ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?
அரவிந்தன் நீலகண்டன்
அச்சிட
“திகட சக்கரச் செம்முகமைந்துளான்” எனத் தமது கந்த புராண அரங்கேற்றத்தைத் தொடங்குகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். அவரது கனவில் கந்தக்கடவுளே தோன்றி கந்த புராணத்தைத் தமிழில் பாடச் சொல்லி “திகட சக்கரம்” என அடி எடுத்துக்கொடுத்திருக்கிறார். பாடலைச் சொல்லி “திகட சக்கரச் செம்முகமைந்துளான்” என்பதை “திகழ் தசக் கர செம்முகம் ஐந்து உள்ளான்” என்று பதம் பிரித்தார். சபையில் இருந்த ஒரு புலவர் எழுந்தார். “திகழ் தசக்கரம் என்ற இரு சொற்கள் திகட சக்கரம் எனப் புணர விதி இல்லை” என்று ஆட்சேபித்தார்.
அது அன்றைய தமிழகம். தலைவரைப் போற்றி கவிதை பாடி காக்கா பிடிக்கும் கூலிக் கவிஞர்களும் வால் பிடித்து பிழைக்கும் வாலிக் கவிஞர்களும் தமிழை மாசு படுத்தாத காலம். கூர்மையான கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்லியாக வேண்டும். “இறைவன் சொன்ன வரி” என்றா சொல்ல முடியும்? அரங்கேற்றம் நின்றது. கச்சியப்பர் அன்றிரவு உணவு உண்ணாது வெறுந்தரையில் படுத்தார். மறுநாள் பதில் சொல்ல வேண்டும். சபை கூடியது. அப்போது அங்கே ஒரு புலவர் வந்தார். வீரசோழியம் என்ற இலக்கண நூலைக் கற்றோர் கூடிய சபையில் நீட்டினார். அந்நூலில் சந்திப்படலத்தில் பதினெட்டாம் செய்யுளில் திகடச்சக்கரம் என்பதற்கான விதி இருந்தது. சபையோர் ஏற்றனர். கொண்டு வந்த புலவர் மறைந்தார். இது ஐதீகக்கதை.
பொது வழக்கிலும் இத்தகைய கதை ஒன்று உண்டு. கம்பரின் சேது பந்தனப் பாடலில் “துமி தம் ஊர் புக, வானவர் துள்ளினார்” எனும் வரியில் துமி என்னும் வழக்கை சோழ அரசவைக் கவிஞர் ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்தார். கம்பர் அவ்வாறு உண்டு என வாதிக்க அதனை அறிய இருவரும் ஊருக்குள் அத்தகைய வழக்கு இருக்கிறதா என அறியச் சென்றனர். ஊர்ப்புறத்தில் ஆயர் குடியில் ஒரு அம்மை தன் நான்கு குழந்தைகளை தயிர் கடையும் போது துமி பட்டுவிடும் விலகுங்கள் என்று சொல்ல ஒட்டக்கூத்தர் அச்சொல்லாட்சி இருப்பதை ஒத்துக்கொண்டார். அப்படி ஆயர் குலப் பெண்ணாக சரஸ்வதியும் நான்கு குழந்தைகளாக வேதங்களும் வந்ததாகச் சொல்வர்.
இந்த ஐதீகங்களும் கதைகளும் சொல்லும் செய்தி தான் என்ன?
ஒரு இலக்கண நூலுக்குள் நம் தமிழ் மொழியை அடைக்க இயலாது. ஒரு சமுதாய வட்டத்துக்குள் பேச்சு நடை மட்டுமே செம்மை எனச் சொல்ல முடியாது. இது நம் பண்பாட்டில் ஊறிய விஷயம். ஆனால் மனித மனத்தின் ஒரு ஆதாரப் போக்கு அப்படியல்ல. அதற்கு ஒரு நூலுக்குள், ஒரு சட்டகத்துக்குள் எல்லாவற்றையும் போட்டு அடைத்திட வேண்டும். அடங்காததை சிறுமைப்படுத்தி, அன்னியப்படுத்தி அழித்துவிட அது துடிக்கும். ஒற்றைத்தீர்வே, ஒரு சட்டமே, ஒரு வழக்கே சரியென அது கூறும். இந்த ஒற்றைத்தீர்வு அது புனித வெளிப்பாடாகட்டும் அல்லது ஒரு மனிதனின் சிந்தனையில் உதித்த பெருங்கனவாகட்டும் (மார்க்சியத்தைப் போல) அது என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், அத்தகைய ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும்.
ஆனால் இந்த ஒற்றைத் தன்மையைத்தான் மேற்கத்தியப் பண்பாடு சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் முன்வைத்தது. உலகெங்கிலும் காலனியம் மூலமாக பரப்பியது. ஆனால் இப்பிரச்சனையின் வேர்கள் இன்னும் ஆழமானவை. யூதர்களான உளவியலாளர் டானா ஸோகரும், இயற்பியலாளர் இயான் மார்ஷலும் தங்கள் குழந்தைகளை பௌத்த கோவில்களுக்கு அழைத்து வருகின்றனர். ஆசியத் தொன்மங்களையும் தரிசனங்களையும் கூறுகின்றனர். யூதேய-கிறிஸ்தவ சூழலிலேயே வளர்ந்த குழந்தைகள் மிகவும் சங்கடமாக உணர்கின்றனர். “அப்படியானால் எது உண்மை?” என அவர்கள் வினவுகின்றனர். ஸோகரும் மார்ஷலும் இதனைக் குழந்தைகளின் பிரச்சனையாகக் காணவில்லை. யூதேய-கிறிஸ்தவ-மேற்கத்திய பண்பாட்டின் ஆழமான பிரச்சனையாகக் கருதுகின்றனர்:
ஒற்றை எளிய உண்மைக்கான விருப்பம் இந்த குழந்தைகளின் பிரச்சனை மட்டுமல்ல. மோஸஸ் சினாய் மலையிலிருந்து ஒற்றைக் கடவுள் எனும் கோட்பாடுடன் வந்த காலந்தொட்டு மேற்கு பலதெய்வ வழிபாட்டை அதன் அனைத்து விதங்களிலும் நிராகரித்து வருகிறது. மோஸஸின் பொறாமை கொண்ட தேவன் தனது வழிபாட்டையும் தனக்குக் கீழ்ப்படிதலையும் பிற தெய்வங்களை நிராகரிப்பதன் மூலமே ஏற்றுக்கொள்ளும் தேவன். இந்த தேவனின் கதையே அவனது மக்களுக்கு “உண்மை”க் கதை. (the true story), அவனது கட்டளைகளே உண்மையான கட்டளைகள். அதனை ஏற்பவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள். ஏற்காதவர்கள் வெளியாட்கள் (outsiders:அல்லது விவிலிய மொழியில் புறசாதியார்) .
கிறிஸ்தவமும் இஸ்லாமும் இதே ஏக-தெய்வக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. அதே சமயம் இந்த ஒரே உண்மை மார்க்கம், ஒரே வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் எனத் தங்களைத் தாமே பிரகடனப்படுத்துவதில் அவை இன்னும் பிடிவாதமான நிலைப்பாட்டை எடுக்கின்றன. கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தம் உண்மையை ஏற்காதவர்கள் வெளியாட்களைக் காட்டிலும் கீழானவர்கள். அவர்கள் பாகனியர்கள் அல்லது அவிசுவாசிகள்; …. மோசஸும் பிளேட்டோ வுமே நம் மேற்கத்திய சம்பிரதாயத்தின், ஒற்றைத் தேடலின், மருண்மை-வெறுப்பின் இரு தூண்கள். அறியப்பட முடிந்த ஒரு அடிப்படை ஆதார ஒரே உண்மை குறித்த அவர்களின் (மோஸஸும் பிளேட்டோ வினுடையதுமான) பார்வையே கிறிஸ்தவ ஆன்மிகத்தின் அடிப்படையாயிற்று.
நவீனத்துவம் மோஸஸின் ஒற்றைக் கடவுள் என்பதை நீக்கி அந்த இடத்தில் ஒற்றை அறிதல் என்பதைப் பிரதிஷ்டை செய்தது …. நாம் இந்த “ஒரே தேவன்” அல்லது ஒற்றை உண்மை எனும் கோட்பாட்டின் ஆதிக்கத்தில் இருந்தமையால் மேற்கத்திய சமுதாயத்தில் சிலுவைப்போர்களும், புனித விசாரணை எரித்தல்களும், கில்லட்டின் தலைவெட்டுக்களும், ஹோலேகாஸ்ட் இன அழிப்புகளும் சாத்தியமாயிற்று.
மேற்கத்திய காலனிய ஆதிக்கம் பிற பண்பாடுகளிலும் இதே ஒற்றை ஆக்கத்தை செய்ய முயற்சித்தது. ஆனால் ஹிந்து தர்மத்துக்கு ஒற்றை அதிகாரி உண்டா? போப் போல? அல்லது விவிலியத்தின் மோசேனிய கட்டளைகள்/சட்டங்கள் போல சட்டங்கள் உண்டா? இந்த கேள்வி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி ஆகும். சில ஹிந்துக்களுக்கே இத்தகைய ஓர் அமைப்பு ஹிந்துக்களுக்கு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கூட உண்டு.
17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்த போது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் மக்கள் குழுவுக்கு மக்கள் குழு சட்டங்கள் மாறிக்கொண்டே இருப்பதைக் கண்டார்கள். ஒற்றைச் சட்டத்துக்குப் பழக்கப்பட்ட அவர்களுக்கு இது பெரிய எரிச்சலை உண்டு பண்ணியது. இந்தப் பன்மையை புரோகிதத் தந்திரமாகப் பார்த்தார்கள். ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சியாளர்களாக மாற ஆரம்பித்த 18 ஆம் நூற்றாண்டில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட ஹிந்துக்கள் அனைவருக்கும் ஒற்றையான ஒரு ஹிந்து சட்டத்தை அளிக்க ஆலோசனைகளும் முயற்சிகளும் எடுத்தார்கள். இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகித்தவர் வில்லியம் ஜோன்ஸ் ஆவார்.
உறைந்துவிடாமல் பரிணமித்தபடி இருக்கும் ஹிந்து சட்டதிட்டங்கள் இவருக்கு எரிச்சல் ஏற்படுத்தின. ஜோன்ஸ் எழுதினார்:
“தங்கள் இஷ்டப்படியும் சரியான காலகதியிலும் ஹிந்து சட்டங்களை உருவாக்கியபடியே இருக்கும் இந்த பண்டிதர்களின் தயவில் நாம் காலந்தள்ள முடியாது. தங்களால் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு சாஸ்திர ரீதியாக தீர்வு காணமுடியாத போது இவர்களே சாஸ்திர விதிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.” (I can no longer bear to be at the mercy of our pandits who deal out Hindu law as they please, and make it at reasonable rates, when. they cannot find it ready made)
”இத்தகைய ஒற்றை சாஸ்திர விதிகளால் ஒன்றாகக் கட்டப்பட்ட சமுதாயமே ஹிந்துக்கள்; அதுதான் பிராம்மணீய ஹிந்து மதம்” என்கிற ஐதீகத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே ஆவர். ஆனால் ஹிந்து சட்ட திட்டங்களோ குவித்தன்மையற்றவை. கலாச்சார ஆன்மிக சரடுகளால் பிணைக்கப் படுபவையே அல்லாமல் மதக்கோட்பாட்டு அடிப்படையிலான கறாரான விதிகளால் திணிக்கப் படுபவை அல்ல. இத்தகைய அதிகம் அறியப்படாத வரலாற்றுப் போக்குகளை விவரிக்கும் பெண்ணியலாளர் மது கிஷ்வர் ”புனிதச்சட்டங்களைக் காட்டிலும் அந்தந்த வட்டார வழக்கிலிருக்கும் சம்பிரதாயங்கள் முக்கியமானவையாகக் கருதப்பட வேண்டும்” என நாரத ஸ்மிருதி கூறுவதையும், மனு ஸ்மிருதியே ”சட்டங்கள் திணிக்கப்படலாகாது” எனச் சொல்வதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் மோஸானிய சட்டகத்துக்குள் அல்லது ’ஏக-இறை’ சட்டகத்துக்குள் இந்திய சட்டத்தைத் தொகுத்தளிப்பதுடன் இந்தியப் பன்மையை திரிபாகவும் வீழ்ச்சியாகவும் பார்க்கும் பார்வையே வரலாற்றுப் பார்வையாக முன்வைக்கப் பட்டது. ஜேம்ஸ் மில் ”பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு” (The History of British India) என்ற தன்னுடைய புகழ்பெற்ற நூலை 1817 இல் வெளியிட்டார் (1857க்கு பிறகுதான் இந்தியா முழுமையாக பிரிட்டிஷ் காலனியாகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்). இந்நூலில் இவர் மனு தர்மசாஸ்திரம் என்பது மிக உயர்ந்த மானுடர்களின் மிகச்சிறந்த சாதனை என குறிப்பிடுகிறார். அத்துடன் பின்னாட்களில் மனு ஸ்மிருதிப்படி நடக்காததால் வீழ்ச்சி ஏற்பட்டது என்று இந்திய ஐதீகங்களில் கூறப்படுவதாகச் சொல்கிறார்.
பிற இந்தியவியலாளர்கள் இத்தகைய வழக்கு எதுவும் இந்திய மரபில் இல்லை என்று சொன்னது அரங்கேறவில்லை. ஏனெனில் இதற்குக் காலனிய தேவைகள் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் படித்த தலைமுறைகள் (இந்தியர்கள்-ஐரோப்பியர்கள்) மில்லின் நூலையே வரலாறாக நம்பிப் படித்தனர். மார்க்ஸிய பெண்ணியலாளரும் சமூகவியலாளருமான ஹிமானி பானர்ஜி மில்லின் இந்த நூல் உருவாக்கிய சமுதாய-வரலாற்றுப்பார்வை தாக்கம் குறித்து கூறுகிறார்:
ஐரோப்பா போலல்லாமல் “ஆசிய” அரசு அமைப்புக்களும் பொருளாதாரங்களும் மிருகத்தனமான சக்தியாலும் மூடநம்பிக்கையாலும் சர்வாதிகாரத்தாலும் சம்பிரதாயங்களாலும் நடத்தப்படுபவையாக மில் ஒரு பிம்பத்தை உருவாக்கினார். அரசனைக் குறித்த விவரணங்களையும் பல வரலாற்றுக்காலங்களில் யதார்த்தமாக நிகழ்பவற்றையும் ஒன்றோடொன்று மிகைப்பட இணைத்துக் காட்டுவதன் மூலம் இதனை மில் செய்தார். மனு சொல்லும் விஷயங்களை அப்படியே நேரடி பொருள் கொள்வதன் மூலமும் அதற்கிணையான ஐரோப்பிய அரச சம்பிரதாயங்களின் விவரணங்களை ஒப்பிடாமலும் (உதாரணமாக ஹோப்பிஸின் லெவியாதன்) மில் ஒரு ராட்சசத்தனமான சர்வாதிகார ஆட்சி அமைப்பே இந்தியாவுக்கு உகந்ததான ஆட்சி அமைப்பு எனும் கருத்தை உருவாக்கினார்.
மில்லின் இந்த உருவகத்தின் அடிப்படையிலேயே ஹிந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் பின்னாட்களிலும் இன்றுவரையிலும் மிஷினரிகளாலும், மற்றவர்களாலும் நிகழ்த்தப் பட்டு வருகின்றன.
ஹிந்துப் பண்பாட்டிலும் தருமத்திலும் அதிகாரித்துவம் என்பது தொடர்ந்து பரிணமித்து வரும் ஒரு விஷயமாகும். உறைந்து போன விஷயமன்று. ஆபிரகாமியப் பண்பாட்டில் அனைத்துச் சட்டங்களுக்கும் அடிப்படையாகப் பத்து கட்டளைகள் இருப்பது போல பாரதப் பண்பாட்டில் எவ்விதக் கட்டளைகளும் இல்லை. அத்தகைய கட்டளையிடுதல்கள் உள்ளார்ந்த எதிர்ப்புகளை சந்தித்துள்ளன. “நான் உன் பிதா என்னையே நீ வணங்க வேண்டும்” என்கிற கட்டளையைப் பிறப்பித்த இரணியன் ஒரு அரக்கனாகவே ஹிந்து ஐதீகத்தில் அறியப்படுகிறான். இரணியன் முன் நின்று பேசும் பிரகலாதன் முதல் அவுரங்கசீப் முன் நின்று “தலையைத்தான் இழந்தேன் என் தர்மத்தை அல்ல” எனச் சொல்லும் குரு தேஜ்பகதூர் வரை, திணிக்கப்படும் மதக் கோட்பாடுகளுக்கான எதிர்ப்பையும், வழிபாட்டு சுதந்திரத்துக்கான உரிமைக் குரலையும் நாம் நம் பண்பாட்டில் தொடர்ந்து காணமுடியும்.
இத்தகைய பண்பாட்டுச் சூழலில் எவ்வாறு சமுதாய நீதிகள் உருவாக்கப்படுகின்றன? “வேதத்தைக் கேட்டால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றும் தண்டனை” போன்ற தண்டனைகள் எவ்வாறு ஏற்பட்டன? இதனைச் சற்றே சிந்தித்துப் பார்த்தால் பாரத பொது பிரக்ஞை இத்தகைய மனிதத் தன்மையற்ற சட்டங்களை ஒருவித “கண்காட்சி வஸ்துவாக” பார்த்ததே ஒழிய அவற்றை நடைமுறைச் சட்டங்களாக ஆக்கிடவில்லை என்பது புரியும்.
துளசிதாசரும் கம்பரும் ஏன் எண்ணற்ற ராம பக்தர்களும் ஸ்ரீராமனின் சம்பூக வதத்தைக் குறித்து எதுவும் பேசுவதில்லை. ஸ்ரீராமன் அந்தணனான ராவணனை வதைத்ததே நாடெங்கிலும் பெரும் விஷயமாக பாடப்படுகிறதே ஒழிய சூத்திரனான சம்பூகனைக் கொன்றது எவ்வித முக்கியத்துவமும் பெறவில்லை. கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் அந்த நிகழ்வை தூசி தட்டி ராமனை ஒரு குற்றவாளியாகக் காட்ட பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட காலம் வரை. அந்த நிகழ்ச்சி வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கை என்றே கருதப்படும் உத்தர காண்டத்தில்தான் உள்ளது. சுருக்கமாக சொன்னால் ”மரியாதா புருஷோத்தமன்” வாழ்வாங்கு வாழ்ந்தவனேயெனினும் ஸ்ரீராமனின் அனைத்து செயல்களையும் சரியென எடுத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தை பாரத மனம் என்றைக்கும் உணர்ந்ததில்லை. அது எந்த புனிதத்தையும் விவாதத்துக்கு உள்ளாக்கத் தயங்கியதில்லை. அதே நேரத்தில் புனிதத்தின் மகத்துவத்தையும் தனிமனித-சமுதாய-ஆன்மிக தேவையையும் பாரத பிரக்ஞை அறிந்திருந்தது. எனவே அது அத்தேவைகளின் அடிப்படையில் புனிதங்களை மீள்-உருவாக்கியபடியே இருந்தது/இருக்கிறது. இலக்கிய இலக்கணங்கள் என்றல்ல, சமுதாய பிரச்சனைகளுக்கும் கூட - மிக அண்மைக்காலம் வரை அப்படியே.
காஞ்சி காமகோடி பீடத்தின் 58-ஆவது ஆச்சாரியராகக் கருதப்படும் ஆத்மபோதர் அவரது வடநாட்டு யாத்திரையின் போது தனது சீடரான புருஷோத்தமன் என்பவருக்கு போதேந்திர சரஸ்வதி என துறவுத்திருநாமம் அளித்தார்; அவரை காஞ்சிபுரம் செல்லவும், போகும் வழியில் பூரி ஜெகந்நாத தலத்தில் லட்சுமி ஸ்ரீதரர் என்பவர் வசமிருக்கும் “பகவன் நாம கௌமுதி” என்ற நூலைப் பெற்று அதன் அடிப்படையில் இலட்சம் சுலோகங்களை இயற்றவும் உத்தரவிட்டார். அவ்விடத்தை போதேந்திரர் அடைந்த போது அப்பெரியவர் காலமாகிவிட்டதாக அவரது மகனான ஜகன்னாத பண்டிதரின் மூலம் அறிந்தார். அப்போது அங்கு ஓர் நிகழ்ச்சி நடந்தது.
ஓர் தென்னிந்திய தம்பதிகள் அங்கு வந்திருந்தனர். இவர்கள் தீர்த்த யாத்திரை செல்லும் போது மனைவியை சில இஸ்லாமியர்கள் அபகரித்து சென்றுவிட்டனர். மனமுடைந்த கணவர் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் தற்செயலாக ஒரு ஊரில் நதிப்புறத்துக்கு செல்லுகையில் அங்கு இஸ்லாமிய மாதர் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு இஸ்லாமியப் பெண் இவரிடம் ஓடோடி வந்துவிட்டார். அப்பெண்மணி அபகரிக்கப்பட்ட இவரது மனைவியே ஆவார். அவர் தற்போது இஸ்லாமியரின் மனைவியாக வாழ்வதாகவும் தம்மை மீண்டும் ஏற்றுக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பிக்க உதவுமாறும் அவர் தம் கணவனைக் கேட்டுக்கொள்ள, இருவருமாக இணைந்து ஜகன்னாத தலத்திற்கு வந்திருந்தனர்.
மற்றொருவர் வீட்டில் அவருடைய மனைவியாகவே வாழ்ந்துவிட்ட இப்பெண்மணியை மீண்டும் மனைவியாக ஏற்க சாஸ்திரம் இடங்கொடுக்குமா என கேள்விகளுடன் இத்தம்பதிகள் மனம் வருந்தினர். இதனைக் கண்ட ஜகந்நாத பண்டிதர் தம்பதிகளுக்கு ஆறுதல் அளித்து இதற்கு பிராயசித்தமாக கோவில் புஷ்கரணியில் மூழ்கி ராமநாமத்தை உச்சரித்தாலே போதுமானது என்று கூறினார். அங்கு அப்போது வந்திருந்த போதேந்திர சரஸ்வதி இந்த பிராயசித்தத்துக்கு சாஸ்திர சம்மதம் உண்டா என வினவ பண்டிதர் தமது தந்தை எழுதிய “பகவன் நாம கௌமுதி” என்ற நூலைக் கொடுத்தார். அப்பெண்மணி அவ்வாறே புஷ்கரணியில் மூழ்கி ராமநாமத்தை சொல்லி கணவனுடன் இணைந்து தீர்த்த யாத்திரையை முடித்து தென்னகம் திரும்பினார். (இதில் உபரியாக, ஜகன்னாதர் அப்பெண்மணியிடம் மூன்று முறை ராமநாமத்தை சொல்லி நீரில் மூழ்கி எழச் சொன்னதாகவும் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது அன்னை “ஏன் இப்படி ராமன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய்? மூன்று முறை எதற்கு? இராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதுமே!” எனக் கூறியதாகவும் சொல்லுவர். பின்னாளில் மகாத்மா காந்தியின் சிஷ்யரான வினோபா ராம நாமத்தால் விடுதலை பெற்றுவிட முடியாத அளவு கொடூரமான பாவத்தை மனிதன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பாராம்.)
இந்நிகழ்ச்சி கூறும் பலவிஷயங்களை நாம் இப்போது கவனிக்கலாம்.
பெண்ணின் கற்பு/புனிதம் உடல் தொடர்பானது அன்று, உள்ளத் தூய்மையே முக்கியம். சாஸ்திரங்கள் கூறும் கடுமையான விதிமுறைகளை இறை நாமத்தாலும், மானுட இருதய சுத்தத்தாலும் நாம் எளிதாகக் கடந்துவிட முடியும். இவ்விதிகள் அனைத்துமே மீண்டும் மீண்டும் உருவாக்கப் படுபவையே ஆகும். இத்தகைய விதி உருவாக்கல்களுக்கு அதிகாரியாக ஒரு நல்ல மனிதர் போதும். அவர் தொன்மையானவராக இருக்கவேண்டியதில்லை. நம் சமகாலத்தவராகவே கூட இருக்கலாம் - இவையே அந்த விஷயங்கள்.
பிரிவினைக் கலவரங்களின் போது முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்ட ஹிந்து மாதர்களை ராமநாமம் சொல்லி ஹிந்து வீட்டார்கள் சேர்த்துக்கொள்ள வேண்டுமென காந்திஜி கூறியதையும் இங்கு கவனிக்கவேண்டும். தனது மனைவியையே மக்களின் சொல் கேட்டு தியாகம் செய்த ராமனின் பெயர் அத்தகைய விஷயம் தொடர்பான சமுதாய மனவீழ்ச்சிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
ராமன் கருவுற்றிருந்த தன் மனைவியைக் காட்டில் விட்டது பொதுவாக பெண்ணியவாதிகளால் பெரும் பழியாகக் கூறப்படும். ராமனுக்கு சீதையின் தூய்மையில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க ராமன் ஏன் அவ்வாறு செய்தார்? அது மக்களின் மனநிலைக்கு அவர் கொடுத்த தண்டனை. இன்றைக்கு அதே சமுதாயம் அதே ராமனின் பெயரால் பெண்மைக்கு ஏற்பட்ட தீங்கினை துடைப்பது ஒருவிதத்தில் பாரத மக்கள் (ராமன் அல்ல) சீதைக்குச் செய்த அநியாயத்துக்கு திரும்பச்செய்யும் பிராயசித்தம்.
ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
எனவே சாஸ்திரத்தின் பெயரால் தீண்டாமையும், பெண்ணடிமையும், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், வழிபாட்டுரிமைத் தடுப்புகளும் இல்லாத ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவதும் ஒவ்வொரு ஹிந்துவின் சாஸ்திர சம்பிரதாய கடமையாகும். அதிலிருந்தே தொடங்குகிறது ஹிந்து தேசத்தின் மகோன்னத மீள்உருவாக்கம். அதுதான் ஹிந்து ராஷ்டிரத்தின் பிள்ளையார் சுழி.
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
ஓம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக