Vaalga
வெள்ளி, நவம்பர் 13, 2009
மண் விளக்கும், மனித வாழ்வும்!
கார்த்திகை மாதம் தீபமேற்றும் திருநாளின் வரவைக் கூறும். கார்த்திகைத் திருநாள் அன்று மண்ணால் ஆன நிறைய அகல் விளக்குகளை ஏற்றி வைப்போம். ஒளி வீசும் விளக்குகள் வாழ்வின் தத்துவத்தையும் விளக்குகின்றன. வெள்ளி, வெங்கலம் என்று பல உலோகங்கள் இருக்க, மண்ணால் ஆன விளக்குகளை ஏற்ற என்ன காரணம்? மனித வாழ்வு நிலையற்றது. மண்ணோடு மண்ணாக கலந்து விடும் என்பதை நமக்கு உணர்த்தவே! அதுமட்டுமின்றி, மண்ணிலே பிறந்த மனிதன் மண்ணிலே மடிகிறான். எங்கு வாழ்க்கை ஆரம்பமாகிறதோ அங்குதான் கடைசியில் வாழ்வும் முடிகிறது. எதுவும் மனிதனுக்கு சொந்தமல்ல. எல்லாம் மண்ணுக்குத் தான் சொந்தம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால், பணிவும் அடக்கமும் தானே வந்து விடும். அகல் விளக்குகளில் ஒரு திரி போடுவதற்கு வசதியாக ஒரு முகம் மட்டுமே இருக்கும். பரம்பொருள் ஒன்றே என்பதை உள்ளங்கை நெல்லிக் கனி போல் உணர்ந்து கொள்ள முடியும். ஒருமுகம் என்பது மனத்திற்கும் சொந்தமானது. மனத்தை ஒருமுகப்படுத்தி, தன்னுள் மறைந்திருக்கும் சக்திகளை உணர்ந்து கொண்டால் மனிதன் ஆக்கப் பூர்வமான செயல்களை செய்ய முடியும்.
நிலையற்ற மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு அளித்த வரம் என்பதை உணர்ந்து கொண்டு பிறர்க்கு இயன்ற வரை உதவுவோம். வாழ்க்கை அழகாக அர்த்தமுள்ளதாக மாறி விடும். புற இருளை அகற்றும் விளக்குகள் நம் அக இருளையும் நீக்கட்டும்!
குரு பலன்
குருப் பெயர்ச்சிக்கு மட்டும் என்ன விசேஷம்? சுபக் கிரகமான குரு புத்திர பாக்கியத்தை அருளும் புத்திரக்காரகனாக இருப்பதால்தான் ஒவ்வொரு ஆண்டும் குருப் பெயர்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதன் தனி ஒருவனாக வாழும் போது அவன் வாழும் வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. குடும்பம் என்ற அமைப்பு மூலமே மனிதன் தான் வாழும் சமூகத்தில் அந்தஸ்தும், பெருமையும் அடைகிறான். குடும்பம் என்கிற அமைப்பு திருமணம் என்னும் பந்தம் மூலம் ஏற்படுகிறது ஆதலால்தான் மனித வாழ்க்கையில் "இல்லற தருமம்" முக்கிய இடம் வகிக்கிறது. எனவேதான் ஒருவருக்குத் திருமணம் ஆகும் காலம் வந்து விட்டதா என்று கேட்கும் போது, "குரு பலன் வந்து விட்டதா?" என்று கேட்பார்கள். இல்லறத்தோடு தொடர்புடையது வம்ச விருத்தி. மனித குலம் வாழையடி வாழையாய்த் தழைக்க குருவருள் வேண்டும்.
திருமணம், புத்திர பாக்கியம் இரண்டும் தர்மத்தின் அடிப்படையில் இயங்க வேண்டும். இவற்றை அருள்பவர் தர்மாதிபதியான குரு பகவான். குரு பலன் வந்து விட்டதா என்று கேள்வி கேட்பதின் காரணம் இதுவே. மனிதன் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்திருந்தாலும், திருமண வைபவம் என்பது அவரவர் குல வழக்கப்படி, தர்ம நூல்களில் சொல்லி வைத்த முறைப்படி நடைபெறுகிறது. செல்வங்களுள் சிறந்ததாகக் கருதப்படும் மழலைச் செல்வத்தை மனிதன் தர்மத்தின் அடிப்படையில்தான் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே தர்மாதியதிபதியான குருவை புத்திரக் காரகனாக ஆக்கி வைத்தார்கள் போலும்!
திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் அனைவருக்கும் மண மாலை சூடும் பாக்கியத்தை குரு அருளட்டும். கெட்டி மேளம் முழங்கட்டும்!
From
www.mazhalaigal.com/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக