Vaalga
ஞாயிறு, நவம்பர் 29, 2009
வர்மத்தின் மர்மங்கள்
மனித உடம்பினுள் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் மூளையின் நரம்பு மண்டலத்திலிருந்து இயக்கப்படுகிறது. நரம்பு மண்டலத்தின் பிரதான சக்தியாக மூளை விளங்குகிறது. மூளையின் செயல்பாடுகள் அனைத்தும் மனித உடம்பின் ஆதாரங்களை பொறுத்தே அமைகிறது. இந்த ஆதாரங்கள் ஒடுங்கும் இடம்தான் தனஞ்செயன் என்ற வாயு அமைந்திருக்கும் பகுதியாகும்.
இந்த ஆதாரங்கள் சரசுவாசம் செய்யும்போது ஒரே நேர்க்கோட்டில் மூலாதார சக்தியை மேல் எழும்பி தனஞ்செயனை அடையும்போது உச்சந்தலை சுவாசம் திறந்து கொள்கிறது. அப்போது நெற்றி புருவங்களிடையே திலர்த காலமாகிய வர்மப் புள்ளியில் ஒளிப் பிழம்பாக தெரியவரும் என்பதை கடந்த இதழ்களில் கண்டோம். அதுதான் சித்தர்கள் கூறும் ஞான ஒளியாகும்.
ஆதாரங்கள் தான் மனித செயல்பாடுகளுக்கு முக்கிய காரணமாகின்றன. ஆதாரங்கள் தான் நரம்பு மண்டலத்தை தூண்டி சீராக செயல்பட வைக்கிறது.
ஆதாரங்களின் நலமே உடலின் நலம்.
ஆதாரங்களின் செயல்பாடு மாறும்போது உடலும், மனமும் பாதிக்கப் படுகிறது. ஆதாரங்கள் சீராக செயல்பட்டால்தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். மன எண்ணங்கள் ஒழுங்கு பெறும். உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபம் மூன்றும் ஆதாரங்களின் செயல்பாட்டை பொறுத்தே அமைகிறது. தசவாயுக்களின் செயல்பாடுகளும் ஆதாரத்தை பொறுத்தே சீர்படுகிறது.
ஆதாரங்களை சீர்படுத்த சரசுவாசமே சிறந்த வழியாகும். சாதாரண நாசி வழிச்சுவாசம் மூலம் ஆதாரங்களை ஒருநிலைப்படுத்துவது கடினம். நாசிவழி சுவாசத்தில் ஆதாரங்களுக்கு பிராண வாயு முழுமையாக கிடைப்பது அரிது. இதனாலேயே பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக ஆதாரங்களுக்கு பிராண வாயு முழுமையாக கிடைத்தாலே நோய்கள் ஏதும் அணுகாது என்பது சித்தர்களின் கூற்று.
இதனால்தான் சித்தர்களும், முனிவர்களும், ஞானிகளும் தியானம் மூலம் சரசுவாசத்தை மேற்கொண்டு ஆதாரங்களை நிலைப்படுத்தினர்.
நாசி வழி சுவாசம், சரசுவாசம் என்ற மூச்சுக்களால்தான் ஆதாரங்களுக்குத் தேவையான பிராண வாயு கிடைக்கும். இந்த ஆதாரங்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.
மூலாதாரம்
காணவே மூலமஃதண்டம் போலக்
காரணமாய்த் திரிகோணமாக நிற்கும்
பூணவே மூன்றின் மேல் வளையமாகும்
புறம்பாக இதழதுவும் நாலுமாகும்
நாணவே நாற்கமலத் தட்ச ரங்கள்
நலமான வ-ச-ஷ ஸவ்வுமாகும்
மூணவே முக்கோணத் துள்ளொளியோங் கார
முயற்சியாய் அதற்குள்ளே அகரமாமே
தானான மகிமாமாவும் கரிமாவோடு
தங்கு மீ சத்துவமும் வசித்துவ மாகும்
பூனான பிரார்த்தி பிரா காம்யத்தோடு
புகழெட்டுத் தேவதையும் தளத்தில் நின்றே
ஏனான இதழாலே மூடிக்கொள்வார்
ஏற்றமாம் நந்தியைத் தான் கானொட்டாமல்
ஓங்கியே மாணிக்க ஒளிபோல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
(போகர் ஏழாயிரம் - முதலாமாயிரம்)
மூலமும் ஆதாரமும் ஒரே இடத்தில் ஒடுங்குவதால்தான் அதனை மூலாதாரம் என்கிறோம். மூலம் என்பது உடம்பில் உள்ள அனைத்து சக்திகளும் ஒடுங்கியிருக்கும் இடமாகும். அந்த இடத்திலிருந்துதான் ஆதாரங்களுக்கு சக்தி செல்கிறது.
கால் எலும்பு இரண்டும் கதிர் எலும்பும் கூடும் இடம் குய்யம். இந்த குய்யத்திற்கும் குதத்திற்கும் நடுவே குண்டலிவட்டமாய் அமைந்துள்ளதுதான் மூலாதாரம். அதாவது தொடை எலும்பு, முதுகெலும்பு இணையும் இடத்தில் தான் மூலாதாரம் அமைந்துள்ளது. அந்த குண்டலி வட்டத்திற்கு நடுவே திரிகோணமாக அமைந்திருக்கும். அதனுள் கடம்பப் பூ போல் நான்கு இதழ்களையுடைய பூவாக காணப்படும். அந்தப் பூவின் நடுவே ஓங்காரம் தெரியும். அங்குதான் ஓங்கார சக்தி ஒடுங்கியுள்ளது. இதையே மூலாதாரம் என்கின்றனர். இது மாணிக்க நிறம் கொண்டது.
முக்கோணம்
நான்கிதழ்கமலம்
மாணிக்க நிறம்
குண்டலி சக்தி
ஓங்காரம்
இதனை குண்டலினி சக்தி என்றும் அழைக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக