நடைப்பயிற்சி உடலுக்கு வலுவைத் தருவதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இன்று நடைப்பயிற்சி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் நோய்களின் பாதிப்புக்கு ஆளானவர்கள். இனி நீங்கள் நடைப்பயிற்சி செய்வதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்திய பிறகுதான் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றனர்.
முன்பெல்லாம் மக்கள் எல்லோரும் தூரத்தில் இருக்கும் இடத்திற்குச் செல்வதென்றால் கூட நடந்தே செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அடுத்த தெருவிற்கு செல்வ தென்றால் கூட வாகனத்தை பயன் படுத்துகின்றனர். நடை என்பது பலருக்கு சுத்தமாக மறந்துபோய்விட்டது.
பழங்காலத்தில் அரசர்கள், செல்வந்தர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் காக்க ஆன்மீகத் தலங்களுக்கு நடந்து செல்வார்கள். இதனால்தான் அவர்கள் நோய்களின் தாக்கமின்றி வாழ்ந்தனர்.
இப்போது மேல் மாடிக்கு கூட ஏற முடியாமல் தவிப்பவர்கள்தான் ஏராளம். முதல் தளத்திற்கு செல்வ தென்றால் கூட லிப்ட்-க்காக காத்து நிற்கின்றனர்.
இப்படியாக பலருக்கு நடை என்பதே மறந்துபோய்விட்டது. இது போல் பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு என்பதே இருப்பதில்லை. அவர்கள் உடல் பிற்காலத்தில் எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாக அனைவரும் காலையில் 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று கூறுவது சோம்பேறித்தனம் தான்.
நாம் கடந்த இதழ்களில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம் பற்றி அறிந்தோம். இந்த இதழில் பின்னோக்கி நடை பற்றி தெரிந்துகொள்வோம்.
நடைப்பயிற்சி செய்யும்போது 10 நிமிடம் பின்னோக்கி அதாவது பின்பக்கமாக சிறிது தூரம் நடப்பது நல்லது. இவ்வாறு பின்னோக்கி மெதுவாக நடப்பது நல்ல உடற்பயிற்சி செய்வதற்கு சமம்.
பின்னோக்கி நடப்பதால் முதுகு தண்டுவடப் பகுதி பலம் பெறும். இதனால் முதுகு வலி, தோள் பட்டை வலி நீங்கும். பின்னோக்கி நடக்கும்போது கழுத்துப் பகுதியை அங்கும் இங்கும் திருப்புவதால் கழுத்து வலி நீங்கும். மேலும் தோள் பிடிப்பு இடுப்புப் பிடிப்பு குறையும். சுவாசம் சீராகும்.
இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் குறையும்.
தொடை, கால்களில் உண்டாகும் வலி நீங்கும்.
கால் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால், பாதங்களில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதனால் உடல் புத்துணர்வு பெறுகிறது.
உடலில் வியர்வை நன்கு வெளியேறும்.
மேலும் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும்.
சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்களுக்கு பின்னோக்கிய நடையினால் உடல் புத்துணர்வு பெறும்.
தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது சிறிது நேரம் பின்னோக்கி நடந்து வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக