Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, நவம்பர் 13, 2009

வாழ்க்கை நெறி காட்டிய சர்வக்ஞர்

சர்வக்ஞர் கர்நாடகத்தின் நாடோடிக் கவிஞர். ஊர்ஊராகச் சென்று தன் சின்னஞ்சிறு மூன்றடிக் கவிதைகளால் மண்ணில் நல்ல வண்ணம் வாழ, வாழ்க்கை நெறிமுறைகளைப் பரப்பியவர். மழுங்கச் சிரைத்த தலையும், அறிவொளி வீசும் கண்களும், மலர்ந்த முகமும் கொண்டு அரையில் கோவணத்தோடு அவர் நாடெங்கும் சுற்றினார். அவரின் உடைமைகளோ பிச்சையெடுக்க ஒரு திருவோனு, தோள் மீது தொங்கும் ஓர் எளிய போர்வை, கையில் பிடித்த ஓர் ஊன்றுகோல் அவ்வளவே தான். இப்படியும் வாழ முடியுமா? சர்வக்ஞர் இப்படி வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல, உலகம் பயனுற வாழ்ந்தார். புகழோடு வாழ்ந்தார். கன்னட மொழியின் பெருங்கவிஞர், பக்தர், ஞாநி என்று இன்றும் அவர் போற்றப்படுகிறார்.

சர்வக்ஞருடைய பெற்றோரைப் பற்றியோ, பிறந்த தேதியோ வருடமோ கூட யாருக்கும் சரியாகத் தெரியாது. அவருடைய கவிதைகளில் வரலாற்றுக் குறிப்புகளாக பதினான்கு பாடல்கள் உள்ளன. ஆனால் அவை அவர் எழுதியவையா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. ஏனெனில் அவரது கவிதைகள் என்று கிடைத்தவற்றில் சில பிரதிகளில் மட்டும் அந்தப் பதினான்கு பாடல்களும் உள்ளன. எனவே அவை பின்னர் எவராலோ எழுதிச் சேர்க்கப்பட்டவை என்ற கருத்தும் உள்ளது. எப்படியும் அவர் கர்நாடகத்தின் தார்வார் மாவட்டத்திலுள்ள அம்பலூர் என்ற இடத்தில் பிறந்தாரென்பதும், அவருடைய தந்தையின் பெயர் பசவராசா என்பதும், அவர் அந்தணர் என்பதும் தெரிய வருகிறது. அவருடைய இளமைப் பருவத்தைப் பற்றியோ, அவர் எங்கே, யாரிடம் கல்வி கற்றார் என்பதோ தெரியாது. அவரது இயற்பெயர்கூட என்னவென்று தெரியாது. அவருக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் தெளிவான அறிவு இருந்ததால், எல்லாம் அறிந்தவர் என்று பொருள்படும் சர்வக்ஞர் என்று மக்கள் அவரை அழைத்தனர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார் என்பது அவரது பாடல்களில் இங்கிதமாக அல்லது முத்திரையாக சர்வக்ஞர் என்ற பெயர் வருவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றியும் தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் சில பாடல் குறிப்புகளாலும் புறச் சான்றுகளாலும் அவர் விஜயநகர் சாம்ராஜ்யத்தின் பொற்காலத்தில் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருந்தார் என்று கருதப்படுகிறது.

சர்வக்ஞர் ஒரே இடத்தில் நிலைத்து வாழாமல் ஊர்ஊராகப் போய்க் கொண்டிருந்ததால், அவரது பாடல்களைப் பல ஊர் அன்பர்கள் அவ்வப்போது எழுதி வைத்த பனையோலை ஏட்டுச் சுவடிகளிலிருந்து 300 பாடல்களை ஜெர்மன் பாதிரி விர்த் என்பவர் 1868இல் பதிப்பித்து வெளியிட்டார். பிறகு உத்தங்கி சின்னப்பா பாதிரி ஒரு நீண்ட அறிமுக முன்னுரையோடு சர்வக்ஞரின் முழுப் பாடல் தொகுப்பு என்று 1924இல் ஒரு நூலை வெளியிட்டார். அதில் 1928 பாடல்கள் காணப்பட்டன. அதன் மறுபதிப்பில் பாடல் எண்ணிக்கை 2100 ஆக உயர்ந்தது. 1980இல் மைசூர் பல்கலைக் கழகம் ஒரு புதிய தொகுப்பை வெளியிட்டது. டாக்டர் எல்.பசவராஜு பதிப்பித்த இந்நூலில் 1002 பாடல்களே நிச்சயமாக சர்வக்ஞர் இயற்றியவை என்று காணப்படுகிறது.

சர்வக்ஞரின் பாடல்கள் தாழிசையமைப்பில் மூன்று அடிகளாய் அமைந்துள்ளன. அதற்கு திரிபதி என்று பெயர். வீரசைவ இலக்கியத்தில் காணப்படும் வசனம் என்றும் இவற்றைக் கூறலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களைப் பற்றியும் சர்வக்ஞர் பாடுகிறார். இந்த மூன்றடிகளிலே இப்படித்தான் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலையும் 1330 பாடல்களில் குறள் வெண்பாக்களில் திருவள்ளுவர் பாடினார். ஒன்றேமுக்கால் அடிகளில் பாடப்பெற்ற குறளின் பெருமையை ‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ என்று திருவள்ளுவ மாலையில் இடைக்காடர் என்ற புலவர் பாடினார். அதையும் குறுக்கி ‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்.’ என்று தமிழ் மூதாட்டி ஔவை பாடினார். இப்படியே அறம், பொருள், இன்பம், வீடு பற்றி தெலுங்குக் கவி வேமனாவும் தனது வேமன பத்யங்கள் என்ற நாலுவரிப் பாடல்களில் பாடினார் இந்த வரிசையில் ராஜா பர்த்ருஹரியையும் சேர்க்க வேண்டும். இவர்கள் நால்வரும் வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துத் தந்த சான்றோர்; பெருங்கவிகளும் ஆவர். இவர்களுடைய பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவற்றுள் பெரும் ஒற்றுமையைக் காணமுடிகிறது.

வாழ்க்கையில் வளமும், மகிழ்ச்சியும் இருந்தால் தான் பயனுள்ள வாழ்க்கையாக அமையும்-அதற்கு உடலையும் உள்ளத்தையும் நன்கு பேணவேண்டும். சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் வலிமையாக இருந்தால் தான் உயிர் நன்கு இயங்க முடியும். அதற்கான சில எளிய வழிகளைக் காட்டுகிறார் சர்வக்ஞர். “பசி இல்லாத போது உண்ணாதே. பசி வந்தால் அதை அலட்சியம் செய்யாதே. அதிகச் சூடானதையோ, அதிகமாகக் குளிர்ந்ததையோ, மிகப் பழைய உணவையோ உண்ணாதே. ஒரு நாளைக்கு இருமுறையே உண். உண்ட பிறகு நூறடி நடக்க வேண்டும். அதன் பின்னர் இடப்புறமாகப் படுக்க வேண்டும். இப்படிச் செய்தால் மருத்துவருக்குத் தேவையில்லாது போகும்.”

இந்த அறிவெல்லாம் இவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று யாரோ ஒருவர் கேட்டார். அதற்கு சர்வக்ஞர் சொன்னார். “ஒவ்வொருவரிடமிருந்து ஒரு வார்த்தை கற்றுக் கொண்டேன். அதுவே மலையளவு அறிஞனாக ஆக்கிவிட்டது.”

மிகச் சிறந்த தகுதியும் தொழிலும் எது? உழவுத் தொழிலே என்று சர்வக்ஞர் சொல்லுகிறார்.

தகுதிகளில் தலையாயது உழவுத் தொழிலே
ஏரே நாட்டை நடத்துகிறது;
இல்லையெனில் நாடே நிசிந்து விடும்.

வள்ளுவரின் குறள் நினைவுக்கு வரவில்லையா? உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும், ஏர்த் தொழிலின் பின்னேயே நிற்கிறது.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை.

அதுவே மற்றைத் தொழில் செய்வோர் எல்லாரையும் தாங்குகிறது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

கல்வியைப் பற்றிச் சிறப்பாகப் பேசும் சர்வக்ஞர் வித்யவே தாய்தந்தே புத்தியே சோதரனு’ என்று ஒரு பாடலில் கல்வியே தாய், தந்தை, புத்தியே சகோதரன் என்று குறிப்பிடுகிறார்.

இல்லறம் என்ற நல்லறம் நடக்க என்ன தேவை?
“விருந்தோம்பும் வீடு

தேவைக்கு வேண்டிய பொருள்
இங்கிதம் அறிந்த இல்லாள்
இவை மட்டும் இருந்தால்
சொர்க்கத்தை எரித்து விடு
சர்வக்ஞா”

அதாவது இல்லறம் நன்கமைந்து விட்டால், அது சுவர்க்கத்தை விட உயர்ந்தது.

சாதிகளற்ற ஒரு சமூக அமைப்பை சர்வக்ஞர் விரும்பினார். பல சமயங்களில், பல பாடல்களில் அவர் சாதி வேற்றுமைகளைக் கடுமையாகச் சாடினார்.
எலும்புதோல் போர்த்த திவ்வுடல்
அழுக்கும் மலமும் புழுக்களும் உறையும்
இவ் வுடலின் சாதி புகல்வாய் சர்வக்ஞா

இயற்கையில் எல்லாம் பொதுவே. எனவே சாதியும் குலமும் பற்றிப் பேசத் தேவையில்லையே!
நடக்கும் மண்
குடிக்கும் நீர்
தீ, வானம், சூரியன்
இவை எல்லார்க்கும் பொதுவே
பின் சாதி குலம் பற்றி
ஏன் பேச்சு, சர்வக்ஞா
பின் யார் உயர்ந்தவன் என்ற கேள்விக்கு விடை வருகிறது.
அந்தணன் ஒருவன் அடுத்தவன் தாழ்ந்தோன்
இருவர் வீட்டிலும் எரியும் விளக்கில்
ஒளியில் வேற்றுமை ஒன்றுமே இல்லை
ஒன்று கூடி ஒன்று குறையுமோ?
சாதியில் உயர்வு சாதியில் தாழ்வு
என்றே பேசுதல் என்னே மடமை!
ஈசன் அருளைப் பெற்றவன் எவனோ
அவனே உயர்ந்தவன் சர்வக்ஞா

சர்வக்ஞர் முற்றும் துறந்த முனிவர். ஆசைகளை வென்றவர். அவருக்கு எதுவும் தேவையில்லை. தன்னை விடப் பெருஞ்செல்வர் யாருமில்லை என்று ஒரு பாடலில் பேசுகிறார்.

மு.ஸ்ரீனிவாஸன்

கருத்துகள் இல்லை: