Vaalga
வெள்ளி, நவம்பர் 20, 2009
ஆரோக்கியக் குளியல்
நாம் ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கப் போகிறோம். நாம் தூங்கும்போது நம் புலன்கள் அனைத்தும் ஓய்வெடுக்கின்றன. சில முக்கியமான உறுப்புகளைத் தவிற, நம் உறுப்புகள் அனைத்தும் பல கழிவுகளை நம் உடலில் உற்பத்தி செய்கின்றன. அந்தக் கழிவுகள் நம் உடலில் சேரும்போது நம் உடலில் ஒரு துர்நாற்றம் ஏற்படுகிறது, அந்தக் கழிவுகளை சுத்தம் செய்யாமல் அப்படியே சேரவிட்டால் அந்தக் கழிவுகள் நம் உடலுக்கு நோயை விளைவிக்கும். ஆகவேதான் குளிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாள் நாம் தூங்கும்போதும் விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்லுவார்கள் அது ஒரு தற்காலிக மரணம் என்று. ஆகவே நாம் பிறந்த போது நம்மைச் சுற்றி இருந்த வேண்டாத அழுக்குகளை நீக்க நம்மைக் குளிப்பாட்டுகிறார்கள். அது போல நாம் ஒவ்வொரு நாளும் இறந்து பின் மீண்டும் பிறக்கிரோம். அப்படிப் பார்க்கும்போது தினமும் நம்மைச் சுத்தம் செய்து கொள்ள குளித்துதானே ஆகவேண்டும், அதனால்தான் குளிக்கிறோம்.
குளிப்பது என்னும் வழக்கம் ஏன் ஏற்பட்டது, சுத்தமும் சுகாதாரமும் புரிய ஆரம்பித்தபோது, நீரினால் நம் உடலைக் கழுவினால் அசுத்தங்கள் நீங்கிவிடும் என்று உணர்ந்த போது, ஏற்பட்ட ஒரு நடைமுறைதான் குளியல் என்பது.
குளிப்பதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.
முதலில் ஏற்பட்டது ஆற்றுக் குளியல். நாம் நதிக்கரையில்தான் நம் நாகரிகத்தை தொடங்கினோம். ஆற்றுக் குளியலில் பலவகையான அபாயங்கள் உண்டு. காவிரியில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், பெண்டிரும் ஆடவரும் குளித்துக் கொண்டிருப்பார்கள், திடீரென்று நீர் ஏகத்துக்குப் பெருகி வெள்ளமாய் வந்து பலரை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. அது மட்டுமல்ல ஆற்றில் குளிக்கும் போது எந்த இடத்தில் ஆழம் அதிகம், எங்கு குளித்தால் நீரோட்டம் நம்மை அடித்துகொண்டு போகாமல் இருக்கும் என்பது தெரிந்து குளிக்க வேண்டும். சில இடத்தில் பாறைகள் நீட்டிக் கொண்டிருக்கும். நாம் குளிக்கும்போது அந்தப் பாறைகள் நம் கையையோ காலையோ கிழித்துவிடக்கூடும். ஆக அந்த ஆற்றில் ஏற்கெனெவே குளித்துப் பழக்கப்பட்டவர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு பிறகு ஆற்றில் குளித்தால் நல்லது.
அடுத்ததாக கிணற்றுக் குளியல். பல கிராமங்களில் விவசாயத்தை முன்னிட்டுப் பெரிய கிணறுகளை வெட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கிணறுகளில் பல சிறுவர்கள் மேலிருந்து சத்தம் வரும்படியாக குதித்து நீரைக் கிழித்துக்கொண்டு நீந்திக் குளிப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் எங்கு பள்ளமாய் இருக்குமென்று. அங்கு போகும் போதுமிகவும் எச்சரிக்கையுடன் போவார்கள். அதுமட்டுமல்ல கிணற்றில் சில சமையம் தவளை, மீன்கள் பாம்பு போன்றவை இருக்கக் கூடும். அவைகள் வந்தால் எப்படி சமாளித்து மேலே வரவேண்டும் என்று அவர்களுக்கு இயல்பாகவே பயிற்சி வந்துவிடும்.
அடுத்ததாக குளங்களில் குளித்தல். இது மிகவும் ஆபத்தானது, ஏனென்றால் குளங்களில் பாசி போன்ற தாவரங்கள் நம்மை வழுக்கி விட்டுவிடும். அதுமட்டுமல்ல, தாமரை, அல்லி போன்ற மலர்களின் கொடிகள் குளங்களில் கீழே வேரூன்றி இருக்கும். அந்தத் தாவரத்தின் தண்டுகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இருக்கும். நாம் கீழே சென்று நீந்தும் போதோ, அல்லது பாசியின் வழுக்கலாலோ உள்ளே விழுந்து கீழே சென்று மேலே வர முயலும் போது நம் கால்கள், கைகள் அந்தத் தாவரத்தின் பின்னலில் சிக்கிக்கொண்டு நம்மை மேலே வரமுடியாமல் செய்துவிடும் அபாயம் உள்ளது. இதனால் மூச்சுத்திணரி இறக்கும் வாய்ப்பு அதிகம்.
அடுத்ததாக கடல் குளியல். மாசிமகம் அன்று கடலில் குளித்தால் புண்ணியம் என்னும் நம்பிக்கை இருக்கிறது, அப்படிக் கடலில் குளிக்க ஆசை கொண்டோர் கவனிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருக்கின்றன. கடல் அலைகள் கடலின் ஓரத்திலேதான் இருக்கும். அந்த அலைகளில் லாவகமாக இறங்கி நீந்தி நடுக்கடலுக்கு செல்ல வேண்டும். அப்படிச் செல்லும்போது நம்மால் எவ்வளவு தூரம் நீந்த முடியும் என்று நம்மை, நம்முடைய திறனை எடைபோடாமல் அதிக தூரம் கடலுக்குள் செல்லக் கூடாது. நீந்தத் தெரியாதவர்கள் கடலில் இறங்கவே கூடாது, ஏனென்றால் அலைகள் கரைக்கு வரும்போதே சீற்றத்துடன்தான் வரும். வந்துவிட்டுப் பின்னுக்குத் திரும்பும்போது மிகவேகமாகத் திரும்பும். அப்படித் திரும்பும் கடலலை என்னதான் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் காலை வாரி இழுத்துக்கொண்டு போய்விடும்.
நீந்தத் தெரிந்தவர்களா யிருந்தாலும் கடலுக்குள் போகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நீந்தத் தெரிந்தால் மட்டும் போதாது. கடல் நீருக்கு இயல்பாகவே ஒரு அழுத்தம் உண்டு. அந்த அழுத்தத்தை சமாளிக்கப் பழக வேண்டும். அதுவுமன்றி சுறா, திமிங்கிலங்கள் போன்ற பெரிய வகை மீன்கள் கடலில் உண்டு, அவைகளிடம் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது கடினம்.
சரி ஆறு, குளம், கிணறு இவைகளில் குளிப்பதற்கு இவ்வளவு தெரிந்திருக்க வேண்டுமா நமக்கெதற்கு வம்பு என்று வீட்டிலேயே குளியலறையில் குளிக்கலாம் தவறில்லை, ஆனால் குளிக்க வேண்டும்.
ஆமாம் ஏன் குளிக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எப்படிக் குளிக்க வேண்டும் என்று பார்க்கலாமா? என் தாயார் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ரகசியத்தை இப்போது சொல்லப் போகிறேன்.
எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் நீர்நிலைகளில் குளிக்கும்போது அந்த நீர்நிலை குளிப்பதற்கு ஏற்றதுதானா என்று தெரிந்து கொண்டு குளிக்க வேண்டும். அப்படிக் குளிப்பதற்கு முன்னால் அந்த நீர் நிலையிலிருந்து சிறிதளவு தண்ணீரை வலது கைகளின் உள்ளங்கை அளவு எடுத்து மூன்று முறை குடித்துவிட்டு, பிறகு குளித்தால் அந்த நீர் நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பார்கள், ஏனென்றால் உள்ளே இருப்பதும் அந்த நீர்நிலையின் தண்ணீர், வெளியே நம் உடலில் படுவதும் அந்த நீர்நிலையின் தண்ணீர் எனும்போது இரண்டும், அதாவது உள்ளும் புறமும் சமனப்பட்டு எவ்வித எதிர் விளைவுகளும் ஏற்படுத்தாமல் இருக்கும் என்பார்கள் என் தாயார். இன்று வரை நான் அதைக் கடைபிடித்து இருக்கிறேன். நாடகம், திரைத்தொடர்கள், திரைப்படம் போன்றவைகளில் நடிக்க நான் பல ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். பல நீர் நிலைகளில் குளித்திருக்கிறேன், ஆனால் எந்த நீர்நிலைகளும் என்னை பாதித்தது இல்லை.
வீட்டில் நாம் குளிக்கும்போது நீரை அதிகம் செலவழிக்காமல், ஆனால் சுத்தமாகக் குளிப்பதற்கு ஒரு முறை இருக்கிறது. நீரால் முதலில் உடலை நனைத்துக்கொண்டு நாம் உபயோகிக்கும் சோப்பை எடுத்து முதலில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு, நீரால் கழுவிவிட்டு பிறகு உடலை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் கண்களில் சோப்பு உள்ளே சென்று கண்கள் எரிவதை தடுக்கலாம். மற்றும் நாம் கண்களால் நன்றாகப் பார்த்து மற்ற பாகங்களை சுத்தம் செய்ய வசதியாய் இருக்கும். சோப்பைக் கைகளில் தடவிக்கொண்டு கைகளால் உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு பிறகு நீரைத் திறந்து குளிக்க ஆரம்பித்தால் குறைவான அளவு தண்னீரிலேயே சுத்தமாகக் குளித்து விடலாம். பிறகு தலையில் தண்ணீரை ஊற்றி ஷாம்பூவோ, அல்லது சிகைக்காயோ தேய்த்துக்கொண்டு உடனே தண்ணீரால் தலையைக் கழுவிவிட்டு உடனடியாக முதலில் தலையைத் துடைத்துக் கொண்டால் சளிபிடிப்பது, தலை வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து தப்பித்துவிடலாம். பிறகு உடலை சுத்தமாகத் துடைத்துக்கொண்டு வெளியே வந்து கன்னடியில் முகம் பார்த்துத் தலை சீவும் நேரத்துக்குள் தலை முடி காய்ந்து பதமாகவும் இருக்கும்.
முக்கியமான ஒரு செய்தி இருக்கிறது. தூங்கும் போது நம் உறுப்புகள் இளைப்பாறுகின்றன. அப்படி இளைப்பாறும் போது அந்த தசைகள், இறுகிவிடுகின்றன. அப்படி இறுகிவிட்ட தசைகளைத் தளர்த்தி எளிதாக செயல்படுத்த நம் உள்ளங்கைகளினால் நன்றாகத் தேய்த்து விடுவதால் அத்துணை தசைகளும் மீண்டும் புத்துணர்வு பெற்று இயல்பாக இயங்கத் தொடங்கும்.
இதைத்தான் அழகு நிலையங்களில் மசாஜ் என்று சொல்லுகிறார்கள். மருத்துவமனைகளில் ஹீட் தெரப்பி என்றும் சொல்கிறார்கள். நம் பணத்தையும் வீணடித்து இவ்வாறெல்லாம் செய்வதை விட தினமும் குளிக்கும்போது நம் உள்ளங்கைகளால் நாமே நம் உடலை நன்கு தேய்த்துப் புத்துணர்வு பெறச் செய்யலாமே. என்ன தினமும் குளிப்பது எவ்வளவு நல்லது என்று புரிகிறதா? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமன்றோ?
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
அதிகாலை குளிக்கும் நோக்கம்
(அசலம்)
அதி காலை குளிப்பதின் நோக்கம் பற்றி ஒரு கட்டுரை எழுத திரு நடரஜன் கல்ப்பட்டு அவர்கள் வேண்ட, இதோ எம்மால் முடிந்ததை எழுதுகிறோம். தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துமாறு வாசகர்களை கோருகிறோம்.
ஒரு நல்ல காரியம் அல்லது தெய்வீகக் காரியத்தில் ஈடுபடும்போது, குளிக்க வேண்டும். எதற்கு? நம் தேகத்தை சுத்தம் செய்து, செய்யும் காரியத்திற்குத் தகுதி கொடுப்பதற்காக. தேகம் மலினமாக இருந்தால் நாம் செய்யும் காரியத்திலும் மலினம் வர ஹேதுவாகும். நம் கையில் மண் துவண்டு கிடக்கும்போது, நாம் ஏதொரு தின்பண்டத்தைக் கையால் எடுத்தாலும் அதில் மண் புரண்டுவிடும். அதை புஜித்தால் வயத்துக்கோளாறு ஏற்ப்படும், இல்லையா? அதைத் தடுக்கவே, நாம் தேகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவே குளிக்கிறோம். நம் தேகத்தில் பற்றியுள்ள வியர்வை நாற்றம் நாம் ஈடுபடும் காரியத்தில் நம் கவனத்தைச் செலுத்தாமல் நாற்றத்தையே கவனித்துக் கொண்டிருப்போம். செய்யும் காரியம் ஈடேறாது.
வேதாந்த வழியில் சிந்த்திப்போமானால், நாம் பகலில் உணர்வுடன் இருப்பதற்கு ஜீவித்திருக்கிறோம் எனக் கொள்வோம். அப்படியாகில் இரவில் உணர்விழந்து இருப்பதால் தார்காலிக மரணம் எனக் கூறவேண்டும். மறு நாள் எழுந்ததும் மீண்டும் உணர்வுடன் இருக்கிறோம். அதாவது மீண்டும் பிறக்கிறோம். ஒரு குழந்தை பிறந்ததும் என்ன செய்வோம்? அதை முதலில் குளிப்பாட்டுவோம், இல்லையா? அதுபோல் பிறக்கும்போது குளிக்க வேண்டும். ஏனென்றால் அது மறு பிறவிக்கு சமானம். புதிது உடுப்பதற்குமுன் குளிப்பது அவசியமல்லவா? அதேபோல் புது வாழ்வு துவங்குமுன் குளிப்பது அவசியம். புது வாழ்வு எப்போது துவங்குகிறது. நாம் உணர்விற்கு வந்ததும், அதாவது, உறக்கத்திலிருந்து எழுந்ததும். இது தாற்காலிகப் பிறப்பு இறப்பு. ஆனாலும் தினம் நிகழும் ஒரு நிகழ்ச்சி. அதனால் தினமும் அதிகாலை குளிக்கிறோம். இது நமக்கு ஒரு சுறுசுறுப்பைத் தருகிறது.
எழுந்ததும் நாம் சிறுனீர் கழிப்பதும், மலவிஸர்ஜனம் பண்ணுவதும் எதற்கு? நம் உடலில் முன் தினம் சென்ற ஆஹாராதிகள் தகனத்திர்க்கு பிறகு மீதமிருக்கும் அழுக்கு வஸ்த்துக்களை களைய. அப்படியானால் நம் தேகம் மலின்ப்பட்டுவிட்டது இல்லையா? அப்படி மலினத்தை நீக்கினால் தேகத்தை சுத்தம் செய்யவேண்டாமோ? தவிர, உறக்க்த்தில் சோம்பேரியாக இருந்தோம். சுறுசுறுப்பு வர நல்ல ஜெலத்தில் குளிப்பது அவசியம்.
தெய்வீகமாகப் பார்த்தால், அதி காலை குளிக்க வேண்டும். ஏன்? சூரியன் நமக்குக் கண்ணில் படும் தெய்வம். தெய்வ ஸன்னிதியில் குளிக்காமல் இருக்கலாமோ? அதனால் சூரியன் உதிக்குமுன் அவரை வரவேற்க சூரியோதயத்திற்கு முன்னமேயே குளிக்கிறோம். தெய்வத்தின்முன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த கருத்தே. ஒரு பூஜையில் ஈடுபடும்போது, தேகசுத்தம், மனச்சுத்தம், சித்த சுத்தம் என்று மூன்று வகை சுத்தங்கள் தேவை. தேக சுத்தம் நம் உடலில் ஊறும் நாற்றத்தைக் களைய. மன சுத்தம் மனதை விசாரத்திலிருந்து விடுபடுத்தி ஏகாக்ரமாக வைத்தால் தான் செய்யும் காரியத்தில் மனம் ஈடுபடும். மனம் ஈடுபடாமல் செய்யும் காரியம் பலனளிக்காது. சித்தமும் சுத்தமாக வேண்டுமானால் நம் விசாரம் ஸாத்வீகமாக இருக்க வேண்டும். தெய்வம் சுத்தவஸ்து. அது நித்திய வஸ்து. அது ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முப்புடிக்கு அப்பர்ப்பட்டது. நாம் இம்மூன்று பிணியிலும் அகப்பட்டுள்ளோம். தெய்வசிந்தனைக்கு இந்த மூன்றுவகை (தேக, மன, சித்த) சுத்தங்கள் தேவை. அதில் முதலில் தேகசுத்தம். காலையில் எழுந்ததும் நாம் பூஜை, ஜெபம் இத்யாதிகளில் ஈடுபடுவோம். அப்பொழுது இந்த மூன்றுவகை சுத்தமும் தேவை. ஆகையால் அதிகாலை குளீப்பது மிக அவசியம்.
அசலம்
எப்பொழுதெல்லாம் நீராட வேண்டும்?
ஆசாரக் கோவை குறிப்பிடுவது இது!
தேவர் வழிபாடு; தீக்கனா வாலமை;
உண்டது கான்றல்; மயிர் களைதல் உண்பொழுது
வைகு துயிலொடு இணை விழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல்; ஏனை மயிலுறல்; ஈரைந்தும் ஐயுறாது ஆடுக நீர்!
(நீர் நிலைகளில்) எப்படி நீராட வேண்டும்?
நீராடும் போழ்தில் நெறிப்பாட்டார் என்ஞான்றும்
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும் தலையொழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவினர்!
குளிப்பது என்பது உடல் அழுக்கு துர்நாற்றம் நீங்கி ஆரோக்கியமாக இருக்க என்பதற்காகத் தானே அல்லாது வேறெதற்கும் அல்ல. இறை வழிபாட்டிற்கு முன் குளிப்பது என்பது கூட, ஆரோக்கியத்தின் காரணத்திற்காகத்தான்.
"உடலார் அழியின் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
அது ஒரு நல்ல குடிப்பிறப்பு உருவாக்கும் அடிப்படை ஒழுக்கம். தாயோ தந்தையோ அதனை குழந்தைகளுக்குப் போதிக்காத வரை, வழக்கத்தில் வராது. ( குளு குளு அறையில், வேலை ஏதுமின்றி இருப்பாருக்கு வியர்வை வர வாய்ப்பே இலாத வகையில், துர்நாற்றம் வர வாய்ப்பில்லை என்பதால் ஏன் குளிக்க வேண்டும் எனக் கேட்கும் அறிவுபூர்வமான ??!! குழந்தைகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல?)
அன்புடன்
செபரா
குளிப்பது குறித்து எனது கருத்தாவது யாதெனில் அதுவும் இவ்வுலகில் இன்பம் தரும் செயல்களில் ஒன்று என்பதாகும். ஆறுகளிலும் அருவிகளிலும் நீராடும் இன்பம் தன்னை மறந்து அனுபவிக்கத் தக்கது. உடலின் களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் இயற்கையோடு இயைந்து இன்புறச்செய்கிறது நீராடல்.
இதனால்தான் தற்காலப் புலவர் ஒருவர், "குற்றாலம் அருவியிலே குளித்ததுபோல் இருக்குதாம், மனசை மயக்குதாம் சுகமும் கிடைக்குதாம்" என்று பாடியுள்ளார். இப்பாடல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்" எனும் திரைப்படத்தில் தன் காதலியாக நடிக்கும் ராஜசுலோசனாவுடன் கிணற்றடியில் நீராடும் காட்சியில் இடம் பெறுகிறது.
பாகவத புராணத்தில் கிருஷ்ண பரமாத்மா கோபிகாஸ்த்ரீகளுடன் நீராடி மகிழ்ந்ததை ஜலக்ரீடை என்ற உலகியல் இன்பம் காண்பதற்கொப்பாகக் குறிப்பிடுகின்றனர் நம் முன்னோர்கள்.
இதனை ஸ்நானவின்பம் என்று மஹாகவி பாரதியார் தமது பகவத்கீதை உரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"இனி, புத்த மதம் இழைத்த பெருந்தீங்கு யாதெனிலோ இடைக்காலத்து மாயாவாதத்தை நம்முள்ளே எழுப்பிவிட்டது. உபநிஷத்துக்களிலும் வேதத்திலும் 'மாயா' என்ற சொல் பராசக்தியை குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்றதொரு வாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய்; தேவர்கள் பொய்; சூரிய நக்ஷத்திராதிகள் பொய்; மனம் பொய்; சைதந்யம் மாத்திரம் மெய். ஆதலால், இந்த உலகத்துக் கடமைகளெல்லாம் எறிந்துவிடத் தக்கன. இதன் இன்பங்களெல்லாம் துறந்துவிடத் தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. 'இவ்வுலக இன்பங்களெல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம்; இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும் தேடப் புகுதல் மடமையாகும். எனவே எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது. ஆனால், இவர்கள் எல்லா இன்பங்களையுந் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி, இவர்கள் அங்ஙனம் உண்மையிலே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை, கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம். அது மிக சுலபமுங்கூட. இந்தச் சோம்பேறித்தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்க வில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நானவின்பத்தைத் துறக்கவில்லை. தூக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயிரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மடாதிபதிகள் பணவின்பத்தையுந் துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.
ஆகிரா
குளிப்பது உடலை குளிமை படுத்துவதற்காக் அல்ல, சுத்தப்படுத்துவதற்காக. நமது பண்பாடு, நாகரிகம், குளிக்கும்பொழுது, வேத மந்திரம் "Aapo bhawantu peetaye Shanyorabhi sravantu nah" சொல்லிகொண்டு குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தணணீருக்கு மட்டும் அல்ல, நாம் தொடர்ப்பு (contact) கொள்ளும் பூமி, தண்ணீர், காற்று, நெருப்பு, ஈதர், புத்தி, மனம், தான் (என்னும் அகங்காரம்) யாவற்றுடனும் மனப்பான்மை (Mental attitude) இருக்க வேண்டும்.
இதை மனதில் கொண்டுதான் பெரியவர்கள் ஐந்து வகையான குளியல் முறையை, பணக்காரன், ஏழை, ஆரோக்கியமானவன், நோயாளி, வரண்ட பூமியில் வசிப்பவன், ஏரிகள் சூழ்ந்த (ாஷ்மீர் பகுதியில்) வசிப்பவன், ஆண், பெண் இருபாலருக்கும், உகந்தவாறு, ஏற்படுத்தியுள்ளனர். முதலாவது பஸ்மஸ்நானம்.(சம்ஸ்கிருதத்தில் ஸ்நானம் என்றல் நீராடுதல், பஸ்மம் என்றால் விபூதி என்று அர்த்தம்). தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடத்தில், சாம்பல் (விபூதி), மண், இவற்றை உடலில் பூசிக்கொள்வது. இதில் மற்ற இந்து தனிமங்கலும் (Elements) பல அளவுகளில் கலந்துள்ளது. இந்த தனிமங்கள் கடவுளின் வெளிப்பாடு (manifestation of Lord) என்ற ஞாபகம் சுத்ததை (Purity) அளிக்கும்.
இரண்டாவது ஜலஸ்நானம்;
மூன்றாவது அக்னிஸ்நானம் - இதை Sun Bath என்று சொல்லலாம். மண்ணிலும் தண்ணீரிலும் சுத்தப்படாதது அக்னியால் கட்டாயம் சுத்தமாகும். சில சாதுக்கள் நெருப்பை தன்னை சுற்றி மூட்டி அதன் நடுவில் உட்காருவார்களாம். உஷ்ணத்தினால் உடலில் உள்ள வியர்வை வெளிப்பட்டு உடல் தூய்மையாகும்.
நான்காவது காற்று குளியல் - மனிதன் எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும், நோயாளியானலும், நிம்மதியின்றி மனசஞ்சலமுடையவனானாலும், சுவாசப் பயிற்ச்சியினானால் (குரு மூலமாக) breathing exercise உடல் நலம் பெற்று, தேகத்தில் பொலிவு, புற அக அழகு பெறலாம். சுவாசப் பயிற்ச்சியினால் சுத்தம் அடைவது காற்று குளியல் எனப்படும்
ஐந்தாவது ஈதர் குளியல் - யோகத்தில் இது மிகத்தூய்மையான ஒருமைப் படுத்தல் எனப்படும் (ethereal concentration). ஐந்து தனிமங்களில் ஒன்றை விட அடுத்தது அதிகத் தூய்மை வாய்ந்தது. அதாவது மண்னைவிடத் தண்ணீர் தூய்மையனது, தனண்ணீரைவிட நெருப்பு, நெருப்பைவிடக் காற்று, காற்றைவிட ஈதர் தூய்மையானது.
குளிக்காமல் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது. குளிப்பது நம்மை தூய்மைபடுத்துகிறது, சுகாதரமற்ற சூழ்நிலையில் தினமும் நம் உடல் அழுக்கடைகிறது, குளிப்பதால் உடல் தூய்மையாக்கப்படுகிறது. குளியல் சோம்பேறித்தனத்தைப் போக்குகிறது, புத்துணர்வைத் தருகிறது. மனதை பலப்படுத்துகிறது. திடமான மனதுடன், புத்துணர்வு பெற்ற தேகத்துடனும் நாம் வேலையை அதிகத் திறமையுடன் செய்ய முடியும்.
இறைப்பற்றுக்கு அடுத்தது தூய்மை என்று சொல்லப்படுகிறது. தூய்மையும், அசுத்தமும் எல்லா செய்கைகளிலும் கலந்துள்ளது என்பது பொதுக்கருத்து. மிகப்பல சமயப் பழக்க வழக்கங்களில், தூய்மை முக்கியத்வம் வாய்ந்துள்ளது. கலப்படம், மாசு (pollution); எச்சில் (spittle) இன்னும் பல அசுத்தமாகக் கருதப்படுகிறது. மேலைய நாட்டிற்குச் செல்வதும்,(சாஸ்திரப்படி); கீழ்தரமான இடங்களில் சஞ்சரிப்பதும், கொள்கைகளில் மாறுவதும், உடலில் ஏற்படும் கழிவுகள், இவைகளும் உடலை அசுத்தப்படுத்துகின்றன.
சுத்தமானது, உடல், மனம், உணர்ச்சிப் பெருக்கு (Emotion); மதச்சடங்கு முறை; ஆன்மீக நிலை இவற்றைச் சார்ந்தது.
அடிக்கடி குளிப்பதால் உடல் சுத்தம், தியானத்தினால் மன சுத்தம், அமைதியாக இருப்பதாலும், நல்ல சேர்க்கையாலும்; உணர்ச்சி சார்ந்த சுத்தம், சாஸ்த்திரப்படி "நியாய, "நியம"ங்கள், ஜப தபம், கடைப்பிடிப்பதால் மதச்சடங்கில் சுத்தமும்; பிராயச்சித்தத்தினால் ஆன்ம சுத்தமும் கிடைக்கப்பெறலாம்.
பெரியவர்கள் சொல்லியிருப்பது குளிர்ந்த நீரில் குளிப்பதும், வெந்நீர் குடிப்பதும் சாலச்சிறந்துது என்று (ஆனால் நாம் கடைப்பைடிப்பதோ நேர் எதிர்). ஆற்றில் ஓடும் திசை நோக்கிக் குளிப்பது மிக நல்லது. நீரில் மூழ்கிக் குளிப்பது (ஆவாகஹன ஸ்நானம்) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குளத்தில், கிணற்றுத் தண்ணீரில் குளிக்கும் பொழுது கூட கிழக்கு நோக்கி நின்று குளிக்க வேண்டும்.
இரவில் குளிப்பதும், வெந்நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆடை இல்லாமல் குளிப்பது தவறு. இது தடைபடுத்த்ப்பட்டுள்ள்து (strictly prohibited). குளித்தபிறகு, துவைத்து, காயவத்த உடையைத்தான் அணிய வேண்டும்.
நம் பெரியவர்கள் குளிப்பதை பலவகைப்படுத்தி உள்ளனர: 1. மந்த்ர ஸ்நானம் 2. பௌம ஸ்நானம் 3. ஆக்னேய ஸ்நானம் 4. வாயவ்ய ஸ்நானம் 5. திவ்ய ஸ்நானம் 6. மானச ஸ்நானம் 7. வருண ஸ்நானம்
குளிக்கும் நேரத்தைக் கொண்டு - ப்ராத ஸ்நானம் (early morning bath), மாத்யானிக ஸ்நானம் (சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது குளிப்பது), க்ரியங்க ஸ்நானம் (done on special occassion)
பார்வமணி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக