Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

ஞாயிறு, நவம்பர் 15, 2009

கொரில்லா : மனிதப் பரிணாமத்தின் இறுதிச் சாட்சி

நீங்கள் ஆப்பிரிக்க தேசத்திற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டால் இந்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்கலாம். டர்பன் நகரத் தெருக்களில் நுழையும் போது, கரிய கட்டையான பெண்மணி பானத்தைக் கையில் ஏந்தி உங்களை வரவேற்பாள். அவளைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட வாட்ட சாட்டமான இளைஞர்கள் பானம் அருந்தியபடி அமர்ந்திருப்பர். மனதில் கிலி தோன்ற நீங்கள் நெருங்கியவுடன், அவள் அதை அளிப்பாள். வினோத நெடியுடன் சில துண்டு எலும்புகளுடன் இருக்கும் அப்பானம் ‘மஸ்தி சூப்பாம்.’ பெண் தோழியை வீழ்த்திவிடலாம் குடி என்ற ஆலோசனையும் உண்டு.


நீங்கள் கொரில்லா சூப் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாயில் சிக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சின்ன எலும்பு கொரில்லாக் குட்டியின் வலது கை கட்டை விரலாக இருக்கலாம்.

சிம்பன்சி, உராங்குட்டான் வரிசையில் மூன்றாவதாக இருப்பது கொரில்லா. தாமஸ் ஸ்டாட்டன் சாவேஜ் என்ற ஆய்வறிஞர் ‘அழகிய கூந்தல் கொண்ட பழங்குடிப்பெண்’ என்ற அர்த்தம் தொனிக்கக் ‘கொரில்லா’ என அழைத்தார். கிங்காங், டார்சான் போன்ற படங்களின் மு்லமே அறிமுகமான இக்குரங்கினம் ஆசியக் கண்டத்திற்கு அறிமுகம் இல்லாதவைதான்.

மனிதப் பரிணாம வளர்ச்சியை இம்மூன்று குரங்கு வகைகள் மூலமே அறிவியல் அவ்வப்போது மெய்ப்பிக்க முயல்கிறது. கைமுட்டிகளால் நடக்கும் இக்குரங்கினத்தின் டி.என்.ஏ மனித டி.என்.ஏ உடன் 97 சதவீதம் வரை ஒத்துப்போகிறது, மனிதனைப் போலவே கைவிரல் ரேகைகளும் ஒவ்வொரு குரங்குக்குமே மாறுபட்டிருக்கிறது.

காங்கோ, சியாரோலியன், நைஜீரியா, ருவாண்டா நாடுகளின் வடகிழக்குக் காட்டுப்பகுதிகளில் இவை காணப்படுகின்றன. குடும்ப அமைப்போடு வாழும் இவை அதிக வெட்க உணர்வும், தற்காப்பு உணர்வும் கொண்டவை. ஒரு குடும்பத்தில் 30 குரங்குகள் வரை இருக்கும். இதில் பெண், ஆண், நடுத்தர வயது, குட்டிகள் என பல பிரிவுகளும் அடங்கும்.

12 வயதிற்கு மேற்பட்ட ஆண் குரங்கே குடும்பத்தலைவன். உணவு எங்கே இருக்கிறது, அதை அடையும் வழி, எதிரிகளை பற்றிய அறிவு போன்றவை தலைமைக் குரங்கின் அத்தியாவசிய குணங்கள்.

50 வருடங்கள் வரை வாழும் இவ்வினத்தின் முதிர்ந்த ஆண் 6 அடி உயரம் 300 கிலோ எடை கொண்டதாகவும், பெண் நாலரை அடி உயரம் 150 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். 4வருடத்திற்கு ஒருமுறை கர்ப்பம் தரிக்கும். கர்ப்ப காலம் எட்டரை மாதங்களாகும். குட்டியை கும்பல் முழுவதுமே மிகக் கவனத்துடன் வளர்க்கும். சந்தர்ப்ப வசத்தால் தாய் பிரிந்தாலும், தலைவனின் வழிநடத்தலோடு வளர்ப்புத்தாய் தன்குட்டியாக அதை ஏற்றுக்கொள்ளும். மனிதக் குழந்தைக்குண்டான பருவநிலைக் குணங்கள் அனைத்தும் கொரில்லாக் குட்டிக்குள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.

பெண் குரங்குகள் அமைத்துக் கொடுக்கும் படுக்கையில் ஆண் உறங்கும். இவை பெரும் மரக்கிளையின் மையப் பகுதியில், சிறு கிளை மற்றும் இலைகளை மடித்து, ஒடித்து ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கும். இடப்பெயர்ச்சி காலங்களில் நடுத்தர வயதுக் குரங்குகள் மரத்தின் அடிப்பகுதியிலும், தாய் மற்றும் குட்டிகள் மரத்தின் மேலேயும் படுத்துறங்கும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக தலைவனின் ஆணைப்படி இவ்வமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்.


மாற்றுக்கும்பலில் இருந்து பிரிந்து வந்த குரங்கையோ, அல்லது எல்லை தாண்டிய குரங்கையோ இவை எப்போதும் சேர்ப்பதில்லை. இலை தழை, கிழங்கு, சிறு பூச்சிகள், இவையே இவற்றின் உணவு. மாற்று அணிக் குரங்கைக் கொன்று, தன் கோரைப் பற்களால் கிழித்து எறிந்துவிடும். அப்போது மட்டுமே கொல்லப்பட்ட குரங்கின் மாமிசத்தைச் சிறிதளவு உண்ணும். இது வெற்றியின் அடையாளம். இத்தகைய போர் ஒரே கும்பலில் உள்ள ஆண்களுக்கு இடையேயும் நடக்கும். அப்போது ஆண் குரங்குகள் மிகுந்த கோபத்துடன் உதடுகள் பிதுங்க கோரைப் பற்கள் வெளியே தெரிய கிறீச்சிட்ட ஒலி எழுப்பும். இரண்டு கால்களால் எழுந்து நின்று தன் மார்பில் இரண்டு கைகளால் மாறி மாறி அடித்துக்கொள்ளும். இது எதிரியை எச்சரிக்கை செய்யும் செய்கை. கிளைகளை ஒடித்து வீசுவது, கற்களைக் கொண்டு எறிவது போன்றவையும் இவைகளின் உத்திகள்.

கொரில்லாக்கள் 3 வகைப்படும். மலைவாழ் கொரில்லா, கிழக்கு தரைவாழ் கொரில்லா, மேற்குத் தரைவாழ் கொரில்லா. இவை உருவ அளவிலும் குண அமைப்பிலும் சிறிதளவே மாறுபடுகின்றன.

மலைவாழ் கொரில்லாக்கள் உணவிற்காக அதிக அளவு இடம் பெயர்கின்றன, தன் வாழ்நாளில் பாதி வருடங்களை இடப்பெயர்ச்சியிலும், எதிரிகளோடு போராடுவதிலும் செலவிடுகின்றன.

எத்தியோப்பியா, உகாண்டா, காங்கோ நாடுகளில் நடக்கும் உள் நாட்டு யுத்தத்தாலும், கொள்ளையர்களாலும் இவ்வகையே அதிகம் பலியாகின்றன. 50 வருடங்கள் வரை வாழும் திறன் படைத்தவை 20 வருடங்கள் கூட வாழ்வதில்லை. கொலை செய்யப்பட்டவை ஆண்மை விருத்தி மருந்தென 1000 டாலர் முதல் 10.000 டாலர் வரை விற்கப்படுகின்றன. போதாக் குறைக்குக் காயப்படுதல், நோய்வாய்ப்படுதல், கர்ப்பச்சிதைவு, போதிய கவனிப்பின்மை இவைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கின்றன.

தரைவாழ் கொரில்லாக்களின் நிலை வேறுவிதமானது. கர்ப்பகாலங்களில் மலை அடிவாரத்திற்கு இடம் பெயரும். பனிக்காலத்தில் இளம் வெயிலில் புற்களின் மேல் படுத்துறங்குவதும், சுண்ணாம்புப் பாறைகளைப் பெயர்த்துண்ணுவதும் விருப்ப குணங்கள். மலைக்குரங்குகளின் தாக்குதல், கொள்ளைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் போன்றவை இவைகளின் வாழ்வைச் சீரழித்துவிடுகின்றன.

2004, 2006ஆம் ஆண்டுகளில் காங்கோ, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ‘இபோலா வைரஸ்’ தாக்கிப் பல ஆயிரம் கொரில்லாக்கள் இறந்தன, இந்நிகழ்வு உலகையே உலுக்கியது.

‘தாமஸ் ப்ரூவர்’ என்ற ஆய்வறிஞர் செப்டம்பர் 2005இல் ஓர் அறிக்கை வெளியிட்டார். அது ‘கோகோ’ என்ற பெண் குரங்கை வைத்து நடத்தப்பட்டது, அதில் "மனிதனின் நுண்ணிய உணர்வு நிலைகளைக் கூட எளிதில் கண்டறிகின்றன. 1000 ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதோடு புத்தகத்தினையும் படிக்க முயல்கிறது. கட்டளைகளைப் புரிந்துகொண்டு, துல்லியமாக நடக்கிறது. மனிதக் குழந்தைகளை வாரி அணைத்துக்கொள்வதும், சிறிய விலங்குகள், பறவைகளோடு ஆச்சரியமூட்டும் விதமாகப் பழகுவதும், மனிதனோடு ஒத்து, அவனைப் போலவே வாழத் துடிக்கின்றன என்பதைக் காட்டுகிறது" என்றார்.

டார்வினின் தத்துவத்திற்கு சாட்சியங்களாக விளங்கும் இவற்றைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும்.

கருத்துகள் இல்லை: