கடுக்காய் மரம் (Terminalia Chebula)
கடுக்காய்(Terminalia Chebula, Retz; Combretaceae)
திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் - பாடல் :
அணங்குமை பாக மாக
அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
மருந்துநல் அருந்த வத்த
கணபுல்லர்க் கருள்கள் செய்து
காதலாம் அடியார்க் கென்றுங்
குணங்களைக் கொடுப்பர்
போலுங் குறுக்கைவீ ரட்டனாரே
கடுக்காய் புராணங்களிலும் வேதங்களிலும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சராக்கா சம்ஹிதா, சுஸ்ரூதா சம்ஹிதா போன்ற சமஸ்கிருத நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட யுனானி மருத்துவ நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் தினசரி உணவுக்குப் பின் ஒரு கடுக்காயைக் கடித்து அதன் சாற்றை விழுங்கி வந்தால் எந்த நோயும் அவரை நெருங்காது என்று ஒரு பழமொழி கூறுகின்றது.
சிவபெருமானுக்கு வீரட்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு திருக்குறுக்கை ஊர் மக்கள் ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள்.
‘காமதேவன்’ என்பவன் கடுக்காய் விதையிலிருந்து மதுபானத்தை தயாரித்து குடிப்பானாம். அதைக் குடித்துவிட்டு மன்மத லீலைகளில் ஈடுபடுவானாம். அதனால் அந்தக் காமதேவனுக்கு மன்மதன் என்ற பெயரும் இருந்ததாம்.
சமஸ்கிருதத்தில் கடுக்காயை ஹரிதாக்கி என்றழைப்பார்கள். சிவபெருமானின் இன்னொரு பெயர் ஹரா என்பதாகும். சிவபெருமானின பேரைக் கொண்டே இம்மரம் விளங்குகிறது. கடுக்காய் மரம் இருக்கும் இடத்தில் சிவன் இருப்பதாக இந்து சமுதாய புராணங்கள் கூறுகின்றன.
கடுக்காய் மூன்று நிலைகளில் பறிக்கப்படுகின்றன. மாங்காய் பிஞ்சுகளைப் போல் விதை பிடிக்காமல் இருக்கும் நிலையில் பறித்து உலர வைக்கும் காயை ‘தான்றிக்காய்’ என்பார்கள். இது உலர்ந்த பின் கறுப்பாக இருக்கும்.
மரத்திலேயே விதை பிடித்து பழுத்து மஞ்சள் நிறமாக இருக்கும் போது பறிக்கப்படும் கடுக்காயை ‘மஞ்சள் கடுக்காய்’ என்றழைப்பார்கள். காய் பழுத்து முதிர்ந்து தானாக பூமியில் விழும் பழத்தை ‘காபூலி கடுக்காய்’ என்றழைப்பார்க்ள. மேற்கண்ட மூன்று விதமான கடுக்காய்க்கும் தனிதனியாக மருத்துவக் குணங்கள் அமைந்திருக்கின்றன.
தான்றிக்காய்
இதை வறுத்துப் பவுடராக்கி மூன்று கிராம் அளவில் சாப்பிட்டால் நாள்பட்ட பேதி குணமாகும். தான்றிக்காயை நெய்யில் ஊற வைத்து அதன் மீது கோதுமை மாவைப் பூசி மூடி விட வேண்டும். அதை நெருப்புக்குள் ஒரு மணி நேரம் வரை புதைத்து அதன் பின் அதை வெளியே எடுத்து மாவைச் சுத்தப்படுத்தி அதற்குள் இருக்கின்ற தான்றிக்காயை மட்டும் வெட்டிச் சிறிய துண்டுகளாக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட கடுக்காயின் ஒரு துண்டும், கற்கண்டும் தாடையில் வைத்துக் சுவைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா, இளைப்பு, இருமல் ஆகியவை குணம்பெறும்.
கடுக்காய்
மஞ்சள் நிற முதிர்ந்த கடுக்காயைத் துடைத்து அதன் தோலை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு, வீக்கம், வலி, கட்டிகள், மருக்கள் குணமாகும். மலத்துவார மூலக்கட்டிகளைக் கடுக்காய் எண்ணெய் குணப்படுத்தும். நல்லெண்ணெயில் ரோஜாப்பூ இதழ்களைக் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை மீண்டும் அடுப்பில் ஏற்றி அது கொதிக்கும் போது தேன் மெழுகும், கடுக்காய்ப் பவுடரும் கலக்க வேண்டும். இது களிம்பாக மாறிவிடும். இதை மலத்துவாரத்திற்குள் பூசினால் மூலக்கட்டிகள் கரையும். மேலும் மலச்சிக்கல், மூலக் கட்டிகள் குணம்பெற மூன்று கிராம் கடுக்காய்த தூளை காலை மாலை இரண்டு வேளை தண்ணீருடன் வயிற்றுக்குள் சாப்பிட வேண்டும்.
தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக வைத்துக் கொட்டையை நீக்கித் தோலை மட்டும் பவுடராக்கி 3 கிராம் முதல் 5 கிராம் வரை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். மண்டைச்சளி, மூக்கடைப்பு நீங்கும். புண்கள், காயங்கள், வீக்கங்கள், இரத்த மூலம், ஜலதோஷம், வாயு வலிகள், வயிற்றுச் சுரப்பிகளின் வீக்கம், கடுமையான ஜுரம், மதுப்பழக்கத்தினால் உண்டாகும் ஜன்னி போன்ற நோய்கள் குணமாகும். இப்பவுடரில் உப்பு கலந்து சாப்பிட்டால் இளமையில் நரைக்கும் தலைமுடி கறுப்பாகும்.
மஞ்சள் கடுக்காயைத் தோலை தண்ணீரில் அரைத்து இமைகளில் பூசினால் கண் நோய், எரிச்சல், உஷ்ணம் நீங்கும். கடுக்காய் மரப்பட்டையின் உட்பகுதியைப் பவுடராக்கித் தண்ணீரில் பிசைந்து விரைகளின் மீது பூசினால் ஹெர்னியா என்னும் குடல்வாத வலி நீங்கும்.
சித்த ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் கடுக்காயை ‘தாய்’ என்றே அழைப்பார்கள்.
தாய் பிள்ளையின் மீது கோபம் அடையலாம். ஆனால் தாய் உள்ளம் படைத்த கடுக்காய் எப்போதும் கோபம் அடையாது என்று அவர்கள் கூறுவார்கள்.
கடுக்காய்த் தோலைப் பவுடராக்கி 3 கிராம் அளவில் தினமும் சாப்பிட்டு வந்தால் முதல் மாதம் பலவீனம் நீங்கும். 2வது மாதம் கண்பார்வை உண்டாகும். வியாதிகள் நீங்கும். 3வது மாதம் கண்பார்வை அதிகரிக்கும். 4வது மாதம் இதய பலவீனம் நீங்கும். 5வது மாதம் நரைமுடி கருப்பாகும். 6வது மாதம் இந்திரியக்கசிவு, இந்திரியஸ்கலிதம் நோய் குணம்பெறும். 7வது மாதம் ஆண்மை சக்தி அதிகரிக்கும். 8வது மாதம் ஞாபக சக்தி அதிகரிக்கும். 9வது மாதம் ஐம்புலன்கள் வலுவடையும். 10வது மாதம் கூர்மையான புத்தி உண்டாகும். 11வது மாதம் உடலும், உள்ளமும் சந்தோஷம் அடையும். இதைத்
தேனில் கலந்து சாப்பிடலாம்.
60 கிராம் கடுக்காய்த் தோலைப் பவுடராக்கி 120 கிராம் கருப்பு வெல்லத்தில் கலந்து 6 கிராம் எடை கொண்ட மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இதைக் காலை, மாலை இரண்டு வேளை வெந்நீருடன் அல்லது மோருடன் சாப்பிட்டால் இரத்தம் கொட்டும் மூலம், இரத்தம் கொட்டாத மூலம் குணம்பெறும்.
கடுக்காய்த்தூள் 25 கிராம், யானைத் திப்பிலி 25 கிராம், பெருங்கடுக்காய் 80 கிராம், விதைகளை அகற்றி சுத்தமாக்கப்பட்ட கிஷ்மிஷ் பழம் 50 கிராம் அனைத்தையும் இடித்து ஒரு கிராம் எடை கொண்ட மாத்திரைகளாகத் தயார் செய்து கொள்ள வேண்டும். இதைத் தினமும் மூன்று வேளை வெந்நீருடன் சாப்பிட்டால் வாயுக்கோளாறு, பசியின்மை, ஜீரணக் கோளாறுகள் குணம் பெறும்.
80 கிராம் வாசலைனில் 10 கிராம் கடுக்காய் பவுடரைக் கலந்து களிம்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தீச்சுட்ட புண் மற்றும் இதர புண்களைக் குணமாக்க இதைப் பூசலாம்.
விஞ்ஞான ஆய்வு
கடுக்காயில் டேனின், மைரோ பெவினின், ராவ்ஜேபோவோனிக் ஆசிட் மற்றும் எண்ணெய் வஸ்துக்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் கிடைக்கும் யுனானி மருந்துகள்
இத்ரஃபீல் உஸ்துகுத்தூஸ் லேகியம் : மண்டைச்சளி, சைனஸ், நாள்பட்ட தலைவலி இவற்றைக் குணமாக்கும்.
இத்ரஃபீல் ஷஹத்ரா லேகியம் : தோல் வியாதிகளைக் குணமாக்கும். இரத்தத்தைச் சுத்தமாக்கும். காதிலிருந்து சீழ் வடிவதைக் குணமாக்கும். வெட்டை நோயை நீக்கும்.
இத்ரஃபீல் கிஷ்ணிஜி லேகியம் : காது, மூக்கு, தொண்டைக் கோளாறுகள் நீக்கும்.
இத்ரஃபீல் முலையன் : மலச்சிக்கலை நீக்கும்.
இத்ரஃபீல் மக்வி தமாக் : மூளை வளர்ச்சி, ஞாபக மறதி பிரச்சினைகளைக் குணமாக்கும்.
இத்ரஃபீல் ஜமானி : கண் பார்வையைக் கூர்மையாக்கும்
இத்ரஃபீல் அஃப்தி மூன் : சந்தேகம், மனநோய், மூளைக் கோளாறுகள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட்டால் நரைமுடி கறுப்பாகும்.
இத்ரஃபீல் தீதான் : 10 கிராம் லேகியத்தை தினமும் 4 வேளை இரவில் படுக்கும் போது தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்ட பின் பேதியை உண்டாக்கும். மாத்திரையைக் காலையில் ஒருவேளை சாப்பிட்டால் நாக்குப்பூச்சி அனைத்தும் வெளியேறிவிடும்.
இத்ரஃபீல் சனாயி : நாள்பட்ட மலச்சிக்கல், மனநோய், நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணம்பெறும்.
இத்ரஃபீல் ஸகீர் : மூலம், தலைவலி நீங்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இத்ரஃபீல் குதாதி லேகியம் : தைராய்டு, கண்டமாலை பிரச்சினைகள் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக