Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 23, 2009

ஒமாம் புலியூர் சிவன் கோயில் தலவிருட்சம் ஒமை (உகா மரம்)

மையின் வேறு பெயராக பாங்கர், உகா என அழைக்கப்படுகிறது. இது இந்தியா, இலங்கையில் பயிராகும் மர வகுப்பினைச் சேர்ந்தது.

இதன் இலை, பட்டை, பழம், விதை ஆகியவை மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இலையும், பட்டையும் துவர்ப்புத் சுவையுடன், வெப்பத்தன்மை கொண்டது. இதன் பழம் இனிப்புச் சுவையும், மலமிளக்கும் தன்மையும் கொண்டது. இதன் சாற்றைப் பிழிந்து சிறிது சர்க்கரையும், தண்ணீரும் சேர்த்துச் சாப்பிட இருமலைத் தணிக்கும். குளிர்ச்சி தரும். இச்சாற்றை அளவுடன் கொடுத்தால் பேதி உண்டாகும்.

விதை : முக்குற்ற நோய்களைப் போக்கும். இதனைப் பொடியாகச் செய்து மருந்தாகத் தருவர்.

உவா (ELEPHANT APPLE)
இம்மரம் ஒரு அழகு வாய்ந்த மரமாகும். இதன் பாகங்கள் அனைத்து உபயோகங்களுக்கும் ஏற்றது. சாப்பிடுவதற்கு ஏற்ற கனி தருகிறது. உடல் வெப்பத்தைத் தணித்து நரம்பு மண்டலத்தைச் சீர்படுத்தி, களைப்பை நீக்கிவிடும். சக்தி தரும் பழரசம், பட்டுப்புழு வளர்ப்புக்காகத் தழையைத் தருகிறது.

வால்மீகி முனிவரைக் கவர்ந்த இப்பழம் ‘பாவ்யா’, எனவும் ‘சரித்திரா’ எனவும் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தாவர அறிவியல் பொய் ‘டில்லனியா இண்டிகா, (DILLENIA INDICA .L) என்பதாகும். ‘டில்லனியேசி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்து விளங்குகிறத. இம்மரம் இந்தியாவில் அதிகமாகக் காணப்படுவதால் ‘இண்டிகா’ என்ற இணைப்புப் பெயர் ஏற்பட்டுள்ளது.

அதிகமாக வெப்பப்பகுதிகளில் வளரும் இம்மரம் ஈரச்சூழல்மிக்க காடுகளிலும், ஓடைகள், ஆறுகளின் கரைகளிலும் காணலாம். மேற்கு தொடர்ச்சி மலை, தென் கர்நாடகத்துக்குத் தெற்கே அதிகமாகத் தென்படுகிறது. யானைகள் விரும்பி இதன் பழங்களை உண்ணும். பின்னர், இவ்விதைகளை காடுகளில் பரப்பிடும். மேலும், நீரில் மிதப்பதன் மூலம் பழங்கள் ஏனைய இடங்களிலும் பரந்துபட்டு முளைக்கும். சென்னையிலும் இம்மரம் உள்ளது.

செங்குத்தாக வளர்ந்து, நிறைய தழைகளுடன் வளரும் இம்மரம் சுமார் 10 முதல் 12 மீட்டர் வரை வளர்கிறது. கிளைகளின் நுனியில் பெரிய வெள்ளைப் பூக்கள் காணப்படும். நல்ல வாசனை கொண்டது. ஜுன், ஜுலை மாதங்களில்தான் பூக்கும்.

பொதுவான பயன்கள்
‘தாவர உலகில் மிகப் பிரமாதமாக காட்சியளிக்கும் பூக்களையும், காய்களையும் கொண்டது’ டில்லனியா என்பது தாவர இயலார் கூறும் அற்புதச் செய்தி.

பழம் : இதனைச் சமைத்தும் சாப்பிடலாம். ஊறுகாயாகவும் செய்து சாப்பிடலாம். கனியில் புளிப்புத் தன்மை உள்ளது. இதனைப் பானமாகவும், ஜெல்லி போன்றும் தயாரித்து வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூக்கள் : வடகிழக்கில் வாழும் ஆதிவாசிகள் இப் பூக்களைச் சமைத்து உண்கின்றனர்.

இலை : கால்நடைகளுக்குத் தீவனமாகிறது.

மரம் : உறுதியானது, நீரில் நீடித்து உழைக்கக்கூடியது. துப்பாக்கிக் கட்டைகள், கட்டிட வேலைகள், கடைசல் பணிகள், எட்டுப் பலகைகள் செய்ய ஏற்றது.

சித்த மருத்துவப் பயன்கள்
பழம் : ஆயுர்வேதத்தில் இதற்கு நல்ல பண்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது உடல் வெப்ப நிலையைச் சீர்படுத்தவும், நரம்பு மண்டலத்தைச் சீராக்கவும், களைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

* அஸ்ஸாமில் உள்ள ஒரு பகுதியில் ஆதிவாசிகள் மெலிந்தவர்களுக்கு ரசமாக்கிக் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

* காய்ச்சல், இருமல் உள்ளவர்க்கு பழச்சாறுடன் தண்ணீரையும், சர்க்கரைையுயம் கலந்து கொடுப்பது உண்டு. மலமிளக்கும் தன்மையும், அதிகமாகச் சாப்பிட்டால் பெரும் பேதியை உண்டாக்கும் குணமும் உள்ளது.

பட்டை : பட்டையை நசுக்கி, மூட்டு வலிகளுக்கு வைத்துக் கட்டலாம்.

* இது கொஞ்சம் சூடுள்ளது என்றும் உலர்ந்ததனால் கார்ப்புள்ளதாக இருக்கும் என்றும், காய்ச்சல்காரர்களுக்கு நோய் நீங்கிட கஷாயம் போட்டுக் கொடுப்பார்கள்.

இதன் பச்சை வேர்ப்பட்டையை இடித்துக் கட்டினால் கொப்புளம் போக்கும் மருந்தாக உபயோகப்படுகிறது. கொஞ்சம் வாசனையும், ருசி உள்ளதாகவும் இருக்கும்.

தழை : அண்மையில் இலைகளிலிருந்து ஆல்கஹாலில் கரையும் சத்தை சுண்டெலிகளில் செலுத்தி ஆராய்ச்சி செய்த பொழுது, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சத்து ஒன்று இருப்பதாக அறிந்துள்ளனர்.

உபதொழில் உபயோகம்
டஸ்ஸார் இன பட்டுப் புழுவும், அட்லாஸ் இன பட்டுப்புழுவும் இதன் இலையை நன்றாகச் சாப்பிட்டு வளரும். இதன் மூலம் பட்டு நூல் பெறலாம்.

பிறசெய்திகள்
தோட்டங்களில் காற்றுத் தடுப்பு மரமாகவும், நகரங்களில் பெரிய அலுவலக வளாகங்களில், வீடுகளில் அழகுக்காகவும் வளர்க்கலாம்.

இதில் மற்றொரு இனம் உள்ளது. அதை ‘டில்லினியா பெண்டா கைனா’ (DILLENIA PENTAGANA ROXB) என அழைப்பர். இதன் இலைகள் சுமார் 1 மீட்டர் வரை இருக்கும். ஆனால் பழமும், பூவும் சிறியது. மரத்தின் வடிவம் மட்டும் பெரியது. இங்கு கூறியுள்ள உவா மரத்தின் பயன்கள் அனைத்தும் இதற்குப் பொருந்தும்.

மற்றும் இதன் இலைகளை கூரை அமைக்கவும் உபயோகப்படுத்துகின்றனர். உப்புத்தாளாகவும், மரத்திலிருந்து ஒருவகை நாரும் எடுக்கின்றனர். ஒரு கிலோ எடையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைகள் உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்
ஒமாம்புலியூர் சிவன் கோயில் தலவிருட்சமாக ஒமை எனப்படும் உகாமரம் வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்
குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றுள்ள ‘பாங்கர்’ என்பதற்கு ‘ஒமை’ என்று உரை கூறிய நச்சினார்க்கினியர், கலித்தொகையில் வரும் ‘பாங்கர்’ என்பதற்குப் ‘பாங்க் கொடி’ என்று உரை வகுத்தார். பாங்கர் என்ற பாலை நிலத்து மரத்துக்கு ‘ஒமை’ என்றும், பாங்கர் என்ற பெயரில் ஒரு கொடியும் (முல்லைக் கொடியுடன் இணைத்து பேசப்படுவது) உண்டு என்றும் எண்ண இடமுள்ளது.

‘பாங்கர் மரா அம் பல்பூந் தணக்கம்’ என்று குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிட்டடுள்ளார். இதற்கு ‘உவா’ என்று பெயர் என “காம்பிள்” குறிப்பிட்டுள்ளார். ஆனால், கலைக்களஞ்சியம் இதனை ‘உகா’ என்று கூறுகிறது.

இம்மரங்கள் வறண்ட பாலை நிலங்களில் காடுபோல வளரும். இதன் அடிமரத்தை ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றனர். இதன் பட்டையை உரித்து யானைகள் உண்ணும் எனவும் அறியப்பட்டுள்ளது.

“குல்லையும், குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்” என கலித்தொகையில் குறித்துள்ளனர். அதாவது, இதன் மலரைக் குல்லை, குருந்து, கோடல் முதலிய மலைப்புற மலர்களுடன் சேர்த்துக் கட்டி, கண்ணியாக அணிந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.

இம்மரத்தைக் கோயில் தோட்டங்களில் வளர்ப்பார்கள் எனவும் சங்க இலக்கியக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1 கருத்து:

Genius சொன்னது…

ukaa maram photo vai kaanpiththaal nallathu