Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 23, 2009

நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்
காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை
மேலா னாஞ்செய்த வல்லினை வீடுமே.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் குளித்தலையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் கதம்பமரம் தெய்வீக மரமாக வணங்கப்படுகிறது.

சிவபெருமான் மற்றும் முருகப் பெருமானுக்கு கதம்பா மரம் உகந்த மரமாகக் கருதப்படுகிறது. இது தவிர புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மரத்தை மிகவும் போற்றுகிறார்கள்.

ஜைன மத முனிவர் வாசு பூஜ்யா கதம்பா மரத்தின் அடியில் ஞானம் பெற்றதாக ஜைன மதத்தவர்கள் நம்புகின்றார்கள்.

இந்த மரத்துப் பூக்களை முருகப்பெருமான் ஆபரணமாக அணிந்து கொண்டதாக “திருமுருகாற்றுப்படையில்” சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் முருகனை வழிபடும் பக்தர்கள் கதம்பப்பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றனர்.

இது போலவே, விஷ்ணு புராணத்திலும் கதம்ப மரத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணனுக்கும் இந்த மலர் மிகவும் பிடிக்கும். இந்துக்களின் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த மலைச் சிகரங்களில் ஒன்றான கோமந்தா சிகரத்தில், கதம்ப மரம் மிக அதிகளவில் காணப்படுகிறது.

கதம்பா மூலிகை இமயமலை அடிவாரங்களில், குறிப்பாக, நேபாளத்தின் கிழக்குப் பகுதி முதல் பர்மா வரையிலுள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. மேலும், இது தென்னகப் பகுதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குன்றுப் பகுதிகளிலும் இவை மிக நன்றாக விளைகின்றது.

ஆயுர்வேதம்
இந்த மூலிகை ஆண்மைக் கோளாறுகளைப் போக்கி, நலப்படுத்த மிகவும் உதவுகிறது. இந்திரியத்தை அதிகளவில் உற்பத்தி செய்வதுடன், உடலுறவில் கூடுதல் இன்பத்தைத் தருவதிலும், பிறப்புறுப்புக் குறைபாடுகளுக்கும் இவை மிகவும் நன்மை பயக்கிறது.

பெண்களின் பிறப்புறுப்பு நோய்கள், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் சிக்கல், இரத்தசோகை, தோல்நோய்களுக்கு இது மிகவும் பயன்படுகிறது.

இரத்தச்சிதைவு, விஷத்தன்மைகளுக்கு எதிரான தன்மைகளைத் தோற்றுவிப்பதால் இது மிகவும் உதவுகிறது.

இதன் பழத்தைச் சாறு பிழிந்து, அதனைச் சீரகம், சர்க்கரையுடன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் அவர்களின் ஜீரண மண்டலம் சீராகச் செயல்பட உதவும். இந்த மூலிகை, இரத்தத்தைச் சுத்தப்படுத்தி அசுத்தங்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.

இந்த மூலிகையின் இலைகளைக் கஷாயமிட்டு, அதனைக் கொண்டு வாய் கொப்பளித்தால், வயிற்றுப் பிரச்னைகள், ஜீரண மண்டல குறைபாடுகள் குணமடைந்து நலன் ஏற்படும். மேலும், இது சிறுநீரை சீராக வெளியேற்றுவதுடன், சிறுநீர் பிரிவதில் ஏற்படும் குறைபாடுகளையும் சீர்ப்படுத்துகிறது.

பயன்படும் உறுப்புகள்
இந்த மூலிகையின் தண்டுப்பகுதி, பழங்கள், பூக்கள் ஆகியவை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

அளவு : இந்த மூலிகையைக் கஷாயமிட்டு, 50 முதல் 100 மில்லி வரையில் மருந்தாகத் தரலாம்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருக்கடம்பத்துறை (குளித்தலை - கடம்பர் கோயில்), திருகடம்பூர் திருஆலவாய், (கடம்பாவனம் - மதுரை) ஆகிய திருக்கோவில்களில் கடம்ப மரம் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்திருக்கோவில்கள் சார்ந்த ஊரும் மரத்தின் பெயரால் மரம் தலவிருட்சமாக அமைந்து உள்ளது சிறப்பாகும்.

திருக்கடம்பூர் (PINCODE - 639104) என்னும் ஊர் ஓமாம்புலியூருக்கு வடமேற்கில் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூருக்கு மேலைக் கடம்பூர் என்றும் பெயர் உள்ளது. இங்கு அமுதகடேசுவரர், சோதிமின்னம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்பு மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்பு மரத்தையும் சேர்த்து வணங்ஙகுகிறார்கள். திருக்கடம்பத்துறை (பின்கோடு - 639 104) எனும் ஊர் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 31 கி.மீ. தூரத்திலும், குளித்தலைக்கு வடிமேற்கே 2 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இவ்வூர் கடம்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கடம்பவனநாதர், முற்றிலா முலையம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

திருஆலவாய் (PIN CODE - 625 001) என்னும் ஊர் சோமசுந்தரக்கடவுள் 64 திருவிளையாடல்களை நடத்தியதில் இடம் பிடித்து உள்ளது. இவ்வூர் மதுரை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சொக்கநாதர், மீனாட்சி அம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்பு மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

அத்தீச்சுரம் (PINCODE - 627 412) என்னும் ஊர் ஆழ்வார் குறிச்சியிலிருந்து கடனாநதி அணைக்குப்போகும் நகரப் பேருந்தில் கல்யாணிபுரி நிறுத்தத்தில் இறங்கி சிறிது தூரத்தில் உள்ளது. இவ்வூர் சிவசைலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு சைவநாத சுவாமி, அத்ரீசுவரர், சிவசைவநாதர், பரமகல்யாணி ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் கடம்ப மரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.

சங்க இலக்கியம்
கபிலர் குறிஞ்சிப்பாட்டில் “பாங்கர் மரா அம்பல் பூந்தணக்கம் என்றார். “மரா அம்” என்ற இச்சொல் சங்க இலக்கியங்களில் எல்லாம் அளபெடை பெற்றே வருவது இதன் சிறப்பியல்பு.

சங்க இலக்கியப் பெயராக மரா அம் எனவும், அதன் வேறு பெயர்களாக மரவம், மரா, கள்ளி, கடம்பு எனவும், பிற்கால இலக்கியப் பெயராக கடம்பை, மராமரம் எனவும் உலக வழக்குப் பெயராக வெண்கடம்பு, வெள்ளைக் கடம்பு எனவும் கூறுவர். ஆங்கிலப் பெயராக “ஆன்தோ செஃபாலஸ் கடம்பா’ எனவும் குறிக்கப்படுகிறது.

உறுதி மிக்க பெரிய மரம். இது ஆலமரத்துடன் சேர்த்து பேசப்படுகிறது. ‘பூ’ வெண்ணிறமானது. கொத்தாகப் பூப்பது, சுண்ணாம்பு போன்ற வெண்ணிறமானது. இதன் வெண்மை ஒளியைக் கதிரவன் ஒளியோடு பொருத்தினார் கல்லாடனார். தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்ட ஒரு யானை, மலைப் பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை வெள்ளிய மழைத் துளிவிழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஓடி அலைந்தது என்பர்.

தெய்வங்களின் நிறத்தோடு மலர்களை அறிமுகம் செய்யும் கலித்தொகை. ஒரு காதணி கொண்டவனும் வெள்ளை நிறத்தவனும் வலிய நாஞ்சில் படையைக் கொண்டவனுமாகிய பலராமன் பசிய துளசி மாலை அணிந்திருப்பது போன்று மாமரத்தின் அகன்ற உயர்ந்த கிளைகளில் பசிய மயில்கள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறுகிறது.

பலராமன் மார்பில் அணிந்துள்ள வெண்மையான மரா மலர்த்தார் அருவி போன்றிருந்தது என்று கூறுவர் இளம் பெருவழுதியார். இம் மரத்தடியில் பலர் கூடும் மன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடியிடத்தில் போரில் புறங்கொடாது மாய்ந்த வீரரது நடுகல் நாட்டப்பட்டுள்ளது. இம்மரத்தின் சிறு தெய்வம் இடம் பெறுவதாகவும், இத்தெய்வம் கொடியேரைத் தெறுமென்றும் நம்பினர்.

“மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப” என குறுந்தொகை குறிப்பிடுகிறது. சங்க இலக்கிய நூல்களில் இதுபற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


யுனானி மருத்துவத்தில் களாமரத்தின் மருத்துவ குணங்கள்
தோற்றம் : இது ஒரு முட்களுடைய மரத்தின் பழமாகும். திராட்சையைப் போன்றிருக்கும். பழுத்தபின் இனிப்பாக இருக்கும். சிவப்பு நிறமாக மாறிவிடும். இதனுள் 2 அல்லது 3 விதைகள் இருக்கும். இவ்விதைகள் வெண்மை நிறத்தில் அகன்றிருக்கும். மல்லிகையைப் போல வாசனையுடைய மலர்கள், கிளைகளின் முனைகளில் சிவப்புநிற இலைகள் பூக்கள் போலவே காணப்படும்.

பச்சை வண்ண இலைகள் பளபளப்புடன் காணப்படும். பவழநிறத்தில் காய்களும், இவை முற்றிய நிலையில் கறுப்பாகவும் இருக்கும். கண் கவரும் குறுமரம். கண்களுக்கு மருந்துதரும் கனிகள். சாப்பாட்டுக்கு சுவையூட்டும் ஊறுகாய் முதலியவை தரும் மரமே களா மரமாகும்.

காரிசா கராண்டஸ் (CARISSA CARANDAS L.) எனும் அறிவியல் பெயர் கொண்டு “அப்போசைனேசி” என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும்.
வறட்சியான முட்புதர் காடுகளிலே நிறைய காணப்படும் மரம். புதராக வளர்ந்திருக்கும் மணல் மற்றும் பாறைப் பகுதிகளில் காணலாம். சுமார் 5 மீட்டர் உயரம வரை வளரக் கூடியது. ஆண்டு முழுவதும் பூத்தாலும் மார்ச்சு, ஏப்ரலில் அதிகம் பூக்கும்.

இயல்பு : குளிர்ச்சி, ஈரம் கொண்டது.

முக்கிய குணங்கள் : இதன் காய் மலச்சிக்கலை நீக்கும். வயிற்று வேக்காடு மற்றும் அழற்சியை நீக்குவதுடன் சக்தியையும் தருகிறது. இதன் பழமும் மலச்சிக்கலை நீக்குகிறது. பித்தக் கொதிப்பு மற்றும் தாகத்தைத் தணிக்கிறது. வயிற்று வேக்காட்டைத் தணித்து சக்தியைத் தருகிறது.

பயன்படுத்தும் முறை : இதன் காயுடன் உப்பு சேர்த்து தின்பண்டமாகவும் மற்றும் ஊறுகாய் தயாரித்து உணவிலும் சேர்த்துக் கொள்வார்கள். பித்தம் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது மிகவும் சிறந்ததாகும்.

மேலும் வயிற்றுக்குச் சக்தியளிக்கிறது. இதன் பழத்தைச் சாப்பிடுவதால் பித்தம் மற்றும் தாகம் தணிகிறது. அதிக பசியை உண்டாக்குகிறது. பித்தத்தால் உண்டாகும் பேதியைக் கட்டுப்படுத்துகிறது.

முக்கிய குணங்கள் : வாயுத் தொல்லையை அகற்றும். அதிகப் பசியை உண்டாக்கும்.

தீய விளைவுகள் : வயிற்றை உப்புசம் அடைய செய்கிறது. மெதுவாக ஜீரணிக்கும் தன்மையுடையது. மற்றும் ஆண்மைக்குத் தீங்கு விளைவிக்கும்.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை : இத்துடன் உப்பு, சர்க்கரை மற்றும் மிளகு கலந்து பயன்படுத்த வேண்டும்.

பழம் : பழுத்த பழங்கள் பசியை அதிகரிக்கின்றது.

* பித்தத்தைக் குறைக்கிறது.
* தாகத்தைத் தணிக்கிறது.
* பேதியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக பித்தம் அதிகரிப்பதால் உண்டாகும் பேதியைக் கட்டுப்படுத்த வல்லது.

காய் : காயைச் சாப்பிட்டால் அஜீரணத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்குகிறது.

காயை ஊறுகாயாகத் தயார் செய்து சாப்பிட்டால் பசியை அதிகரிக்கிறது. ஆனால் ஆண்மை சக்தியை பலவீனப்படுத்திவிடுகிறது.

இலைகள் : காட்டு களா மரத்தின் இலைகள் 6 கிராம் எடுத்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க வைக்கவும். இதேபோல் தினசரி தயாரித்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் காக்கை வலிப்பு நோய் குணம்பெற்றுவிடும். இளைஞர்கள் 12 கிராம் இலைகள் வரை அரைத்து தயிரில் கலந்து சாப்பிடலாம்.

உலர்ந்த களாவை தண்ணீரில் ஊற வைத்தால் இதில் காயின் மருத்துவ குணங்கள் உண்டாகிவிடுகின்றன. உஷ்ணத்தால் ஏற்படும் சொட்டு மூத்திரம் இதனால் குணம்பெறுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இதை அரைத்து பூசினால் ஈக்கள் உட்காருவதில்லை. இதை சட்னி அல்லது காய்கறியுடன் சமைத்து சாப்பிடுவதால் ஈறுகளின் நோய்கள் குணம் பெறுகின்றன.

களாக்காயின் பால் தோலின்மீது படும்போது சிலருக்கு கொப்புளம் உண்டாகிவிடும். ஜுரம் உண்டாகும். அந்நேரத்தில் களா இலைகளைக் கஷாயம் செய்து குடித்தால் முறிவு ஏற்பட்டு ஜுரம் நீங்கிவிடும்.

இலைகளை இடித்து அதன் சாற்றை தேனில் கலந்து குடிப்பதால் வறண்ட இருமல் குணம்பெறுகிறது. முதல்நாள் காலையில் களா இலைகளின் சாறு குடிக்க வைக்கவும். அடுத்த நாள் 12 கிராம். இப்படி 10 நாட்களில் 120 கிராம் வரை 10 மடங்கு அளவில் தினசரி அதிகரித்துக் கொண்டே போகவும். இப்படி காலையில் குடிக்க வைப்பதால் கிட்னி ஃபெயிலியர் நோய் (DROPSY) மற்றும் சிறுநீரக, கல்லீரல் நோய்கள் குணம்பெறுகின்றன என்று யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இதன் இலைகள் பித்தத்தை அதிகரிக்கின்றன. இம்மரப்பட்டையை கஷாயம் இட்டு குடித்தால் சிறுநீர் தாராளமாகப் பிரிகிறது.

களா விதைகளை எண்ணெயில் கொதிக்க வைத்து அந்த எண்ணெயைப் பூசினால் கால் பாதங்கள், உள்ளங்கை வெடிப்பை குணமாக்குகின்றன. அதிகமாக சாப்பிடுவதால் நுரையீரலுக்கும், இந்திரியத்திலும் கோளாறுகள் ஏற்படும். இதைத் தடுக்க முறிவு மருந்தாக உப்பு, வெல்லம், இஞ்சி சேர்த்து பயன்படுத்தலாம்.

சித்த மருத்துவத்தில் களாமரத்தின் மருத்துவ குணங்கள்
பூக்கள் : கண்களில் ஏற்படும் நோய்களுக்கு இதன் பூக்களை நன்றாகக் கசக்கி தினசரி காலை வேளையில் 3 துளிகள் விட்டு வந்தால் குணம்பெறும் மையில் களாப்பூ சேர்க்கப்படுகிறது.

காய் : சாப்பாட்டை ஜீரணிக்க உதவுகிறது. பசியை உண்டாக்குகிறது.

பழம் : இதனைச் சாப்பிட்டால் இரைப்பை வலிமை பெறுகிறது. உடம்பு சூடு தணிகிறது. ஆண்மை அதிகரிக்கிறது. அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் உண்டாக்கும். இதில் வைட்டமின் ‘சி’ சத்து உள்ளதால் சொறி, கரப்பான் வராமல் தடுக்கிறது.

விதை : விதையில் இருந்து எண்ணெய் எடுத்து சொறிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வேர் : குழந்தை பிறந்ததும் அழுக்கு, சூடு ஆகியவற்றைப் போக்கிவிடும் மருந்தாக உபயோகப்படுத்துகின்றனர். நாக்கு பூச்சிகளுக்கும், வயிற்று நோய்களுக்கும் மருந்தாகிறது.

தழை : விட்டு விட்டு ஏற்படும் காய்ச்சலுக்கு இதிலிருந்து எடுக்கப்படும் கஷாயம் மருந்தாகிறது.

* காயுடன், இஞ்சியைச் சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் சாப்பிட்டால், பசியின்மை, சுவை தெரியாமை, இரத்தத்தில் உள்ள பித்தம், அடங்காத தாகம், பித்தக் குமட்டல் ஆகியவை போகும்.

* வேரை உலரவைத்து பொடியாகச் செய்து சம அளவு சர்க்கரை கலந்து 3 கிராம் அளவு இருவேளை சாப்பிட்டு வந்தால் தாகம், அதிக வியர்வை தீரும்.

* இப்பழத்தை உணவு சாப்பிட்டபின் சாப்பிட்டால் விரைவில் ஜீரணம் ஆக்கும்.

* சுத்தமான பூவை நல்லெண்ணெயில் இட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டு துளிகள் தினமும் கண்களில் விட்டு வந்தால் கண்ணில் உள்ள வெண் படலம், கரும்படலம், இரத்தப் படலம், சதைப் படலம் தீரும்.

* 50 கிராம் அளவு வேரை நசுக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு 5-ல் ஒரு பங்காக ஆகும் அளவு காய்ச்சி வடிகட்டி 2 வேளை 50 மி.லி. அளவு கொடுத்து வந்தால் பிள்ளைப்பேற்றின் போது ஏற்படும் கருப்பை அழுக்குகள் வெளிப்படும்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்

கரியல் பால்வண்ணநாதர் ஆலயம், பொதிகை மலை (பாபநாசம்) பாபநாசர், பாபவிநாசர் ஆலயம் ஆகியவற்றில் களாமரத்தைத் தெய்வமாக வணங்குகிறார்கள்.

பொதிகை மலை (PINCODE-627 425)க்கு திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி ஆகிய ஊர்களிலிருந்து வரலாம். இவ்வூர் பாபநாசம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு பாபநாசர், பாப விநாசகர், லோக நாயகி, உலகம்மை ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் களா மரமாகும். இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் களா மரத்தையும் சேர்த்து வணங்குகிறார்கள். இதேபோல் பாபநாசம் என்னும் பொதிகை மலையில் பாபநாசர், பாப விநாசகர், லோகநாயகி, உலகம்மை தெய்வச்சிலைகள் கொண்ட பெரிய கோவில் ஒன்று இருக்கின்றது. இக்கோவிலின் தலவிருட்சம் களா மரமாகும். இக்கோவிலில் சிவபெருமான் கல்யாண சுந்தரராக அகத்திய முனிவருக்கும் லோபா முத்திரைக்கும் திருமணக் கோலம் காட்டிய புண்ணிய தலமாகும்.

திருநெல்வேலி, தென்காசி, அம்பா சமுத்திரம் ஊர் மக்கள் இங்கு அதிகளவில் இறைவனை தரிசிக்க வருகின்றார்கள். இங்கு அகத்தியர் கோவிலும், அகத்தியர் நீர் வீழ்ச்சியும் உள்ளது. இங்கிருக்கும் நடராஜரை அனுகு சபாபதி என்று அழைக்கின்றார்கள். இது திருவாசகத்தில் இடம் பெற்ற மிகப் பழமையான கோயிலாகும்.

கருத்துகள் இல்லை: