Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, நவம்பர் 27, 2009

தலையிலேயே விடிந்த சாபம்!




பகவானிடம் பக்தி வைத்து வழிபட்டு, அவனருள் பெறுவது தான் பக்தர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். “அதைக் கொடு, இதைக் கொடு’ என்று கேட்பதில்லை பகவான். “பகவானே… எனக்கு உயர்ந்ததென எதைக் கொடுக்க விரும்புகிறாயோ, அதையே கொடு…’ என்று கூறினாலே போதும்; கிடைக்கும். கீதோபதேசம் முடிந்ததும், “கிருஷ்ணா… நீ சொன்னதையெல் லாம் கேட்டேன். இப்போது நான் எதைச் செய்தால் கீர்த்தியும், மேன்மையும் ஏற்படுமோ, அதைச் சொல்; செய்கிறேன்…’ என்று, முடிவை பகவானிடமே விட்டு விட்டான் அர்ஜுனன்.
மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது, ஜயத்ரதன் என்பவனை, சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அல்லது தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள், அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர்.
அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை; அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது. “என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று கேட்டான்.
சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான்; இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். “சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளித்து விடுவான்…’ என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடன், அர்ஜுனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது…
ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
இந்த ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். அவர் கோரமான தவம் செய்ததன் பலனாக, இந்த பிள்ளையைப் பெற்றார். அந்த பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்…’ என்றது.
இதைக் கேட்ட விருத்தட்சரன், “தன் தவ வலிமையால், யுத்த களத்தில் எவன் என் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்…’ என்று சாபம் விட்டார்.
இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி, “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன்.
அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோ பாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை.
பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள் ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவரே சொல்லியிருந்தபடி இவரது தலையே சுக்கல்களாகியது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால், பகவானுடைய சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை மனிதன் ஏமாற்றி விடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது.
நாம் என்ன தான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்தி வைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான் தான்.
அதனால், எல்லாப் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்து விட்டு, “பகவானே… எல்லாம் உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய்!’ என்று சொல்லி, அவனையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவன் கடமை, அவன் செய்வான்!

கருத்துகள் இல்லை: