Vaalka Valamudan
திருடன் ஒருவன் தனது குதிரையில் காட்டுப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது சில முனிவர்கள் வந்தனர். விசாலமான நெற்றி, பிரகாசம் பொருந்திய முகம், ஒளி பொருந்திய கண்கள் என்று ஏழுபேரும் தவசிரேஷ்டர்களாக இருந்தனர். அவர்களை மறிக்க அவன் நெருங்கினான். அப்போது, அவர்களது முகத்தில் இருந்து கிளம்பிய ஒளி, அவனது கண்களைக் கூச வைத்தது. திருடனுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும், அவர்களில் ஒருவரையாவது தாக்கி அவரிடம் உள்ள கமண்டலத்தையாவது பறித்து விடும் எண்ணத்தில் பின் தொடர்ந்தான். ஒரு முனிவர் ஒரு கிணற்றின் கரையில் நின்றார். மற்றவர்கள் முன்னால் சென்றுவிட்டனர். திருடன் தனது வில்லால் அந்த முனிவரைத் தாக்க முயன்றான். ஆனால், மனதில் ஏதோ குழப்பம் உண்டானது. திடீரென்று அவர் முன் போய் நின்றான். சாஷ்டாங்கமாய் பாதத்தில் விழுந்தான். அருளே உருவான அந்த முனிவர் பாதத்தில் விழுந்தவனை எழுப்பினார்.
"" மகனே! தயங்காமல் உன் தேவையை என்னிடம் சொல்!'' என்றார். திருடன் அவரிடம்,""சுவாமி! என் குடும்பம் பட்டினியாக இருக்கிறது. உங்கள் பொருளை எடுத்துச் சென்றால் தான் என் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்,'' என்றான். இதைக் கேட்ட முனிவர் கலக்கம் கொள்ளவில்லை.
""உன் விருப்பப்படியே செய். எனக்குத் தடையேதும் இல்லை. ஆனால், உன் நலத்திற்காக ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில் சொல்,'' என்றார்.
திருடன்,""அதற்கென்ன! தாராளமாக பதில் சொல்கிறேன்,'' என்றான்.
""நல்ல நிலையில் உள்ள ஒரு உயிரை இம்சை செய்து பொருட்களைப் பறிப்பது கொடியபாவம் என்கிறது தர்மசாஸ்திரம். நீ செய்வது பாவம் தானே!'' என்றார் ரிஷி.
""ஆமாம்! நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். ஆனால், இதைத் தவிர வேறு தொழில் தெரியாதே. தெரிந்தே இப்பாவத்தைச் செய்கிறேன்,'' என்றான். ரிஷி மேலும் கேட்டார்,""ஒருவனை அடித்து எடுத்துச் சென்ற பொருளை நீ ஒருவனே அனுபவிக்கிறாயா?''
""இல்லை சுவாமி! என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதில் பங்குண்டு. நான் கொண்டு செல்லும் பொருளில் தான் எல்லாருக்கும் சாப்பாடு நடக்கிறது,'' என்றான்.
""நீ கொண்டு போகும் பொருளை அனுபவிக்கும் உன் குடும்பத்தார் உன்னைச் சேரும் பாவத்திலும் பங்கெடுப்பார்களா?'' என்ற ரிஷியிடம், ""இதற்கு பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை. குடும்பத்தலைவன் என்ற முறையில் ஏதோ தொழில் செய்து அவர்களுக்கு உணவிடுவது என் கடமை,''என்றான் திருடன்.
""நல்லது! உன் பாவத்திலும் குடும்பத்தினர் பங்கெடுப்பார்களா என்பது இப்போது மிக முக்கியமான விஷயம். உன் ஈனச் செயல்களால் பெரும் பாவங்களை மலைபோல குவித்திருக்கிறாய். நான் மட்டுமல்ல...மற்ற ரிஷிகளையும் இப்போதே அழைத்து வந்து இங்கேயே அமர்ந்திருக்கிறேன். நீ சென்று <உங்கள் குடும்பத்தாரின் நிலையை அறிந்து வந்து எங்களிடம் தெரியப்படுத்து! பின்னர் உன் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் தாக்கி பொருளைப் பறித்துக் கொள்ளலாம்.'' என்று யோசனை தெரிவித்தனர்.
திருடன் அவர்களிடம்,""என்ன! கபடநாடகம் நடத்துகிறீரா? என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இங்கிருந்து தப்பி விடலாம் என்று தானே இப்படியொரு திட்டம் போட்டிருக்கிறீர். அது நடக்காது,''என்றான்.
முனிவர் அவனிடம்,"" நீ திரும்பி வருகின்ற வரையில் நான் இங்கிருந்து நகரமாட்டேன். இது சத்தியம். நீ தாராளமாக என்னை நம்பலாம். சீக்கிரம் கேட்டுவிட்டு மட்டும் வந்துவிடு. உன் நன்மைக்காகத் தான் இதைச் சொல்கிறோம்.'' என்றார்.
முனிவரின் வார்த்தையில் உண்மை இருப்பதாக திருடனின் மனதிற்குப்பட்டது. அவன் வீட்டுக்குச் சென்றான்.
பசியோடு காத்திருந்த குடும்பத்தினருக்கு வெறுங்கையோடு அவன் வந்தது கோபத்தை உண்டு பண்ணியது.
அவர்களின் எண்ணத்தை உணர்ந்த கள்வன், "" கோபப்படாதீர்கள். இன்றைக்கு உங்களுக்கு வேண்டிய பொருளுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். என் சந்தேகத்திற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்,'' என்றவன், ""அன்றாடம் நான் பாவம் செய்து கொண்டு வரும் உணவை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், என் பாவத்திலும் பங்கெடுப்பீர்களா?''என்று கேட்டான்.
""குடும்பத்தலைவனான நீர் கொண்டுவரும் உணவில் தான் எங்களுக்கு பங்குண்டே தவிர, அதனைப் பெறும் வழி பாவமோ, புண்ணியமோ, அதைப்பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை. அதில் எங்களுக்கு பங்கும்
இல்லை. சீக்கிரம் இன்றைய உணவிற்காக ஏற்பாட்டினைச் செய்யும்,'' என்றனர்.
வீட்டாரின் பதிலைக் கேட்ட திருடனுக்கு ஞானம் பிறந்தது. திரும்ப வந்தான். அதற்குள் ஏழு முனிவர்களும் அங்கே கூடிவிட்டனர். அவர்களின் காலில் விழுந்தான். இதுநாள் வரை தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தரும்படி கண்ணீர் விட்டான்.
ஞானிகளின் தரிசனம் வீண்போகுமா? திருடன் அறிவுக்கண் பெற்றான். அவனுக்கு ராமமந்திரத்தைப் போதித்தனர். அங்கிருந்த மரா மரத்தின் அடியில் அமர்ந்து அம்மரத்தின் பெயரையே உச்சரித்து வரும்படி கூறினர்.
""இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்தால் இன்றோடு உன் பாவமூட்டை உன்னை விட்டு அகன்று விடும். நீ நற்கதி பெறுவாய்,'' என்று அருள்செய்து விட்டு அவர்கள் மறைந்தனர். காலச்சக்கரம் சுழன்றது.
கள்வன் தன் மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்ய, மரத்தடியில் அமர்ந்தான். அவன் அமர்ந்திருந்த "மரா' மரத்தின் பெயரைச் சொல்லி வந்தான். அதை வேகமாகச் சொல்லும் போது, அவனையறியாமல் "ராம' என மாறியது. அவன் கண்விழிக்கவே இல்லை. சுற்றிலும் புற்று உண்டானது. ராமநாமத்தால் அவனின் பாவங்கள் அடியோடு நீங்கின. அவர் பெரிய மகான் ஆனார். புற்றில் இருந்து வந்த மகான் என்பதால், அவருக்கு ""வால்மீகி'' என்ற பெயர் ஏற்பட்டது. "வால்மீகம்' என்றால் "புற்று' எனப்பொருள். இவரே ராமாயணம் என்னும் தெய்வீக காவியத்தை நமக்கு அளித்தார். யோகவாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டன.
http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=1650&ncat=HIN&ncat1=WRI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக