வி பற்றிக் கல்வியாளனே உணராத உன்னத கருத்துகளை அவவை கூறவில்லையா? தீரமுடன் போராடி வீர மங்கையர்களையும் காண்கிறோம். ஆணின் பின் பெண் இருக்கிறாள் என்பது என்றோ நிரூபிக்கப்பட்டு விட்டது. வீரத்தின் விளை நிலமாகவும் பெண்கள் விளங்கினர். முதல் நாள் போரில் தந்தை இறந்துபட, மறுநாள் கணவன் களமெய்தி உயிரிழக்க மூன்றாம் நாள் பால் மணம் மாறா பச்சிளங் குழந்தையை போருக்கனுப்பிய வீரத்தாயின் வரலாறும் உண்டு. முதுகிலா? மார்பிலா? அம்பை ஏந்தினான் என்று கதறிப் பதறிய தாயையும் காண்கிறோம். இதற்காக சங்க நூல்களின் தங்க வரிகளை அறிவது அவசியம். பெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை . புராண வரலாற்று மதுரை மீனாட்சியை மறக்கமுடியுமா? வரலாறு படைத்த அச்சுதரங்கமாளைத்தான் மறக்க முடியுமா? அது நாயக்கர் காலம். ஆங்கிலேய ஆட்சியில் ஜான்சிராணியை மறக்க முடியுமா? என் வயது நிலைப்படி 1935ஆம் ஆண்டு காலப்பகுதியிலே இங்கு பெண்கள் பாடசாலை செல்லும் நிலையேற்பட்டது. எமது ஈழத்துப் புலவர்களால் புனையப்பட்ட கதைகளிலும் பெண்ணின் பெருமை பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை. நட்டுவச்சுப்பையனாரின் "கனகிபுராணம்'பார்குமாரகுலசிங்கத்தின் நவீனம் சான்றாகிறது. கூளப்ப நாயகன் காதல், விறலிவிடு தூது என்று ஏட்டில் வடித்த நவீனங்கள், 19ஆம் நூற்றாண்டுக் காலத்தில் அச்சு முன்னேற்றத்தால் மேன்மை பெற்றது. முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தில், வேதநாயகம் பிள்ளை பெண் கல்வி பற்றி வலியுறுத்தி முன்னுரை வழங்கினார்.
பாண்டிச்சேரியில் தனித்திருந்த பாரதியார்,தேநீர் தயாரித்து அருந்த தடுமாறிய நிலையில் செல்லம்மாளை உணர்ந்தார், பெண்ணின் விடுதலைக்காக பாடினார். வேதநாயகம் பிள்ளை சுகுண சுந்தரியில் குழந்தை மணத்தை கண்டித்தார். பெண் கல்வி வளர்ந்தது. சமுதாயம் உயர்ந்தது. தொழில் பகுதி உயர்ந்தது, மகளிரும் தொழில் வாய்ப்பை பெற்றனர். இக்காலத் தேவையும் அதுவே. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையல்லவா? மாதவையா, கல்கி போன்றவர்களைத் தொடர்ந்து பின் வந்தவர்களும் பெண்ணின் பெருமை பேசினர். மகளிருக்கென சிறந்த ஊடகங்கள் பறைசாற்றின. எழுத்தாளர்கள்,இசையரசிகள்,சொற்பொழிவாளர்கள்,அரசியல் தலைவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறப்பது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையே பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து சாதிப்பதோடு அன்றாடம் கிடைத்த ஊடகங்கள் அனைத்தின் மூலமும் போதித்து பெண்ணுரிமையை பேணிக்காக்க அயராது முயல வேண்டும். பெண்ணின் பெருமையே மண்ணின் பெருமை.
http://www.mangayarkesari.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக