Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 16, 2009

ரத்த வித்திக்கு… எள்



எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.

எள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.

இதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

Tamil – Ellu

English – Gingeli Oil plant, sesame

Telugu – Nuvvulu

Sanskrit – Tila

Malayalam – Karuthellu

Botanical name – Sesamum indicum

இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

விதை

எள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்

உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு

கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்

பண்ணுக் கிடர்புரியும் பார்

இது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நல்லெண்ணெயைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எள்ளின் விதையில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும்.

எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.

வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

மூல நோயின் தாக்கம் குறைய

மூல நோய் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல் உண்டாகி மூலநோய் ஏற்படுகிறது. இந்த மூல நோயின் தாக்கம் உள்ளவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.

சரும நோய்கள் அகல

சருமத்தில் சொறி, சிறங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும நோய்கள் அகலும். அல்லது நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.

இரத்த சோகை நீங்க

கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப் படுத்தும். எள்ளுவை நன்கு காயவைத்து லேசாக வறுத்து பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச் சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் போக்கு மாற

வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.

பெண்களுக்கு

பூப்பெய்திய சில பெண்களுக்கு முறையாக உதிரப்போக்கு இருக்காது. மேலும் அடிவயிற்றுவலி போன்ற உபாதைகள் இருக்கும். இவர்கள் எள்ளை பொடி செய்து அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் மாத விலக்கு சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் இரத்தச்சோகை மாறும். இதை மாதவிலக்குக் காலங்களில் அருந்தக் கூடாது.

முடி உதிர்வது குறைய

எள்ளுவின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுகிறது. இதன் பயன்கள் அளப்பறியது. அது பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

கருவுற்ற பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். எனவே எள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த எள் கருக்கலைப்பு மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை நீக்கும்.

(வெட்டுக் காயங்களில் நல்லெண்ணெய் பட்டால் தேவையற்ற சதை வளரும். அதனால் காயங்களில் நல்லெண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)

கருத்துகள் இல்லை: