தஞ்சன் என்னும் அசுரன் மக்களை துன்புறுத்தி வந்தான் என்றும், இங்குள்ள மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்து அழித்த இடமானதால் தஞ்சாவூர் என்று பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். ஆனால் வைணவக் கொள்கையுடையவர்கள் மஹாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும் அதனால்தான் தஞ்சாவூர் ஆயிற்று என்று சொல்கிறார்கள். இப்படி இருவேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் தஞ்சன் எனும் அசுரனின் கொடுமைகளுக்கு ஆட்பட்ட ஊர் தஞ்சாவூர் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இந்த தஞ்சாவூர்க்கு எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர்த் தட்டுகள், ஓவியங்கள் போன்றவை இந்த ஊர்க்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தவை. இந்த ஊருக்கு இன்னுமொரு முக்கியப் பெருமை இருக்கிறது. அதுதான் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில். ஆம். இந்தக் கோயில் வானத்தை நோக்கிப் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் வியந்து போற்றும் வண்ணம் கட்டிடக்கலைக்கு பெயர் சேர்த்து நிற்கிறது. இந்தப் பெரிய கோயில் கோபுரக் கலசத்தின் நிழல் தரையில் விழாமல் கோபுரத்தின் மேலேயே விழும் வகையில் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இந்த தஞ்சாவூர்க்கு எத்தனையோ பெருமைகள் இருக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர்த் தட்டுகள், ஓவியங்கள் போன்றவை இந்த ஊர்க்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தவை. இந்த ஊருக்கு இன்னுமொரு முக்கியப் பெருமை இருக்கிறது. அதுதான் தஞ்சாவூர் பெருவுடையார் கோயில். ஆம். இந்தக் கோயில் வானத்தை நோக்கிப் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டு, உலகம் முழுவதும் வியந்து போற்றும் வண்ணம் கட்டிடக்கலைக்கு பெயர் சேர்த்து நிற்கிறது. இந்தப் பெரிய கோயில் கோபுரக் கலசத்தின் நிழல் தரையில் விழாமல் கோபுரத்தின் மேலேயே விழும் வகையில் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் முன்பகுதி
தலவரலாறு
சோழப் பேரரசின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் இராஜராஜ சோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன்; இயற்பெயர் அருண்மொழித்தேவன். பட்டப்பெயர் இராசகேசரி. தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையும் உடையவன். இம்மன்னன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான். அவனது விருப்பப்படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த கற்கள் அனைத்தும் முழுமையாகச் செதுக்கப்பட்டு கோயிலாக வடிவமைக்க சுமார் 34 வருடங்கள் வரை ஆகியது. இக்கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது. இக்கோயில் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து எகிப்திய பிரமிடுகளைப் போல் 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது. இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சிறப்பான கோயில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் - வலது புறத் தோற்றம்
துணைக் கோயில்கள்
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் தவிர, வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும், வடகிழக்குப் பகுதியில் வராகியம்மன் கோயில், சண்டிகேசுவரர் கோயில், கணபதி கோயில், நடராஜர் கோயில் போன்றவைகளும், முன்பகுதியில் பெரிய நந்தி கோயிலும், கருவூரார் கோயிலும் அமைந்துள்ளன. கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள மற்றும் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் முன்புள்ள பெரிய நந்தி
சிறப்பு விழாக்கள்
-
ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் எனும் விழா 18 நாட்களுக்கு நடைபெறுகிறது.
-
வருடந்தோறும் இராஜராஜ சோழன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று இக்கோயிலில் சுவாமிக்கு வில்வ இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்திக் கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலங்கொழுந்து, மாங்கொழுந்து, பலாக் கொழுந்து, விளாக் கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், திரவியப் பொடி, வாசனைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், நவகவ்யம், பசுந்தயிர், மாதுளை முத்து, பலாச்சுளை, அன்னாசி, திராட்சை, விளாம்பழம், களஞ்சிபழம், நார்த்தம் பழச்சாறு, சாத்துக்குடி சாறு, எலுமிச்சம் பழச்சாறு, கருப்பஞ்சாறு, இளநீர், சந்தனம், அன்னம், பன்னீர், ஏகதாரை, சகஸ்தாரை, சிங்கேதனம், வலம்புரி சங்கு, கங்கா ஜலம், சொர்ணாபிஷேகம் உள்பட 47 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகிறது.
-
திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை போன்ற சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.
-
பிரதோசம், சிவராத்திரி போன்ற சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகிறது.
-
தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, இந்து மதத்தின் சிறப்புப் பண்டிகை நாட்கள் போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் சுவற்றிலுள்ள சிற்பங்களில் ஒன்று
சிறப்புக்கள்
-
இத்தலத்திற்கு கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்துரைக்கிறது.
-
தலைச்சிறந்த சிற்பக் கலையழகு வாய்ந்த இந்த திருக்கோயில் கலைப்பராமரிப்பு, தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருந்து வருகின்றது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குச் சொந்தமான திருக்கோயில், கோயில் வழிபாடு, நிர்வாகம் அரண்மனை தேவஸ்தானத்தின் மூலம் நடைபெறுகிறது.
-
இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் உள்ள "தளிக்குளம்" வைப்புத் தலமாகும். அப்பர் பெருமான் திருவீழிமிழலைத் தாண்டகத்துள் "தஞ்சைத் தளிக் குளத்தார்" என்று பாடியிருக்கிறார். இந்த சிவகங்கையில் நீர் குறைந்திருக்கும் காலத்தில் சிவலிங்கம், நந்தியைக் காணலாம்.
-
கோயிலின் முதற் கோபுர வாயிலுக்குக் கேரளாந்தகன் வாயில் என்றும், இரண்டாம் கோபுர வாயிலுக்கு இராசராசன் வாயில் என்றும், தெற்குக் கோபுர வாயிலுக்கு விக்கிர சோழன் வாயில் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தக் கோயிலின் சுவாமி விமானம் 216 அடி உயரமுள்ளது - இதை தக்ஷிணமேரு எனச் சொல்கிறார்கள்.
-
சோழ மன்னர்களுக்குத் திருவாரூர்த் தியாகராசாவிடத்தில் அளவற்ற பற்றுண்டு, எனவே அவர்கள் இங்குள்ள சோமாஸ்கந்த மூர்த்தியை தியாகராசாவாகவே எண்ணி, அதற்குரிய சிறப்புக்களைக் குறைவின்றிச் செய்து போற்றி வழிபட்டனர். இம்மூர்த்தி "தஞ்சை விடங்கர், தக்ஷிணமேரு விடங்கர்" என்றும் போற்றப்படுகிறார்.
-
இக்கோயிலில் உள்ள திருமேனிகளை இராசராசனும், அவன் மனைவியர்களும், அவன் குலத்தவர்களும், அமைச்சர்களும் தந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பட்டுள்ளது.
-
கோயிலின் முதல் தளத்தின் உட்சுவர்களில் 108 வகையான நடன அமைப்புகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
-
இங்குள்ள சிவதாண்டவம், திரிபுராந்தகர், சுப்பிரமணியர், விநாயகர், காளி முதலிய வண்ண ஓவியங்கள் கலைக்குச் சிறப்பு சேர்க்கின்றன.
-
இங்கு அம்பாள் கோயிலை எழுப்பியவன் "கோனேரின்மை கொண்டான்" என்கிறார்கள். இங்கு எழுந்தருளுவித்த அம்பாளிற்கு "உலகமுழுதுடைய நாச்சியார்" என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
-
விநாயகர் திருமேனிகளை இராசராசனே பிரதிஷ்டை செய்வித்துள்ளதாகவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
-
இக்கோயிலில் சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டை நாளில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் "ஆட்டைத் திருவிழா" என அழைக்கப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இவ்விழாவில் இராசராச நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது. இதில் நடித்த சாந்திக்கூத்தன் திருமுதுகுன்றனான விஜயராசேந்திர ஆசாரியனுக்கு இதற்காக 120 கலம் நெல் தரப்பட்டது என்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
-
சுவாமிக்கு முன்பு திருப்பதிகம் விண்ணப்பிக்க நாற்பத்தெட்டு பிடாரர்களும், உடுக்கை வாசிக்க ஒருவரும், கொட்டு மத்தளம் முழக்க ஒருவரும் ஆக 50 பேர்களை இராசராசன் நியமித்தான் என்றும், இவர்களுடைய பெயர்கள் அனைத்தும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன என்றும், அப்பெயர்கள் அனைத்தும் அகோரசிவன், ஞானசிவன், தத்புருஷசிவன், பரமசிவன், ருத்ரசிவன், யோகசிவன், சதாசிவன் என்று முடிவதால் இக்கோயிலில் தீட்சை பெற்றோரே திருப்பதிகம் விண்ணப்பிக்க நியமிக்கப்பட்டனர் என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இராசராசன் கோயிற் பணிகளுக்காகப் பல ஊர்களிலிருந்து கொண்டு வந்த 400 நடனப் பெண்களை 2 நீளமானத் தெருக்களில் குடியமர்த்தினான். இப்பெண்டிர் தளிச்சேரி பெண்டிர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வசித்த தெரு தளிச்சேரி என்று பெயர் பெற்றது. இவர்களுக்குப் பட்டங்களும் அளித்துச் சிறப்பு செய்யப்பட்டன என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இது போல் கானபாடிகள், நட்டுவர், சங்குகாளம் ஊதுவோர், மாலைகள் கட்டித் தருவோர், விளக்கேற்றுவோர், பரிசாரகர்கள், மெய்க்காவலர்கள் முதலியோர்களையும் இராஜராஜன் நியமித்திருந்தான் என்றும் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இராஜராஜன் கோயிலுக்குத் தந்துள்ள ஆபரணங்களின் பெயர்களைப் படித்தாலே பிரமித்துப் போகும் அளவுக்கு அதிகமான ஆபரணங்களை இந்தக் கோயிலுக்கு வழங்கியிருக்கிறான்
-
கல்வெட்டுக்களில் இறைவனின் பெயர் ஆடல்வல்லான், தக்ஷிணமேருவிடங்கர் எனவும், பின்னர் இராசராசேச்சரமுடையார், இராசராசேச்சமுடைய பரமசுவாமி எனவும் குறிக்கப்பட்டுள்ளது.
-
இக்கோயில் குறித்து பிரகதீஸ்வர மகாத்மியம், சமீவன க்ஷேத்ரமான்மியம் எனும் தலபுராண நூல்கள் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டுள்ளன.
-
இக்கோயில் குறித்து கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் "பெருவுடையார் உலா" பாடியுள்ளார்.
-
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள், இராசராச சோழன் பொறித்து வைத்துள்ள 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் அனைத்தையும் அச்சிட்டு "சிவபாதசேகரன் கல்வெட்டுக்கள்" என்னும் நூலை வெளியிட்டதுடன் இங்கு பூசைகள் தடையின்றி நடைபெற நிரந்தர வைப்புநிதி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.
-
கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுவற்றில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
-
இந்தக் கோயிலைச் சுற்றி அக்காலத்தில் வெட்டப்பட்ட அகழிகள் இன்னும் உள்ளன.
http://www.muthukamalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக