Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், நவம்பர் 12, 2009

தென்னாட்டில் கோயில்கள்

தென்னாட்டில் கோயில்கள்

“கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான். அந்தந்த நாட்டு மதங்களைச் சார்ந்து அங்குள்ள கோயில்களை மசூதி என்றும், சர்ச் என்றும், விஹார் என்றும் சினகாக் என்றும் அழைக்கிறார்கள். இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும் கோயில்கள் இருக்கின்றன தான். எல்லாம் பவித்திரமான இடங்கள் தான். ஆனால் தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம் மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும்.



அதிலும் தமிழ் நாட்டின் கோயில்கள் நம் மனதில், நம் வாழ்க்கையில், தமிழ் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளதற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். அதைத் தான் கோயிலே ஒரு அற்புதம் என்று சொன்னேன்.”

கோயில் எல்லோருக்கும் வழிபடும் இடமாக உள்ளது, உலகம் முழுதிலும். பிரார்த்தனை செய்யும் இடமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆண்டவனை நிைனைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு சென்று நம்மை இழக்கும் இடமாக, நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இடமாகவும் உள்ளது.



இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப்போக்கும் வழிமுறையும் நம் மனதை செயல்களை அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்ளும் இடமாகவும் இருந்துவருகிறது.



பெரும்பாலான கோயில்கள், அதாவது வழிபாட்டு இடங்கள் கட்டிடக் கலை உன்னதத்தை உணர்த்தும் சின்னமாகவும் இருக்கிறது. வானை முட்டும் கோபுரங்கள், மினார்கள் நம் மண்ணுலக அன்றாட வாழ்க்கைப் பிணைப்புகளிலிருந்துகொண்டும் அல்லது அவற்றிலிருந்து விடுபட்டும் வானை நோக்கி நம் பார்வையை இட்டுச் செல்லும் சின்னமாகவும் திகழ்கின்றன. பரந்து விரிந்து மண்ணையும், நெடிது உயர்ந்து விண்ணையும் இணைக்கும் தத்துவத்தை படிமமாக்குவது கோயில். மண்ணில் கால் பதித்து விண்ணை லட்சியமாகக் காட்டுவது கோயில்.



கோயிலின் உள்ளே கால் வைத்ததுமே அதன் பிரம்மாண்டம் நம்மை ஆட்கொள்ளும். நம் அகங்காரத்தை அழிக்கும். இப்பிரபஞ்சத்துள் நம் சிற்றுருவை நினைவு படுத்தும். உலகம் முழுதுக்கும் இவை பொதுவான விஷயங்கள்.

ஆனால் தென்னகக் கோயில்கள் அவற்றின் ஆயிரம் இரண்டாயிரம் என நீளும் வாழும் சரித்திரைத்தைப் பறை சாற்றும். வாழும் சரித்திரம் என்றேன். அழிந்து அல்லது அழிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புணரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்று நினைவுகள் கொண்ட கோயில்கள் பல இந்தியாவில் உண்டு. இன்றும் நாம் காணும் சோமநாதபுர கோயிலோ காசி விஸ்வநாதர் ஆலயமோ அவற்றின் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்தவை அல்ல. ஆனால் காஞ்சி கோயில்களோ, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோ அவற்றின் தொடக்க கால உருவை இன்னும் தம்முள் கொண்டவை. அவை 1500- 2000 ஆயிரம் கால நீட்சியின் சின்னங்களை, சாட்சியங்கள் தம்முள் கொண்டவை. பூதத்தாழ்வாரும் சுந்தரரும் வழிபட்ட கோயில்கள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றன.

ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பல பிரகாரங்களை, மண்டபங்களைத் தாண்டி கற்பக்கிரஹம் வரையிலான நம் சில நூறு காலடித் தடங்கள், இன்றிலிருந்து பல சரித்திர காலகட்டங்களைக் கடந்து தமிழ் நாகரீகத்தின் வரலாற்றுத் தொடக்கத்தைத் தொடும் நீண்ட பயணத்தின் தடங்களை நமக்கு வழியில் பல சான்றுகளோடு உணர்த்தும். கோயில் பிரகாரச் சுற்றுச் சுவர் கல்வெட்டுக்கள் கோயிலின் அவ்வக்கால நிர்மாண, நிர்வாக சரித்திரத்தைச் சொல்லும் ஆவணங்களாகும்.

கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம், திருவரங்கம்
தமிழ் வாழ்க்கையே கோயிலை மையமாகக் கொண்டதுதான். கோயில் தமிழனுக்கு வாழ்வளித்தது. அவன் கலைகளுக்கு ஊட்டம் கொடுத்து வளமும் வாழ்வும் கொடுத்தது கோயில். சங்கீதமும் நாட்டியமும் ஓவியமும், சிற்பமும் வளர்ந்தது அங்கு.தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி படைக்கக் காரணமாக இருந்தது கோயில். தமிழ் நாட்டுக் கோயில்களிலிருந்து பிறந்த பக்தி இயக்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் முழுதுக்குமான கலை, இலக்கிய,மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்துள்ளது.



அந்த ஆதர்சத்தின் நீட்சியை காரைக்கால் அம்மையாரிலிருந்து, பூதத்தாழ்வாரிலிருந்து தொடங்கி, இங்கு பாரதி வரையும், வங்கத்தில் தாகூர் வரையும் காணலாம். தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் பிறப்பித்தவை இக்கோயில்கள் தாம். ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் தாம் நடைப்யணம் கொண்டு தரிசித்த பெருமாணை, அவன் வதியும் கோயிலையும், ஊரையும் பாடிக் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பும் தந்து, தமிழுக்கு இலக்கிய வளமும் தந்து, கலைகளை வாழச் செய்த போன்ற ஒரு மரபும் சரித்திரமும் உலகில் வேறு எங்கு காணப்படுகிறது?

தமிழ் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அதற்குக் குணமும் வழிமுறையும் தந்த சரித்திரம் கொண்டவை நம் கோயில்கள். நம் கோயில்கள் கட்டிடகக் கலை வளர்ச்சியைச் சொல்லும் நிதர்சன ஆவணம். சிற்பக் கலைக் கூடம். ஒவியக் கலைக் கூடம். தஞ்சை பெரிய கோவிலிலிருந்து காஞ்சி மாவட்ட ஏதோ ஒரு கிராமத்து துர்க்கை அம்மன் கோயில் வரை கோயில்கள் பக்திக்கு மாத்திரம் உறைவிடமாக இல்லை. நாடகத்தையும் ஆடல் பாடல்களையும் கூத்துக்களையும் நாட்டுப் புற கலை வடிவங்களையும் வளர்த்தன. ஒரு ஊரின் மையமாக இருந்து கொண்டு அந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒன்றாக, ஒரு நாகரீகமாக அது இருந்துள்ளது.



தென்னிந்திய மனதுக்கு, இன்னும் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மனதுக்கு கோயில் என்ற பதம், சப்தம், படிமம், எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு அனுபவமாக இருக்கிறது. வரலாறு, அர்ப்பணம், பிரார்த்தனை, இலக்கியம், கலைகள், தத்துவம், வாழ்க்கை முறை, தெய்வம், மீட்சி என அத்தனையும் தன்னுள் கொண்ட, ஒன்றிணைந்த ஒரு அனுபவம். கோயில் வேறு எங்கும் இத்தனை அர்த்தங்களை, அனுபவங்களைத் தரும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கோயிலே ஒரு அற்புதம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் தமிழ் வாழ்க்கை இப்போது இந்த அடையாளங்களையெல்லாம் இழந்து வருகிறது. இன்னமும் சரியாகச் சொல்லப் போனால், முனைந்து அழிக்கப்பட்டு வருகிறது. கோயில் என்னும் அற்புதம் தன் பல திறத்த, பல வண்ண அடையாளங்கள் ஒவ்வொன்றாய் இழ்ந்து வருகிறது. அந்த அழிவின் வேகமும் அளவும் குணமும் இடத்துக்கு இடம் வேறுபட்டுக் காணப்பட்டாலும், ஒவ்வொரு கோவிலிலும் அழிவு என்பது ஒரு நிச்சயத்துடன் படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. நிகழ்த்தப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டுவிட்டன.கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் அசுத்தப்படுத்தப்படுகின்றன. கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிகின்றன. பராமரிப்பு காணும் இடங்களில் அதன் வரலாற்று அடையாளங்கள், அதன் புனிதத்வம் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு கலையுணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட சமூகத்தில், தமிழ் நாட்டின் ஒவ்வொரு கோவிலும் அதன் முழுமையில், அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்த இரண்டும் இன்றைய சமூகத்தில் வரண்டுவிட்டன. ஒரு போலியான பகுத்தறிவின் தாக்கத்தில், கலையுணர்வும் வரலாற்றுணர்வும் அற்ற பகுத்தறிவு அது, அழிவு தான் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.

மனித ஜீவனில் வேதனைகளுக்கு ஏமாற்றங்களுக்கு குறையுண்டா? சில சமயங்களில் ரொம்ப சின்ன விஷயங்கள் கூட கிட்டாதவையங்கள் ஆகிவிடுகின்றன. எவ்வளவோ பெரிய தலைகள் உதவியும் கூட சாதாரண காரியங்கள் கூட நடப்பதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில் முறையிட்டுக்கொள்ள தன் வேதனையைச் சொல்ல ஒரு பெரிய சக்தி வேண்டும். தெய்வ நம்பிக்கை அதைத்தான் தருகிறது. வேதனைகள், ஏமாற்றங்களிடையேயும் ஒரு நம்பிக்கை பெற்று நிம்மதி கொள்ளமுடிய வேண்டும்.
“கோயிலின் அர்த்தங்கள் அதன் பயன்பாடுகள், தரும் அனுபவங்கள் என நிறையச் சொன்னேன். நம்மில் பலருக்கு கோயில் தெய்வத்தின் இருப்பிடமாதலால் முதன்மையாக வழிபாட்டுக்கான, வேண்டுதலுக்கான, நம் குறைகளை முறையிடுவதற்கான இடம். வாழ்க்கையில் நிம்மதி பெற அது மிக முக்கியம்.”

படைப்பாளர் விவரம்
வெங்கட் சாமிநாதன்
தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். விமர்சன பிதாமகர்.
இடுகையிட்டது

கருத்துகள் இல்லை: